உலகில் வாழும் மக்களை காத்தருள திருமால் எடுத்த அவதாரங்கள் 24 ஆகும். இதில் மிக முக்கியமான 10 அவதாரங்கள் தசாவதாரம் என அழைக்கப்படுகிறது. அவை மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி ஆகியவை ஆகும். இவை தவிர தத்தாத்தரேயர், வியாசர், கபிலர், தன்வந்திரி போன்ற பல்வேறு அவதாரங்களை திருமால் எடுத்து தன் அடியார்களை காத்து வருகிறார்.
ஒருமுறை துர்வாச முனிவரால் சாபத்திற்குள்ளானார் தேவேந்திரன். இதன் காரணமாக தேவேந்திரன் அனைத்து செல்வங்களையும் இழந்தார். இதனையடுத்து திருமாலின் அறிவுரையை ஏற்று தேவர்கள், அசுரர்கள் கூட்டு சேர்ந்து திருப்பாற் கடலை கடைந்தனர். அப்போது மிகக்கொடூரமான ஆலகால விஷம் தோன்றியது. இதனை சிவபெருமான் தன் கண்டத்தில் இருத்தி கொண்டார். எனவேதான் சிவபெருமான் நீலகண்டன் ஆனார்.
தொடர்ந்து திருப்பாற்கடலை கடைந்தபோது காமதேனு, கற்பகவிருட்சம், ஐராவதம் என்ற யானை உள்ளிட்ட பல புனிதமான பொருட்கள் வந்தன. இறுதியாக திருமாலே தன்வந்திரியாக அமிர்த கலசத்தினை ஏந்தியவாறு பாற்கடலில் இருந்து தோன்றினார். தேவேந்திரனும் சாகா மருந்தான அமிர்த கலசத்தினை பெற்றுக்கொண்டு தான் இழந்த அனைத்தையும் பெற்று தேவலோகம் சென்றார். இவ்வாறு திருப்பாற்கடலை கடைந்தபோதுதான் திருமால் தேவர்களை காக்கும் பொருட்டு தன்வந்திரியாக அவதாரம் எடுத்தார்.
திருமால் தன்வந்திரியாக அவதரித்த நாள் தீபாவளிக்கு 2 நாள் முந்தையதாக வரும் திரயோதசி நாளாகும். திருமாலின் 24 அவதாரங்களில் 17-வதாக தன்வந்திரி அவதாரம் உள்ளது. ரிக், யசூர், சாமம் மற்றும் அதர்வணம் போன்ற 4 வேதங்களையும் பிரம்மன் படைத்து அதன் சாரமாகிய ஆயுர் வேதத்தையும் படைத்தார். ஆயுர்வேதம் தழைத்தோங்கி வளர முதலில் பிரம்மன் சூரியபகவானுக்கு உபதேசித்தார். சூரிய பகவானிடமிருந்து ஆயுர்வேதத்தினை படித்த பதினாரு மாணவர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர் தன்வந்திரி ஆவார் என வைவர்த்த புராணம் கூறுகிறது.
இவரை வைத்திய ராஜா ஆதர்ச மருத்துவர் என்றும் புராணங்களில் குறிப்பிடப்படுகிறது. இவர் சுருண்டு காணப்படும் மென்மையான திருமுடி, செவ்வரியோடிய கண்கள், வெண்சங்குக் கோடுகளுடன் கூடிய கழுத்து, பரந்த மார்பு, பட்டுப் பீதாம்பம், மலர் மாலைகள் தரித்த ஆபரணத்திருமேனி, 4 கரங்களில் இரு திருக்கரங்களில் சங்கு சக்கரம், கீழ் இரு திருக்கரங்களில் ஒன்றில் அட்டை பூச்சியும், மற்றொன்றில் அமிர்த கலசத்தினையும் தாங்கி காட்சியருள்வார்.
தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் திருக்கோவிலில் பரிவார மூர்த்திகளில் ஒருவராக தன்வந்திரி பெருமாள் அருள்பாலிக்கிறார். இவருக்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றது. விரதம் இருந்து இந்த பூஜையின்போது தன்வந்திரி பகவானை மனமுருக பிரார்த்தனை செய்து பூஜையில் அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தம் உள்ளிட்ட பிரசாதத்தினை உட்கொண்டாலே நோய்களில் இருந்து நிவாரணம் பெறலாம் என்பது கண்கூடான உண்மையாகும். இந்த திருக்கோவிலில் பூஜையின்போது சந்தனாதி தைலத்தினை அமிர்த கலசத்தில் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டும்,
ஒவ்வொரு ‘அம்மாவாசை’ தினத்திலும் மாலை 7&9 மணிக்குள் நடக்கும் சிறப்பு அபிசேக ஆராதனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வேறு எங்கும் இல்லாத.தைல அபிசேகம், லேகிய நைவேத்தியம் உள்ள தனிப்பட்ட ஸ்தலம் இது. இந்த அபிசேகம் தனிநபர் பூஜையாக இல்லாமல் மக்கள் இணைந்து செய்யும் பூஜையாகவே நடத்தப்படுகிறது. சந்தனம் அபிசேகம் முடிந்து …..பிறகு தன்வந்திரி பகவான் கையில் உள்ள அமிர்த கலசம் மட்டும் துணியால் துடைக்கப்பட்டு அந்த கலசத்தில் மட்டும் ‘தைல அபிசேகம் ‘ செய்யப்பட்டு அந்த தைலம் முழுமையாக சேகரிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக, தீர்த்தமாக வழங்கப்படுகிறது. தைலத்தை நோயுள்ள இடங்களில் தேய்த்து கொள்ள/உள்ளே சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது.
(தைலம்-சந்தனாதி தைலம்).
கோவிலிலேயே சிறப்பாக செய்யப்பட்ட லேகியம் படையலாக (நைவேத்தியம்) வைக்கப்பட்டு சிறப்பான அலங்காரம் பூஜை புனஷ்காரங்கள் வெகு விமரிசையாக செய்யப்படுகிறது. லேகியம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. தைல அபிசேகம் கட்டணம் ரூ.70. செலுத்தி தைலம் வாங்கி அபிசேகத்திற்குக் கொடுப்பவர்களுக்கு சுமார் 50 மி.லி. தைலம் தீர்த்தமாக வழங்கப்படுகிறது. நோய்க்குத் தக்க உள், வெளிப் பிரயோகமாகப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது
லேகியம் நைவேத்தியத்திற்குரூ. 330 கொடுப்பவர்களுக்கு சுமார் 100 கிராம் அளவு லேகியம் பிரசாதமாக தனியாக வழங்கப்படுகிறது. .
பூஜையின் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு அர்ச்சகரால் அழகு தமிழ் மேற்கோள்காட்டி அற்புதமாக விளக்கப்படுகிறது.
“மருத்துவர் தலையாய கடமை நம்பிக்கை ஊட்டுதல்”என்பதற்கு இணங்க கோவில் அர்ச்சகர் தன்வந்திரி பகவான் பற்றி, சித்த மருத்துவம் பற்றி,தைலம்,லேகியம் பற்றி வெளிப்படையாக பெருமைபடப் பேசி பக்தர்களுக்கு நம்பிக்கை அளிப்பது அருமை. உடலின் வெளிப்புறத்தில் ஏற்படும் சுக வீனங்களுக்கு பூசிக்கொள்ள அமிர்த கலசத்தில் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்ட தைலத்தினையும், உடலின் உள்பகுதியில் ஏற்படும் சுகவீனங்களுக்கு பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட லேகியத்தினை உட்கொள்வதன் மூலம் உடல் நோய்களிடமிருந்து முழுநிவாரணம் பெறலாம்.
தீராத வியாதிகளை உடையோர் அமாவாசை தினத்தில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜையில் கலந்து கொண்டு லேகியம் மற்றும் சந்தனாதி தைலம் போன்றவற்றை கோவிலில் வாங்கி பட்டாச் சாரியார்களிடம் கொடுத்து அபிஷேகம் செய்து வீட்டிற்கு எடுத்துச் சென்று தினமும் பயன்படுத்தி நலம்பெற்று வருகின்றனர்.
அதுமட்டுமின்றி இந்த தைலம், லேகியம் போன்றவை தீர்த்தத்துடன் பூஜையில் கலந்து கொள்வோர் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. துளசி, ஆலிலை, அரசஇலை, வில்வ இலை, விஷ்ணுகிராந்தி, நாயுருவி, மரிக்கொழுந்து, பூர்ஜ இலை, தேவதாரு இலை போன்ற இலைகளையும், செவ்வந்திப்பூ, செண்பகம், பிச்சி, பாரிஜாதம், தாமரை, அரளி, புன்னகைப்பூ, மந்தாரை போன்ற பூக்களும் இவரது பூஜைக்கு உரியவை. மதங்களைக் கடந்து அனைத்து மதத்தினரின் நம்பிக்கை ஸ்தலமாம், தீராத நோய்களையும் தீர்த்து ரட்சிக்கும தாடிக்கொம்பு சௌந்திரராஜப் பெருமாள் கோவிலில் அமைந்துள்ள ‘தன்வந்திரி பகவான்’ தீராத நோய்களையும் தீர்க்கிறார் என்பது திண்ணம்.