காவிரிப்பூம்பட்டினத்தை பூர்வீகமாக கொண்டிருந்தவர்கள், வணிகம் செய்து வந்த நகரத்தார். இவர்கள் ஆங்கிலேய ஆட்சி, சமண – ஜைன சமயக் கொள்கைகளின் தாக்கம், ஆழிப் பேரலையின் தாக்குதல் போன்ற பிரச்சினைகளால் பாண்டிய நாட்டிற்கு குடியேறினர். பாண்டிய அரசனும் அவர்கள் வசிக்க, மானியமாக ராமநாதபுரம் மாவட்டம் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளைக் கொடுத்தான்.
ஆரம்பத்தில் இளையாத்தன்குடியில் கூடி வாழ்ந்த இவர்கள், அங்கு ஆலயம் அமைத்தனர். பின்னர் அனைவரும் அருகில் உள்ள ஒன்பது ஊர்களுக்கு இடம்பெயர்ந்தனர். அங்கும் அவர்கள் ஆலயங்களை எழுப்பினர். அப்படி அவர்கள் எழுப்பியவைதான், இளையாத்தன்குடி, மாத்தூர், வைரவன் கோவில், நேமங்கோயில், இலுப்பைக்குடி, சூரக்குடி, வேலங்குடி, பிள்ளையார்பட்டி, இரணியூர் ஆகிய ஒன்பது ஊர்களில் உள்ள திருக்கோவில்கள்.
அந்த ஆலயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
மாத்தூர் கோவில்
காரைக்குடியிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மாத்தூர் கிராமம். இங்குள்ள ஐநூற்றீஸ்வரர் கோவில், 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இத்தல இறைவனின் திருநாமம், ‘அதோதீஸ்வரர்’ என்பதாகும். அம்பாளை பெரியநாயகி என்று அழைக்கிறார்கள்.
இங்கு சித்தர்களில் சிறந்தவரான கொங்கணர் தவமியற்றி இருக்கிறார். தன் விடாமுயற்சியால், பல பச்சிலை மூலிகைகளைக் கொண்டு, உலோகங்களில் கலந்து நல்ல பொன்னாக மாற்றினார். ஐநூறு மாத்துப் பொன்தான் செய்ய முடிந்தது.
கொங்கணருக்கு தாகம் உண்டானது. அவருக்கு இறைவன், மனித உருவில் வந்து தண்ணீர் தந்தார். அப்போது, அங்கிருந்த தங்கக் கலசம், மூலிகைச் சாறு ஆகியவற்றை காலால் தள்ளிவிட்டு மறைந்தார், ஈசன். எல்லாம் இறைவன் செயல் என்பதை உணர்ந்த கொங்கணா், தங்கம் செய்வதை நிறுத்திவிட்டு மீண்டும் தவமியற்ற ஆரம்பித்தார்.
ஐநூறு மாற்றுத் தங்கம் தயாரித்த இடம் என்பதால், இந்த ஊருக்கு ‘மாத்தூா்’ என்றும், இத்தல இறைவனுக்கு ‘ஐநூற்றீஸ்வரர்’ என்றும் பெயர் உண்டானது.
வயிரவன் பட்டி
காரைக்குடியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, வயிரவன்பட்டி. இங்கு வளர்ஒளிநாதர் ஆலயம் இருக்கிறது. இத்தல இறைவனின் பெயர், வளர்ஒளிநாதர். அம்பாள் – வடிவுடை நாயகியம்மை. இங்கு பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
அசுரர்கள், தேவர்களைத் துன்புறுத்தியபோது அவர்கள் அஞ்சி நடுங்கினர். அவர்களை இறைவன், இத்தலம் இருந்த இடத்திற்கு செல்ல அறிவுறுத்தினார். அதன்படி இங்கு வந்த தேவா்கள், வனத்திற்குள் வளரொளிநாதரும் அம்மை வடிவுடை நாயகியும் கோவில் கொண்டிருப்பதைக் கண்டு ஆனந்தம் அடைந்தனர்.
