முழுமுதற் கடவுள் எனப்போற்றப்படும் விநாயகப்பெருமான் பல அவதாரங்கள் எடுத்திருப்பதாக விநாயகர் புராணம் கூறுகிறது.
அவற்றில் எட்டு அவதாரங்கள் போர்க்கோல அவதாரங்கள் ஆகும். அந்த போர்க்கோலத்தின் போது ஒவ்வொரு திருப்பெயர் கொண்டு அசுரர்களை அழித்து மக்களை வாழவைத்திருக்கிறார்.அந்த வகையில் “வக்ர துண்டர்’ என்ற திருநாமத்துடன் “மத்சாசுரன்’ என்னும் அரக்கனை அழித்தார்.
“ஏகதந்தர்’, என்ற அவதாரத்தின் மூலம் “மதாசுரன்’ எனும் அரக்கனை வதம் செய்தார். “மஹோதரர்’, இந்த திருநாம அவதாரத்தின் வாயிலாக “மோகாசுரன்’ என்ற அரக்கனை அழித்தார். “கஜானனர்’ என்ற அவதாரத்தின் வாயிலாக “லோபாசுர’னை அரக்கனை தம் மூஞ்சுறு வாகனத்தைப் பயன்படுத்தி வதம் செய்தார்.
“லம்போதரர்’ என்னும் திருப்பெயரில் “க்ரோதாசுரன்’ என்ற அரக்கனை வீழ்த்தினார். “விகடர்’ என்ற அவதாரத்தில் “காமாசுர’னை வதைத்தார். “விக்னராஜர்’ என்ற திருநாமத்துடன் “மமதாசுர’னை அழித்தார். “தூம்ரவர்ணர்’ என்ற அவதாரப் பெயரில் “அபிமானாசுரன்’ என்பவனை வதம் செய்தார்.
காம, க்ரோத, லோப, மத, மாச்சர்ய, மான, பொறாமை, அபிமானம் என்னும் அரக்கர்களே இவ்வாறு வதம் செய்யப்பட்டவர்கள். அரக்கர்கள் வதம் செய்யப்பட்டாலும் அவர்களின் குணங்கள் மனிதர்களிடம் சேர்ந்து விட்டன. இந்த குணங்கள் எல்லாம் இப்பொழுது மனிதர்களை ஆட்டிப் படைக்கின்றன. இந்தக் குணங்கள் இருந்தால் அவைகள் அழிய, விநாயகப் பெருமான் அருள்புரிவார். விநாயகரை வழிபட மனம் தூய்மைபெறும். எதிலும் வெற்றி கிட்டும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.