கர்நாடக மாநிலத்தில் உள்ள கிரவுஞ்சகிரி, சுப்பிரமணியர் கோவிலில் முருகப்பெருமானின் காலடியில் ராமர், லட்சுமணர் அமர்ந்திருப்பது எங்கும் காணக் கிடைக்காத அரிய காட்சியாகும்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கிரவுஞ்சகிரி, சுப்பிரமணியர் கோவில் கொண்டிருக்கும் மலை வாசஸ்தலம். பெங்களூருவில் இருந்து பெல்லாரி செல்லும் சாலையில் ஹோஸ்பெட் என்ற ரெயில் நிலையத்தில் இறங்கி இந்த இடத்திற்குச் செல்லலாம். இந்த மலைக்கோவிலில் முருகப்பெருமான் தனது மனைவிகளான வள்ளி, தெய்வானை இல்லாமல் தனித்து இருக்கிறார். இந்தக் கோவிலில் அம்பாளுக்கு தனிச் சன்னிதி இருக்கிறது.
இத்தல முருகப்பெருமானின் காலடியில் ராமர், லட்சுமணர் அமர்ந்திருப்பது எங்கும் காணக் கிடைக்காத அரிய காட்சியாகும். ராவணனுடன் போரிட்டு சீதையை மீட்டதும், ராமரும், லட்சுமணரும் இங்கு வந்து முருகப்பெருமானுக்கு பூஜை செய்ததாக சொல்லப்படுகிறது. கோவிலுக்குள் சீதையை அழைத்துச் செல்லாமல், அனுமனை காவலுக்கு வைத்து விட்டு, ராமரும் லட்சுமணரும் மட்டும் சென்றதால், அவர்களுக்கு மட்டுமே சிலை உள்ளதாக கூறப்படுகிறது.
ஒருமுறை பார்வதி தேவிக்கும், முருகப்பெருமானுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது பார்வதிதேவி முருகப்பெருமானிடம், ‘நான் கொடுத்த பால்தானே உன்னை வளர்த்தது’ என்று கேட்க, முருகப்பெருமான் ‘அந்தப் பால் எனக்கு வேண்டாம்’ என்று கக்கி விட்டதாக ஒரு ஐதீகம் சொல்லப்படுகிறது. அந்த பால், இங்குள்ள மலைமீது உறைந்து வெள்ளைக் கல்லாக மாறியதாக நம்பப்படுகிறது. இந்த வெள்ளை நிறக் கல், பால் நிறத்தில், தொட்டுப் பார்த்தால் நல்ல நறுமணி விபூதி போல் காட்சி தருகிறது. இந்த ஆலயத்தில் முருகன் சன்னிதியில் பிரசாதமாக அதுதான் தரப்படுகிறது. நோய் தீர்க்கும் அருமருந்தாக அது இருக்கிறதாம்.