செல்வ வளம் தரும் அஷ்டதிக் பாலகர்களில், குபேரனும் ஒருவர். செல்வங்களுக்கு அதிபதியான லட்சுமியின், நவநிதிகளை வைத்திருந்து, பக்தர்களுக்கு பகிர்ந்தளிக்கும் பணியைச் செய்து வருகிறார். குபேரனை வேண்டினால், வறுமை நீங்கி செல்வம் சேரும். குபேரன் அருள்பாலிக்கும் ஆலயங்கள் சிலவற்றை இங்கே சிறிய குறிப்பாக பார்க்கலாம்.
குபேரன் நிதி பெற்ற தலம்
மதுரை வைகையாற்றின் வடபுறத்தில் அமைந்துள்ளது திருவாப்புடையார் கோவில். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் உப கோவிலாக திகழும் இந்த ஆலயம் பற்றி, திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பாடியுள்ளார். புண்ணியசேனன் என்பவன், ‘சகல செல்வங்களுக்கும் அதிபதியாக வேண்டும் எனில் என்ன செய்ய வேண்டும்’ என்று அகத்தியரிடம் கேட்டான். அதற்கு அவர், திருவாப்புடையார் எனும் இத்தல ஈசனை நோக்கி தவம் புரியச் சொன்னார். அதன்படியே தவம் செய்த புண்ணியசேனனுக்கு, நிதியை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. இதனால் ஆணவம் கொண்ட அவன், ஒருவரையும் மதிக்காமல் நடந்துகொண்டான். இதனால் அவனது ஒரு கண் பார்வையை பறித்தார், ஈசன். இதையடுத்து தவறை நினைத்து வருந்திய அவனுக்கு மீண்டும் நிதியை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. மேலும் குபேரன் என்ற பெயரையும் சிவபெருமான் சூட்டினார்.
திருவானைக்காவல்
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்தின் கிழக்கு கோபுரம் வழியாக உள்ளே நுழைந்ததும், குபேர லிங்கத்தை தரிசிக்கலாம். தன்னிடம் இருக்கும் சங்கநிதி, பதுமநிதிகள் நீங்காதிருக்க ஈசனை நோக்கி குபேரன் இங்கு தவமியற்றினான். ஈசனோ, ‘உன் நிதிகள் உன்னிடமே நிலைத்திருப்பது என்பது, மகாலட்சுமியின் அருளால்தான் சாத்தியம்’ என்று சொல்லி மறைந்தார். இதையடுத்து குபேரன் மகாலட்சுமியை நோக்கி தவமியற்றி திருமகளின் திருக்கரத்தால் சுயம்பு லிங்கத்தை பெற்று இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். இங்குள்ள குபேர லிங்கத்தை, சுக்ர ஓரையில் வெண் பட்டாடை சாத்தி வழிபாடு செய்தால், வறுமை நீங்கி செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
தஞ்சபுரீஸ்வரர்
எல்லோருக்கும் சகல ஐஸ்வரியங்களையும் தரும் குபேரன், இலங்கையில் ஆட்சி புரிந்துகொண்டிருந்தான். அவனிடம் இருந்து அந்த நாட்டை பறித்துக் கொண்டான், ராவணன். இதனால் தன் நாடு, நகரம், புஷ்பக விமானம் அனைத்தையும் இழந்து வடதிசை நோக்கி வந்து, சசிவனம் என்னும் வன்னிக்காட்டுப் பகுதிக்கு வந்தான். இங்கு சுயம்புவாக தோன்றிய அமலேஸ்வரர் என்ற பெயருடன் திகழ்ந்த தஞ்சபுரீஸ்வரரை வணங்கி, தொண்டு செய்து வந்தான். அவன் வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன், குபேரனுக்கு உமாதேவியுடன் மேற்கு நோக்கி காட்சி தந்தார். சர்வ லோகங்களும் அவனை வணங்கும் வகையில் செல்வம், சக்தி, நவநிதிகளும் தந்து அருள் புரிந்தார். இதனால் இந்த தலம் `சித்தி தரும் தலம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
12 குபரேன் சிற்பம்
