சிவபெருமான் ஒரு முறை கோபத்தில் ருத்ர தாண்டவம் ஆடத்துவங்கினார், ருத்ரத்தாண்டவத்தின் வேகம் கூட கூட அதனால் ஏற்பட்ட உக்கிரம் தாங்காமல் அனைத்து உலகங்களும் நடுங்கத் தொடங்கின.
பார்வதிதேவி தேவர்கள் யோகிகள் ஞானிகள் என்று பலர் முறையிட்டும் சிவபெருமான் தனது ருத்ரதாண்டவத்தை நிறுத்தவில்லை.
சிவனின் வாகனமான நந்திகேஸ்வரர் சிவபெருமானிடம் கோபத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு மனமுருகி வேண்டினார்.
நந்தியின் மனமுருகிய வேண்டுதலை கேட்ட சிவபெருமான் “நான் எங்கே போய் ஆடுவது?” என்று கேட்க “என் தலையில் ஏறி ஆடுங்கள் நான் தாங்கிக்கொள்கிறேன்” என்று நந்தி தேவர் கூறினார்.
சிவனும் நந்தியின் இரு கொம்புக்கு இடையே நின்று நர்த்தனம் ஆடி கோபம் தணிந்தார்.
ஒருவர் எவ்வளவு பெரியவராயினும் அவர் எவ்வளவு கோபக்காரராயினும் அவரையும் கட்டுப்படுத்த ஒருவர் உலகில் இருக்க வேண்டும். என்பதை உலகிற்கு உணர்த்த இந்த தாண்டவம் ஆடியதாக கூறப்பட்டதாலும், நந்திதேவரைப் போன்று தைரியசாலிகளை இறைவனே விரும்புவர் என்பதையும் சிவபெருமானின் ருத்ர தாண்டவ லீலை உலகுக்கு உணர்த்தியது.
அந்த வகையில் நந்தி தேவர் சிவனின் அன்புக்குரியவர் ஆனார். நந்தியின் இரு கொம்புகளுக்கு நடுவில் சிவபெருமான் நடனமாடிய அந்த நேரம் மாலைப்பொழுதாக இருந்தது. அன்று திரயோதசி திதி.
அதாவது அமாவாசை அல்லது பௌர்ணமிக்கு இரண்டு நாட்கள் முந்திய திதி. இதன் பொருட்டுத்தான் தற்போது அனைத்து சிவலாயங்களில் பிரதோஷம் நிகழ்கிறது.
இவ்வாறு பிரதோஷம் பிறப்பதற்கு காரணமாக இருந்த திருக்கோயில் சுருட்டப்பள்ளி, இந்த கோவிலில் பிரதோஷ தரிசனம் மிகுந்த விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
பிரமாண்ட வடிவம் கொண்டு பார்வதியின் மடியில் ஆனந்த புன்னகையுடன் சிவன் சயனத்தில் உள்ளார். கர்ப்பக்கிரக சுவரில் தேவர்கள் ரிஷிகள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர்.
“சர்வமங்களா” என்ற பெயருடன் அம்பாள் பார்வதி விளங்குகிறாள். இந்த தலத்தில் தம்பதி சமேதரராக அம்பாளும் சிவபெருமானும் இருப்பதால் குடும்ப வாழ்க்கை வேண்டி வரும் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அமைகிறது.
இதனால் இத் திருத்தலத்தில் மாங்கல்ய பாக்கியம் அருளும் தலமாகவும் விளங்குகிறது.
சிவன் பள்ளி கொண்ட நிலையில் அருள் புரியும் தலம் என்பதால் பள்ளிகொண்டேஸ்வரர் கோயில் என்றும், சுருட்டப்பள்ளி என்னும் கிராமத்தில் இருப்பதால் சுருட்டப்பள்ளி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த இத்திருக்கோயில் சில பல காரணங்களால் ஆந்திர அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், இக்கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்வது மிகுந்த சிறப்பு.
சிவனுக்கு எதிரிலுள்ள சின்ன நந்திக்கு பிரதோஷ பூஜையும் சிவராத்திரியன்று உற்சவருக்கு நான்கு கால அபிஷேகமும் அலங்காரமும் சிறப்பாக நடக்கும்.
இதைத் தவிர தம்பதி சமேதராக தட்சிணாமூர்த்தி இங்கு காட்சி தருகிறார். சிவபெருமானும், தட்சிணாமூர்த்தியும் தம்பதி சமேதரராக இருப்பதால் புதுமணத் தம்பதிகள் தங்களது மண வாழ்க்கை நன்கு அமைய வேண்டி திருமணம் முடித்ததும் இத்திருத்தலத்திற்கு சென்று வழிபடுவது இன்றும் வழக்கில் உள்ளது.
Tag: