மகாலக்ஷ்மியின் அம்சம் சில பொருட்களில் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அதில் கிராம்பு மற்றும் ஏலக்காய் போன்றவையும் அடங்கும். இதை சமையலுக்கு பயன்படுத்துவதால் சாதாரண பொருள் ஆகிவிடாது. கிராம்பும், ஏலமும் மூலிகை வகையை சார்ந்த தாவரங்கள். மஹாலக்ஷ்மி தேவிக்கு மிகவும் விருப்பமான பொருட்களில் இவை அடங்கும். இந்த இரண்டையும் வைத்து செல்வவளத்தை பெருக்குவது எப்படி என்பது பற்றி தான் இந்த பதிவில் காணவிருக்கிறோம்.
சிலருக்கு செல்வத்தின் மேல் பிரியம் அதிகளவு இருக்கும். இது எல்லாருக்கும் இருப்பது தான். யாருக்கு தான் செல்வந்தராக விருப்பமில்லாமால் இருக்கும்? ஆனால் தன் குடும்பத்தில் லக்ஷ்மி தேவி நிரந்தரமாக வாசம் செய்ய அவர்களுக்கு அதிகமாக ஆசை இருக்கும். லக்ஷ்மியை வசியம் செய்ய பலவிதமான வழிகள் உண்டு. பணம் சம்பாதிப்பது கடினமான காரியம் என்றால் அதைவிட சேர்த்த பணத்தை நிலைக்க வைப்பது கடினமானதாக இருக்கிறது. ஒரு பக்கம் பணம் வந்து கொண்டே இருந்தாலும் மறுபக்கம் அது நிலைக்காமல் தேவையற்ற வழிகளில் கரைந்து கொண்டே இருக்கும். அடிக்கடி மருத்துவ செலவுகள் ஏற்படுதல், யந்திரங்கள் பழுது பார்த்தல், வண்டி, வாகன செலவுகள் என்று எதிர்பாராத செலவுகள் உண்டாகி கொண்டே இருக்கும். இதற்கு காரணம் அப்படிபட்ட இல்லத்தில் மஹாலக்ஷ்மியின் அருள் இல்லை என்பது தான் அர்த்தம். லக்ஷ்மியின் அருளை பெறுவதற்கு சுலபமான வழிபாடு ஒன்று உள்ளது. அது என்னவென்று பார்க்கலாம்.
பூஜை செய்ய வேண்டிய நேரம்:
காலை 6 – 7 மணிக்குள்
மதியம் 1 – 2 மணிக்குள்
இரவு 8 – 9 மணிக்குள்
வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் நீங்கள் வழக்கமாக செய்யக்கூடிய பூஜைக்குரிய ஏற்பாடுகளை செய்தபின் குத்து விளக்கு ஒன்றை தனியே பூஜையில் வைக்கவும். விளக்கிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு, மலர்களால் அலங்காரம் செய்து வைத்து கொள்ளவும். விளக்கின் பாதத்தை சுற்றி பூக்களால் அலங்காரம் செய்து வையுங்கள். பூக்களில் மல்லிகை கட்டாயம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். பின்னர் கிராம்புகளை 54 அல்லது 108 என்ற எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளுங்கள். அதே எண்ணிக்கையில் ஏலக்காயையும் எடுத்துக் கொள்ளுங்கள். ஏலக்காயை ஊசி, நூல் கொண்டு கோர்த்து மாலையாக செய்து கொள்ளுங்கள். கிராம்பை பூ காட்டுவது போன்று ஒவ்வொன்றாக வைத்து கட்டி கொள்ளுங்கள். நைவேத்யமாக சர்க்கரைப் பொங்கல், காய்ந்த திராட்சை முத்துக்கள், மாதுளம் பழம் 1, நெல்லிக்கனிகள் 5 இவற்றை ஒரு தட்டில் வைத்து விளக்கின் முன்னால் வைத்துக் கொள்ளுங்கள். வெற்றிலை-பாக்கு, பழம் வைத்து அதன் மீது 501 ரூபாய் காணிக்கை வைக்கவும். இந்த இரண்டு மாலைகளையும் விளக்கிற்கு சாற்றி விளக்கின் 5 முகங்களிலும் தீபமேற்ற வேண்டும். தீபம் ஏற்ற வேண்டிய நேரம் மேலே குறிப்பிட்டுள்ள ஏதாவது ஒரு நேரத்தில் செய்து கொள்ளலாம். தீபம் ஏற்றும் பொது மஹாலக்ஷ்மி ஸ்லோகத்தை வாசிக்கலாம்.
தொடர்ந்து 21 வாரங்கள் இந்த வழிபாட்டை முறையாக செய்து வருவதன் மூலம் குபேர யோகத்தை அடையலாம் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. மஹாலக்ஷ்மியின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும். மாலைகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அதன் நிறமும், மனமும் மாறும் பட்சத்தில் மாற்றிக் கொள்ளலாம். இந்த பூஜையை வெள்ளிக்கிழமை செய்ய முடியாத நிலையில் பௌர்ணமியில் செய்யலாம். மஹாலக்ஷ்மி உங்களது வீட்டில் வாசம் செய்ய இந்த பூஜை முறை சிறந்த பலன் அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. முழு நம்பிக்கையோடு செய்து பயனடையுங்கள்.