மும்பை டாக்கியாட் ரெயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் உள்ளது, சதுர்புஜ வைஷ்ணவி திருக்கோவில். இந்த ஆலயமானது, ஒரு சிறிய குன்றின் மேல் அமைந்திருக்கிறது. குன்றின்மேல் உள்ள ஆலயத்தை அடைவதற்கு படிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கோவில் சுமார் 300 ஆண்டுகள் பழமையானது என்று சொல்லப்படுகிறது.
பேஷ்வா அரசர்கள், வியாபார நிமித்தமாக செல்லும் வியாபாரிகள் ‘வசை’ என்னும் இடத்திற்குச் செல்லும்போது, இங்கு தங்கியிருந்து, இந்த அம்மனை வழிபட்டுச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். ஆங்கிலேயர்களும் கூட, தாங்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் பொருட்களை, தேவி காப்பாள் என்ற நம்பிக்கையுடன், கோவிலுக்கு அருகிலேயே கிடங்குகள் ஏற்படுத்தி வைத்திருந்தனர்.
மும்பை என்பது 7 தீவுகள் இணைந்த பகுதியாகும். ஆரம்ப கால கட்டத்தில், சதுர்புஜ வைஷ்ணவி தேவியானவள், ஒரு மரத்தடியின் கீழ் சாதாரணமாகத்தான் இருந்தாள். மும்பையின் தொடக்க காலங்களில் மீனவர்கள்தான் இங்கு அதிகமாக வசித்து வந்தனர். அவர்கள் ‘கோலி’ என்று அழைக்கப்பட்டனர். ‘கோலி’ என்பதற்கு ‘மீனவர்’ என்பது பொருள் ஆகும்.
வியாபார நிமித்தமாக கடலைக் கடந்து செல்லவும், பொருட்களை பத்திரமாக கொண்டு வந்து சேர்க்கவும், தங்களுக்கு துணைபுரியும்படி இந்தப் பகுதியில் வசித்தவர்கள், இத்தல அம்மனை வழிபாடு செய்து வந்திருக்கின்றனர். அன்னையும் தனது சக்தியால், கடல் கடந்து வியாபாரம் செய்பவர்களையும், மீனவர்களையும் காத்து வந்தாள்.
இந்த அன்னையின் சக்தி மீது நம்பிக்கையும், பக்தியும் கொண்ட, மீனவர்களும், வியாபாரிகளும் இணைந்துதான், தற்போதிருக்கும் குன்றின் மேல் இயற்கை அழகுடன் கூடிய ஆலயத்தை அமைத்திருக்கிறார்கள். பின்னர் மரத்தடியின் கீழ் அமர்ந்து ஆட்சி செய்து கொண்டிருந்த அம்பாளை, அந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்தனர்.
குன்றின் மேல் பகுதிக்கு செல்லும் படிகளில் ஏறியதும் முதலில் சிவலிங்க சன்னிதி உள்ளது. அங்கிருந்து பக்கவாட்டில் மூன்று படிகள் ஏறினால், ருத்திரர் – திருமால்- பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகளும் ஓருருவாக நின்ற தத்தாத்ரேயர் சன்னிதி இருக்கிறது. தொடர்ந்து அனுமன் சன்னிதி, காளி சன்னிதி என ஒரே வரிசையில் நீளமாகக் கட்டிய அறையில் தனித்தனி சன்னிதிகளாக அமைந்துள்ளன.
இவற்றையெல்லாம் தரிசித்து விட்டு, இன்னும் சில படிகள் கடந்தால், ஆலயத்தின் நாயகியான சதுர்புஜ வைஷ்ணவி தேவியை தரிசனம் செய்யலாம். கம்பீர தோற்றத்துடனும், புன்னகை ததும்பும் முகத்துடனும் அமர்ந்திருக்கும் இந்த அன்னை, தன்னுடைய ஒரு கையில் வீர வாளும், மற்றொரு கையில் தாமரை மலரும் தாங்கியிருக்கிறார். முன்பக்க இரு கரங்கள் அபய, வரத ஹஸ்த முத்திரை காட்டியபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றன.
குன்றின் மேல் கோவிலுக்கு இடது பக்கம் மிகப்பெரிய பூங்கா ஒன்று உள்ளது. சுமார் 2 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட இந்தப் பூங்காவில் தியானம் செய்வதற்காகவும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே சிறிய கிராமமாக இருந்தாலும் இங்கு வந்து அம்பாளை தரிசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இத்தல அம்பாளிடம் தங்களின் மனக்குறைகளைக் கூறி வேண்டிக்கொண்டால், அவை விரைவில் தீர்ந்து விடும். வேண்டுதல் நிறைவேறியதும், பக்தர்கள் அனைவரும் தங்கள் சக்திக்கேற்ப நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். இரண்டுகால பூஜை நடைபெறும் இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்துவைக்கப்பட்டிருக்கும். இந்த ஆலயத்தில் ஹோலி, குடிபதவா, மகரசங்கராந்தி, நவராத்திரி போன்ற விசேஷங்கள் நடைபெறுகின்றன.