பிள்ளையார் சுழி போட்டு காரியத்தைத் தொடங்கினால், எல்லையில்லாத நற்பலன்கள் கிடைக்கும் என்று முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள். ஆனைமுகன் சன்னிதி.. அது கொடுக்கும் நிம்மதி.. விநாயகரை வழிபடுவதற்கு நேரம் காலம் பார்க்க வேண்டியதில்லை, நினைத்த நேரத்தில் வழிபடலாம். அவரை ஆலயங்களுக்குச் சென்றும் வழிபடலாம்; ஆற்றங்கரையிலும், அரசமரத்தடியிலும், வேப்பமரத்தடியிலும், வன்னி மரத்தடியிலும், வில்வ மரத் தடியிலும் கூட கண்டு கைகூப்பி வழிபடலாம். இவையெல்லாம் விருத்தியம்சங்களை நமக்கு வழங்கும் விருட்ச விநாயகர் வழிபாடாகும். துளசி மாடத்திலும் கூட ஒரு விநாயகரை வைத்து வழிபடுவது நம் பண்பாடு.
உலகத்திலேயே பிள்ளையாருக்காக தனியாக அமைக்கப்பட்ட முதல் குடவரைக் கோவில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருத்தலமாகும். பிள்ளையார் பெயரிலேயே இந்த ஊர் அமைந்து இன்று கற்பக விருட்சமாக, கைநிறைய கனதனங்களை மக்களுக்கு வழங்கி வருகிறார், இந்த விநாயகர்.
திருச்சியில் உள்ள பிள்ளையார், மலையின் உச்சியில் இருக்கிறார். காரைக்குடி அருகில் கோட்டையூரில் சொற்கேட்ட விநாயகர் வீற்றிருக்கிறார். செல்வ விநாயகர், சித்தி விநாயகர், வரம் தரும் விநாயகர், வரசித்தி விநாயகர், வல்லப கணபதி, கள்ளவாரணப் பிள்ளையார், கன்னிமூல கணபதி, லட்சுமி கணபதி, சொர்ண கணபதி, கலங்காத கண்ட விநாயகர் என்று ஊருக்கு ஊர் உன்னதமாக ஏராளமான பெயர்களில் விநாயகர் காட்சியளிக்கிறார்.
சாணத்தில் செய்தாலும், சந்தனத்தில் செய்தாலும், மண்ணில் செய்தாலும் மனமிரங்கி வழிபட்டால், செய்யும் செயல்களிலே சிறப்பான வெற்றியை வரவழைத்து தருபவர் பிள்ளையார். மரங்களின் கீழ் உள்ள விநாயகர் எல்லாம் மகத்தான வெற்றியை வழங்குபவர்கள். இவர்களை வழிபட்டால் விருத்தியம்சம் கூடும். உடல் ஆரோக்கியம் சீராகும். இயற்கை காற்று நம் உடல்மீது படுவதால் மனதிற்கும் நல்லது, உடலுக்கும் நல்லது.
எந்த மரத்தடியில் விநாயகர் இருக்கின்றாரோ, அதற்கு உகந்த நாளில் நமக்குப் பொருத்தமான நட்சத்திரத்தில் சென்று அபிஷேகமும், வஸ்திர தானமும் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். நம்மால் முடிந்த நைவேத்தியம் படைத்தும் வழிபடலாம். வழிபாடு முடிந்தபிறகு நைவேத்தியத்தை முதலில் குழந்தை களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.
அரசமரத்தடி பிள்ளையாரை விரும்பிச் சென்று பணிபவர் களுக்கு, உடனடியாக நற்பலன் கிடைக்கும். கேதுவிற்குரிய நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களில் மோதகம் நைவேத்தியம் செய்து வழிபட்டால் தோஷங்கள் குறைந்து, சந்தோஷங்கள் வந்து சேரும்.
வேப்ப மரத்துப் பிள்ளையாரை விரும்பிச் சென்று பணிபவர் களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிபிறக்கும். ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் அகலும். பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் மிஞ்சும் விதத்தில் செல்வம் வந்து சேரும்.
வன்னி மரத்தடி விநாயகரை வழிபட்டால் எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறும். ஞாலம் போற்றும் வாழ்வமையும். நீங்கள் செய்யும் செயல்கள் செவ்வனே நிறைவுபெறும்.
நாவல் மரத்தடி விநாயகரை வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை கூடும். மகிழ மரத்தடி விநாயகர் மன அமைதியைக் கொடுப்பார். அருகம்புல் மாலையை ஆனைமுகனுக்கு சாற்றி வழிபட்டால் பேரும், புகழும் உங்களைத் தேடிவரும். அரசமரத்தடி விநாயகரை வழிபட்டால் ஆரோக்கியம் சீராகும். புத்திரப்பேறு கிட்டும்.
விநாயகர் வழிபாட்டிற்கு நாள், நட்சத்திரம் பார்க்க வேண்டியதில்லை. எந்த நேரமும், எங்கு வேண்டுமானா லும் நினைத்து வழிபடலாம். வெற்றிகள் வந்து சேரும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். கவலைகள் மாறும். கனதனம் சேரும்.
‘வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழ, துள்ளி ஓடும் தொடர் வினைகளே’ என்பது முன்னோர் வாக்கு. எனவே தும்பிக்கையானை நம்பிக்கையோடு விரதம் இருந்து வழிபட்டால் இன்பங்களை எதிர்கொள்ள இயலும்.