செட்டிகுளம், சுமார் ஆயிரம் ஆண்டு களுக்கு முன் கடம்ப மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக இருந்தது. இங்கு சோழனும், பாண்டியனும் சேர்ந்து கட்டிய திருக்கோவில் உள்ளது. இறைவன் ஏகாம்பரேஸ்வரர் எனவும், இறைவி காமாட்சி அம்மை என்கிற திருப்பெயரோடும் அருள்பாலிக்கின்றனர். சுமார் 800 ஆண்டுகளைக் கடந்த இந்த ஆலயத்தில் இன்னொரு சிறப்பு அம்சமும் உண்டு. பொதுவாக ஆலயங்களில் குபேரனின் உருவம் சிற்பமாகவோ, சுதை வடிவிலோ, கல் திருமேனியாகவோ காணப்படுவது வழக்கம். ஆனால் இங்கே, கல் தூண்கள், தேவகோட்டம், கோபுர முகப்பு என மொத்தம் 12 இடங்களில் குபேரன் சிற்ப வடிவில் காட்சி தருகிறார். அதாவது மேஷம் முதலான 12 ராசிகளுக்கும் இந்த குபேரர்கள் அருள் வழங்குகிறார்கள். ஒவ்வொரு ராசிக்காரரும், அந்தந்த ராசி குபேரனை வணங்கி, தம் வறுமை நீங்கி செல்வச் செழிப்பு பெறுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவுடன் குறிப்பிட்ட குபேரனுக்கு ‘குபேர ஹோமம்’ நடத்துகின்றனர். இந்த 12 குபேரர்கள் தவிர, மகா குபேரனின் சிற்பமொன்றும் ஆலய கோபுரத்தின் உட் புறம் வடக்குத் திசையில் உள்ளது. திருச்சி, துறையூரிலிருந்து 22 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
செல்வத்தை மீட்ட குபேரன்
ராவணன் குபேரனோடு போரிட்டு குபேரனுடைய சங்கநிதி, பதுமநிதி என்கிற நிதிக் கலசங்களை எடுத்துச் சென்றான். இதனால் குபேரன் தன்னுடைய குபேர ஸ்தானத்தை இழந்தான். இத்தலத்தில் அருளும் தேவபுரீஸ்வரரை குபேரன் செந்தாமரை புஷ்பங்களால் அர்ச்சித்து வழிபட்டான். ஈசனின் அருளால் ராவணனிடம் இருந்து குபேர கலசங்களை திரும்ப பெற்று மீண்டும் குபேர பட்டத்தை பெற்றான். பெரும் பணக்காரர்களாக இருந்து மீண்டும் வறுமையில் தள்ளப்பட்டோர்கள் இத்தல நாயகரான தேவபுரீஸ்வரரையும், அம்மையான மதுரபாஷினியையும் வழிபட, செல்வச் செழிப்பு ஏற்படும். திருவாரூர் – நாகப்பட்டினம் சாலையிலுள்ள கீவளூர் எனும் தலத்திற்கு அருகே உள்ளது, தேவபுரீஸ்வர் கோவில்.
குபேர மகாலட்சுமி
ஈசனிடமிருந்து வரங்கள் பெற்ற குபேரன், தன் சக்தி வலிமையால் அழகாபுரி என்ற நகரை உருவாக்கினான். இந்த தலத்தில் வழிபடும் அனைவருக்கும் வேண்டும் வரங்கள் தந்து அருளுமாறு சிவபெருமானை வேண்டிக் கொண்டான். இக்கோவிலில் குபேரன், குபேர மகாலட்சுமி ஆகியோர் தனிச் சன்னிதியில் அருளுகின்றனர். தீபாவளியன்று நடைபெறும் மஹா குபேர ஹோமம் மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து கூடுவார்கள். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் தஞ்சபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
செல்வம் வழங்கும் ஆலயம்
சந்திரகுப்தன் என்பவன், தன்னிடமிருந்த சகல செல்வங்களையும் இழந்தான். மனம் நொந்து திசை தேசம் தெரியாது அலைந்தவன், கேடிலியப்பர் எனும் திருப்பெயரோடு அருளும் கீவளூர் தலத்தை அடைந்தான். திருக்கோவிலுக்குள் புகுந்து நந்தியம்பெருமானின் காலடியில் வீழ்ந்தான். கோவிலை மும்முறை வலம் வந்தான். ஈசன் கருணைக் கண்களால் அவனைக் கண்டார். இத்தலத்திலேயே நித்திய வாசம் புரியும் குபேரனுக்கு, சந்திரகுப்தனை அடையாளம் காட்டினார். சந்திரகுப்தன் இத்தலத்தில் தனிச் சன்னிதியில் அருளும் குபேரனை வணங்கி பெருஞ் செல்வம் பெற்றான். இத்தலம் நாகப்பட்டினம் – திருவாரூர் பாதையில் அமைந்துள்ளது.