சிவபெருமான் தனது உடலில் அணிந்திருக்கும் ஒவ்வொரு ஆபரணமும் ஒவ்வொரு உண்மையை உணர்த்துகின்றன. அவை குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
திருமுடி:
திருவருளை அனுபவிக்கும் போது தற்செயல் தோன்றாமல் (யான், எனது, என்ற செருக்கு இல்லாமல்) பரவசப்படுவதே சிவனது திருமுடியாம்.
திருமுகம்:
உலகில் காணும் அனைத்தையும் இறைவனின் அனுக்ரஹமாகவே (உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் சிவமாகவே பார்க்கும் தன்மை) கண்டு அனுபவிப்பது அவரது திருமுகம்.
இருதயம்:
முக்தி பெறுவதற்குரிய பக்குவ ஆன்மாக்களுக்கு மெய்ஞ்ஞானத்தை (உண்மையான அறிவு விளக்கத்தை) உணர்த்தும் திருவருட்சக்தி இருதயமாகும்.
திருவடி:
யான் எனது என்னும் அகங்கார மமகாரமாய் நிற்கும் பொய்யறிவு (அறியாமை என்ற இருள்) நீங்கத்திருவருள் ஞானம் பிரகாசித்து நிற்றலயே சிவனுடைய திருவடி என்பர்.
தேகம் {வித்யா}:
ஆன்மாக்கள் (உயிர்கள்) செய்யும் கன்மத்திற்கு (நல்வினை, தீவினை, செய்வதற்கு ஏற்ப) ஈடாக ரட்சிக்கும் குணமாகிய சதாசிவ மூர்த்தியினுடைய திருமேனி மந்திரம் (திருவைந்தெழுத்து) ஆகையால் மந்திர ரூபமாகிய ஞான சக்தியே வித்யா தேகம் எனப்படும்.
திரிநேத்ரம்:
சூரியன், சந்திரன், அக்கினி (முக்கண் உடையவன்) என்னும் முச்சூடர்களையும் அடக்கியாள்பவர் தாமே என்பதையும் ஆகவனீயம், காருகபத்யம், தக்கிணாக்கினியம் என்னும் மூன்று வேள்விகளும் தம்மிடத்தே பொருந்தியுள்ளன என்பதையும். எல்லாச் செயல்களையும் அறிந்து செய்யும் இச்சை, ஞானம், கிரியா சக்திகளையுடையவர் தாம் என்பதையும் இம்மூன்று கண்களும் குறிக்கின்றன.
திரிசூலம்:
ஆரணி, செனனி, ரோதயித்திரி என்னும் முச்சத்தி வடிவினதாகிய சூலப்படையானது முத்தொழிலையுடையவர், மும்மலங்களை
(ஆணவம், கன்மம், மாயை) நீக்குபவர் தாமே என்பதைக் குறிப்பது.
வாள் :
பிறவி வேரின் கொடியை அறுப்பவர்தாமே என்பதை அறிவிப்பதற்காக ஞான வடிவமாகிய (அறிவால் நீங்க வேண்டியவை) வாளை ஏந்தியுள்ளார்.
குலிசம் :
ஒருவராலும் கெடுத்தற்கு (துன்பம் தர) இயலாத சுத்தமாயை ஆளும் பேத குணத்தையுடையவர் தாம் என்பதை அறிவித்தற்காக துஷ்டர்களைப் (கெட்ட குணத்தை உடையவர்கள்) பேதிக்கின்ற குணமாகிய குலிசத்தை ஏந்தினார்.
அபயகரம்:
உலக துன்பத்திற்குப் பயப்பட வேண்டாம் என்று அனுக்ரஹம் (திருவருள் தரும் குணத்தை) செய்யும் குணத்தைக் குறிக்கிறது.
வரத கரம் :
ஆன்மாக்களின் கன்மத்துக்கு ஈடாகப் போக முத்திகளைக் கொடுப்பவர் {வரமளிப்பவர்} தாம் என்பதை அறிவித்தற்காகக் கொண்டது வரத கரம்.
அக்கினி:
ஆன்மாக்களின் பாசங்களை நீக்குபவர் தாம் என்பதை உணர்த்தும் பொருட்டுச் சம்ஹார வடிவாகிய அக்கினியைத் தாங்கியுள்ளார்.
அங்குசம்:
மறைப்பினை {திரோபாவம்} செய்பவர் என்பதை அறிவிப்பது.
மணி:
நாதத் தத்துவத்திற்குத் (36 தத்துவம் கடந்தவர்) தாமே தலைவர் என்பதைக் குறிக்கிறது.
ஸர்ப்பம் {பாம்பு}:
பாம்பினுடைய விரிவு, சுருக்கம் போல உலகின் தோற்றம் ஒடுக்கம் இருப்பதற்கு உலகிற்கு நிமித்த காரணர் தாம் என்பதை அறிவித்தற்காகக் குண்டலினி சக்தி ரூபமாகிய பாம்பை ஏந்தியுள்ளார்.
பாசம்:
ஆன்மாக்களுக்கு பலத்தை ஊட்டுபவர் தாம் என்பதை அறிவித்தற்காக மாயா ரூபமாகிய பாசத்தை திருக்கரத்தில் ஏந்தியுள்ளார்.
மான்:
மானின் நான்கு கால்களும் நான்கு (ரிக்,யசூர், சாமம், அதர்வணம்) வேதங்களாகையால் வேதப் பொருளாக உள்ளவர் தாம் என்பதை உணர்த்துவதற்காக மானை ஏந்தினார்.
புன்முறுவல் :
சஞ்சிதம் முதலான மூவகைத் (ஆகாமியம், சஞ்சிதம், பிரார்த்தம்) துயரத்தையும் போக்கி அருளுவதற்காக இளமையான புன்சிரிப்பைக் கொண்டுள்ளார்.
உபவீதம் {பூணூல்}:
சிவஞானப் பொருளாக இருப்பவரும் அதைத் தருபவரும் தாமே என்பதை உணர்த்துவது.
சிகை {தலைக்குடுமி}:
ஞான வடிவமாக உள்ளவர் தாமே என்பதையும் அறிவிக்கவே ஞான அடையாளமாகிய சிகையைக் கொண்டுள்ளார்.
சிலம்பு மற்றும் மெட்டி:
பக்குவ ஆன்மாக்களைப் பேரின்பத்தின் அழுத்துதற்குச் சாதனமாக அருட்சிலம்பு மற்றும் மெட்டி விளங்குகிறது.
வீரக்கழல்:
ஆன்மாக்களை வசப்படுத்தும் முன் வினையை வென்று, பிறவித் துன்பத்தைப் போக்கும் காரணர் தாம் என்பதை உணர்த்துவது.
கங்கை:
உலகை அழிக்குமாறு வந்த கங்கையை அதன் வேகத்தைக் குறைத்து அடக்கி உலகை காத்து இன்பத்தைத் தந்ததால், ஆன்மாக்களை ஆனந்தக்கடலில் திளைக்கச் செய்ததற்கு அடையாளமாகக் கங்கையை தலைமுடியில் தரித்துள்ளார்
காதில் குழை (தோடு):
அசுரர்களை அழித்து (ஆணவத்தை) வளையமாக காதில் அணிந்துள்ள ஆபரணம் தோடு ஆகும்.