சிவமூா்த்தியின் அவதாரமே பைரவா். இங்கு பைரவருக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. நான்கு கைகளில் சூலம், கபாலம், டமருகம் மற்றும் நாகபாசத்துடன் அருள்பாலிக்கிறார். வள்ளியம்மை என்ற பெண்ணின் சிலையும் உள்ளது. இவர் வயிர வருக்குத் தொண்டு செய்தவர்.
இளையாத்தன்குடி
இங்குள்ள கயிலாசநாதர் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. அசுரர்களுக்குப் பயந்து தேவர்கள் அனைவரும், இந்தத் தலத்தில் வந்து தங்கினர். இங்கு மன நிம்மதி கிடைத்ததால், மணல் லிங்கம் அமைத்து வழிபட்டனர். தேவர்களின் இளைப்பை ஆற்றியதால், இத் தலம் ‘இளையாற்றங்குடி’ என்று பெயர் பெற்றது. அதுவே மருவி தற்போது, ‘இளையாத்தன்குடி’ என்று அழைக்கப்படுகிறது.
இங்குள்ள இறைவனின் திருநாமம் கயிலாசநாதர், அம்பாள் பெயர், நித்ய கல்யாணி. ஒரு சமயம் தஞ்சாவூரில், கோவிலுக்கு சொந்தமான வயலில் உழும் பணி நடந்தது. அப்போது மணலில் இருந்து லிங்கம் ஒன்று கிடைத்தது. அது இங்கே பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.
காரைக்குடியிலிருந்து 25 கிலோமீட்டா் தொலைவில் இளையாத்தன்குடி உள்ளது.
இலுப்பைக்குடி
காரைக்குடியிலிருந்து ஐந்து கிலோமீட்டா் தூரத்தில், இலுப்பைக்குடி உள்ளது. நகரத்தார் ஒருவர் கனவில் தோன்றிய சிவபெருமான், சூடாமணி ஒன்றை வழங்கி, சிவ வழிபாட்டை தொடங்கும்படி பணித்த தலம் இது.
இத்தல இறைவன் பெயர்- சுயம் பிரகாசா், தான்தோன்றீஸ்வரர் என்பதாகும். அம்பாள் – சவுந்திரநாயகி. நான்கு வேதங்களும் பூஜித்த தலம் இது. அம்பாள் நின்ற கோலத்தில் உள்ளார். ஐநூறு மாத்து தங்கம் உருவாக்கிய சில நாட்களுக்குப் பிறகு, மேலும் ஆயிரம் தங்கம் செய்ய கொங்கணருக்கு ஆசை பிறந்தது. அவரை இத்தலம் இருக்கும் இலுப்பை காட்டுக்கு வரவழைத்தார், சிவபெருமான். அங்கு ஒளிவீசும் கதிா்களிடையே சிவலிங்கம் தோன்றியது. அதைக் கண்ட கொங்கணர், “இந்த சுயம்பிரகாசரை விட்டு தங்கத்தின் மீது ஆசை வைத்தேனே” என்று நினைத்தார்.
நேமங்கோயில்
காரைக்குடியில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் நேமங்கோயில் உள்ளது. இங்குள்ள நேமநாதர் ஆலயம் கி.பி. 714-ல் கட்டப்பட்டது. ஐந்து நிலைகளில் அழகிய பெரிய கோபுரம் கொண்ட, இத்தலத்தின் இறைவன் பெயர் நேமநாதர். அம்பாள்- சவுந்திரநாயகி. இந்த ஆலயத்தின் நுழைவு வாசலில் பல ஆண்டுகளாக, தேன்கூடுகள் எண்ணிக்கையில் மிகுந்து காணப்படுகின்றன. ஜெயங்கொண்ட சோழ அரசரால் கட்டப்பட்ட ஆலயம் இது. இந்த ஊருக்கு நந்திபுரம், மதுநதிபுரம், ஜெயங்கொண்ட சோழபுரம் என்ற பெயா்களும் உண்டு.
இந்தக் கோவிலில் விநாயகர் பல வித கோலங்களில் காட்சி தருகிறார். நின்ற திருக்கோலத்தில் நடன கணபதியாகவும், வல்லப கணபதி, தசபுஜ கணபதியாக பத்துக்கரங்களில் ஆயுதம் ஏந்தி என பல வடிவங்களில் விநாயகரை தரிசிக்கலாம். முருகனும் ஆறுமுகங்களுடனும் பன்னிரு கரங்களுடனும் பல ஆயுதங்களைத் தாங்கி அருள்புரிகிறார். முருகனின் அருகில் சிவபெருமான், சதுர்புஜத்துடன் காணப்படுகிறார். பைரவருக்குத் தனி சன்னிதியில் இருக்கிறாா். இவருக்கு இரண்டு நாய்கள் வாகனமாக இருப்பது சிறப்பு.
சூரக்குடி
காரைக்குடியில் இருந்து பத்து கிலோமீட்டா் தொலைவில் உள்ளது, சூரக்குடி. இங்கு தேசிகநாதர் ஆலயம் காணப்படுகிறது. பழமை வாய்ந்த இந்த ஆலயம், நான்கு நிலை கொண்ட சிறிய கோபுரத்துடன் கம்பீரம் காட்டு கிறது. சுவாமியின் திருநாமம் – தேசிகநாதர், அம்பாள் திருநாமம் – ஆவுடைநாயகி.
கோவில் கருவறையில் லிங்கத் திருமேனியில், தேசிகநாதர் அருள்பாலிக்கிறார். லிங்கத்தின் மீது பிரம்ம ரேகைகள் காணப்படுகிறது. கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னிதி, இரண்டு சிம்மங்களை தாங்கியவாறு இருக்கிறது. அவர் அமர்ந்திருக்கும் கல்லால மரம், அதன் கிளைகள், அதிலுள்ள இலைகள், மலர்கள் என எல்லாப் பகுதிகளுமே ஒரே கல்லில் செதுக்கப்பட்டவையாகும்.
பிள்ளையார்பட்டி
கிழக்கே ஏழுநிலைகள் கொண்ட நெடிய கோபுரத்துடன் காணப்படுகிறது, பிள்ளையார்பட்டி ஆலயம். வடக்குத் திசையில் மூன்று நிலைகள் கொண்ட விநாயகர் கோபுரம் இருக்கிறது. மூலஸ்தானக் கருவறையில் இருகரங்களுடன் ஒருகரத்தில் லிங்கத்தையும், மற்றொரு கையால் இடுப்புக் கச்சையைப் பிடித்தப்படி இருக்கிறார். வலது பக்கம் துதிக்கை சுழன்று உள்ளது.
இது ஒரு குடவரைக் கோவில். இந்த ஆலயத்தில் நாம் காணும் ஒவ்வொரு சிலையையும், மலையைக் குடைந்தே செதுக்கியிருக்கிறார்கள். இங்கு திருவீசர் என்ற பெயரில் சிவபெருமான் அருள்பாலிக்கிறார். அம்பாளின் திருநாமம் வாடாமலர் மங்கை.
இரணியூர்
காரைக்குடியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இரணியூர் ஆட்கொண்ட நாதர் ஆலயம் இருக்கிறது. நரசிம்மராக உருவெடுத்து இரணியனை வதம் செய்தார், நரசிம்மர். ஆனால் அவனை வதம் செய்தபிறகும், நரசிம்மரின் கோபம் குறையவில்லை. இதையடுத்து சிவபெருமான், சரபேஸ்வரராக அவதாரம் எடுத்து திருமாலை ஆட்கொண்டாா். இத்தல இறைவனின் பெயர் ஆட்கொண்ட நாதா். அம்பாள் திருநாமம், சிவபுரந்தேவி. தவிர பெருமாளுக்கும், பத்ரகாளிக்கும் சன்னிதிகள் இருக்கின்றன.
அம்மன் சன்னிதி முன் நவ துர்க்கைகளும் தூண்களில் அணிவகுத்து நிற்கும் கோலம் அபூர்வக் காட்சியாகும். இது தவிர அஷ்ட லட்சுமிகளும் அணிவகுப்பது போல் அழகாக நிற்கிறார்கள். கோஷ்டங்களில் தட்சிணாமூர்த்தி, பைரவருக்கு தனிச் சன்னிதி உள்ளது. பைரவர் சன்னிதியை சுற்றி 28 வகையான பைரவர் சிலைகள் உள்ளன.