பெண்கள் ருத்ராட்ஷம் அணியக்கூடாது என சிலர் சொல்கிறார்களே?
“”ருத்ராட்சம் அணிபவருக்கு லட்சுமி கடாட்சம் உள்ளிட்ட எல்லாநன்மைகளும் அருள்வேன்,” என்று சிவபுராணத்தில் பார்வதிதேவியிடம் பரமேஸ்வரன் உறுதியளித்துள்ளார். பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி அவள் ருத்ராட்ஷம் அணிந்திருப்பதை, கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொன்தோள் குழை கழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி என்று விவரிக்கிறது (அருணாசலபுராணம் (பாடல் எண் 330) பழி, பாவம் முதலியவற்றை முழுவதுமாகத் தீர்த்துக் கட்டுகிற திருநீறையும், ருத்ராட்ஷத்தையும் தனது திருமேனி முழுவதிலும் அகிலாண்டேஸ்வரி அணிந்து கொண்டாளாம். பராசத்திக்கு ஏது பழியும், பாவமும்? நமக்கு வழி காட்டுவதற்காகத்தானே அம்பிகையே ருத்ராட்ஷம் அணிந்து கொள்கிறாள்!. எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்ராட்ஷம் அணிய வேண்டும். மேலும், சிவ மஹாபுராணத்திலும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சிவபெருமானே வலியுறுத்தியுள்ளார்.
எல்லா நாட்களிலும் பெண்கள் ருத்ராட்ஷம் அணியலாமா?
பெண்கள், தங்களுடைய தாலிக் கொடியில் அவரவர் மரபையொட்டி சைவ, வைணவச் சின்னங்களைக் கோர்த்துதான் அணிந்திருக்கின்றனர். அதை எல்லா நாட்களிலும் தானே அணிகிறார்கள்? சில பெண்கள், யந்திரங்கள் வரையப்பட்ட தாயத்து போன்றவற்றையும் எப்போதும் அணிந்திருப்பதுண்டே? இவற்றைப் போல் ருத்ராட்ஷத்தையும் எல்லா நாட்களிலும் கழற்றாமல் அணிய வேண்டும். ருத்ராட்ஷம் வாழும் இந்த உடம்பிற்காக அல்ல. உயிரின் ஆத்மாவிற்காகவே சிவபெருமானால் அருளப்பட்டது.
நீத்தார் கடன் (திதி), பெண்கள் தீட்டு, கணவன் – மனைவி இல்லறதாம்பத்யம் நேரங்களில் ருத்ராட்ஷம் அணியலாமா?
முக்கியமாக இம்மூன்று விஷயங்களுமே இயற்கையானதே. இதில் எந்த நிகழ்ச்சியும் செயற்கையானதே கிடையாது. நீத்தார் கடன் போன்றவற்றை செய்யும் போது அதை செய்விப்பவரும், செய்பவரும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பது அவசியம். இதனால் பித்ருக்களின் ஆன்மாக்கள் மகிழும் என்று சிவபெருமானே உபதேசித்திருக்கிறார். இனியும் ஏன் சந்தேகம் ஆகையால் இம்மூன்று நிகழ்ச்சிகளின் போது கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியலாம். அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது.
ருத்ராட்ஷம் அணிவதால் கடவுளின் கருணை கிட்டுமா?
சர்வ நிச்சயமாக அவன் அருளாலே அவன் தால் வணங்கி அவர் கருணை செய்தால்தான் அவருடைய நாமத்தைக்கூட நாம் சொல்ல முடியும். அப்படியிருக்க அவர் ருத்ராட்ஷத்தையே நமக்கு அளித்துள்ளாரே அதனால் திருநீறு தரித்தல், ருத்ராட்ஷம் அணிதல், பஞ்சாட்சர மந்திரமான ” நமசிவாய” உச்சரித்தல், இம்மூன்றும் ஒரு சேரச் செய்து வந்தால் முக்தி எனும் மஹா பேரானந்தத்தை அடைவீர். இம்மூன்றும் இந்து தர்மங்கள், தர்மத்தை விடாதவர்களை இறைவன் கைவிடமாட்டார். மேலும் நவகிரஹங்கள் நன்மையே செய்யும், (ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, ராகு-கேது) தோஷத்தின் தாக்கங்கள் குறையும். ருத்ராட்ஷம் அணிந்திருக்கும் வேலையில் உயிர் பிரிந்தால் சிவபெருமான் திருவடியை அடைந்து நற்கதி எற்படும். பேய், பிசாசு, பில்லி, சூனியம், மந்திரம், தந்திரம், இவை அனைத்தும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பவர்களை ஒன்றுமே செய்யமுடியாது. ஆகையால் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும். ஒருவர் ஏழுஜென்மங்கள் தொடர்ந்து புன்னியம் செய்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு ருத்ராட்ஷம் அணியும் மஹா பாக்கியம் கிடைக்கும்,.
எல்லா வளமும் நலமும் பெற்று வளமொடு வாழ்க.