விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். தற்போது கொரோனா வைரஸ் பரவுவதால் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வழக்கம்போல் கோவிலில் பூஜைகள் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் வைகாசி மாதத்திற்கான அமாவாசை பூஜை நேற்று நடைபெற்றது. இதையொட்டி இரவு 7 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட உற்சவ அம்மன், கோவிலின் உட்பிரகாரத்தில் உள்ள உஞ்சலில் அமர்த்தப்பட்டார். பின்பு அம்மன் தாலாட்டு பாடல்கள் பாடப்பட்டன. தொடர்ந்து இரவு 8 மணிக்கு அம்மனுக்கு அர்ச்சனையும், தீபாராதனையும் நடந்தது. ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி முழுவதும் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதனை பக்தர்கள் கண்டு, தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அறநிலைய துறை உதவி ஆணையர் ராமு, அறங்காவலர் குழு தலைவர் சரவணன் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜி பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.