வடலூர் சத்திய ஞான சபையில் 7 திரைகளை விலக்கி தைப்பூச ஜோதி தரிசனம் நாளை நடக்கிறது. இதில் காலை 6 மணி, 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் காலை 5.30 மணி என்று 6 காலம் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற இருக்கிறது.
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூரில் பிறந்தவர் வள்ளலார். பின்னர் இவர் சென்னை, கருங்குழி, வடலூர் ஆகிய பகுதிகளில் வசித்து வந்தார். 14 ஆண்டுகள் கருங்குழியில் தங்கிய வள்ளலார் திருவருட்பா எழுதினார்.
இறைவன் ஒளி வடிவானவன் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் வடலூரில் சத்திய ஞானசபையை வள்ளலார் நிறுவினார். மேலும் ஏழை, எளிய மக்களின் பசியை போக்க சத்தியஞான சபை அருகிலேயே தருமச்சாலையை நிறுவினார். அன்று முதல் இன்று வரை அந்த தருமச்சாலையில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் வள்ளலார் வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தில் சித்தி பெற்றார்.
இதைத்தொடர்ந்து மாதந்தோறும் பூசநட்சத்திரத்தன்று சத்திய ஞானசபையில் திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது. தை மாதத்தில் வரும் பூசநட்சத்திரத்தன்று தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 149-வது தைப்பூச திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி கடந்த 31-ந் தேதி முதல் 2-ந் தேதி வரை தருமச்சாலையில் மகா மந்திரம் ஓதுதல் நிகழ்ச்சியும், 3-ந் தேதி முதல் நேற்று வரை அருட்பா முற்றோதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தைப்பூச ஜோதி தரிசன விழா கொடியேற்றம் இன்று(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு அகவல் பாராயணம் பாடப்பட்டு, 7.30 மணிக்கு தருமச்சாலை சன்மார்க்க கொடி ஏற்றப்பட இருக்கிறது. இதை தொடர்ந்து வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையில் காலை 10 மணிக்கு கொடியேற்றப்படுகிறது. பின்னர் இரவில் தருமச்சாலை மேடையில் சன்மார்க்க சொற்பொழிவு நடக்கிறது.
நாளை (சனிக்கிழமை) காலை ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. இதில் காலை 6 மணி, 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் காலை 5.30 மணி என்று 6 காலம் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற இருக்கிறது.
முன்னதாக தை பூசத்தன்று காலை 10 மணிக்கு தருமச்சாலை மேடையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. நிகழ்ச்சிக்கு தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமை தாங்குகிறார். மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் முன்னிலை வகிக்க உள்ளார். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட அரசு உயர் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர். இதைத்தொடர்ந்து மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் சித்திப்பெற்ற மாளிகையில் 10-ந்தேதி (திங்கட்கிழமை) மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை திருஅறை தரிசனம் நடைபெற உள்ளது.
ஜோதி தரிசன விழாவில் தமிழகம் மட்டுமின்றி நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் வடலூரில் திரள்வார்கள். இதையொட்டி அங்கு சன்மார்க்க அன்பர்கள் தங்குவதற்கு தேவையான இட வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வநிலையம் செய்து வருகிறது. விழாவையொட்டி வடலூரில் நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள், ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளன.