சஷ்டி கவசத்தை தினம் காலையிலும் மாலையிலும் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான். ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது. சஷ்டி என்பது அமாவாசை அல்லது பூர்ணிமாவுக்கும் அடுத்து ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும்.
இந்த எல்லா தோஷத்தைப்போக்கும் பெருமான் திரு முருகப்பெருமான். அவருக்கு உகந்த நாள் சஷ்டி, சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர். நாம் அந்தத் திருவடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது.
வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும். சஷ்டி அன்றும் செவ்வாய்க் கிழமையிலும் கந்தசஷ்டி கவசம் படிக்க பலன் அதிகமாகும். வம்ச விருத்தி, காரிய வெற்றிக்கு, சஷ்டியன்று காலையிலும், நோய் நிவர்த்தி, கிரகதோஷ நிவர்த்திக்கு செவ்வாய்க்கிழமை மாலையிலும் படிக்க விரைவில் பலன் கிடைக்கும்.
சஷ்டிக் கவசத்தை கந்தசஷ்டி விரத நாட்களில் ஒருநாளைக்கு 36 தடவை வீதம் ஆறு நாட்களில் 216 தடவை கூறினால் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பதும், நினைத்த காரியம் நடக்கும் என்பதும் ஐதீகம்.