மஹா விஷ்ணுவின் திருக்கரங்களில் ஐந்து ஆயுதங்களைக் காணலாம். இவற்றில் முக்கியமானது சக்கரம் என்று போற்றப்படுகின்ற ஸ்ரீ சுதர்ஸனம் ஆகும். திருமாலின் ஆக்ரோஷ ஸ்வரூபமான ஸ்ரீ சுதர்ஸன மூர்த்தியே திருமாலின் காத்தல் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பவர். சுதர்சனர் என்ற சொல்லுக்கு நல்வழி காட்டுபவர், காண்பதற்கு இனியவர் என்று பொருள். ஆனி மாத சித்திரை நட்சத்திர நாளில் சுதர்சன ஜெயந்தி விழா கொண்டாடுவார்கள்.
பெருமாளின் கையில் ஆயுதமாக அலங்கரிக்கும் சக்கரத்தாழ்வார் திருமாலுக்கு இணையானவர் என்று வேதாந்த தேசிகர் கூறுகிறார். சங்கு, சக்கர, கதாபாணியான பெருமாளின் கரங்களில் எப்போதும் வலக்கையிலேயே இடம் பெற்று இருப்பவர் சக்கரத்தாழ்வார். ஆனால் சில இடங்களில் மாறுபட்டும் அமைந்திருப்பது உண்டு. பெருமாள் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்குத் தனிச் சன்னதி உண்டு. இவர் பதினாறு, முப்பத்திரண்டு என்ற எண்ணிக்கைகளில் கைகளை உடையவர்.
தாடிக்கொம்பு சவுந்தரராஜபெருமாள் கோவிலில் நான்காவது பிரகாரத்தில் தென்மேற்கில் தனியாக சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது. சன்னதியின் முன்னால் சதுர வடிவ கருங்கல்லில் சக்கரத்தாழ்வாரின் உருவம் ஒரு பக்கமும், மறுபுறத்தில் யோக நரசிம்மரின் உருவமும் காணப்படுகிறது.
கருவறையில் அறுகோண சக்கரத்தில் சம்பங்கு நிலையிலும், பிரத்ய மூர்த்தியாகவும், மறுபக்கம் யோகநரசிம்மராகவும் காட்சியளிக்கிறார். அரங்க மண்டபத்தில் இவர் 16 கரங்களுடன் வீறுகொண்டெழும் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். சக்கரத்தாழ்வார் சந்நதிக்குக் கிழக்கிலும், மேற்கிலும் வாயில்கள் உள்ளன. பொதுவாக சக்கரத்தாழ்வாரின் பின்னாலிருக்கும் நரசிம்ம சுவாமியை வணங்குவதற்கு சின்னதாக ஜன்னல் மட்டுமே அமைத்திருப்பர். ஆனால், இங்கு கிழக்கு வாசலில் வணங்கிவிட்டு, மேற்கு வாசல் வழியாக நரசிம்ம சுவாமியை தரிசிக்க முடிகிறது!
கிழக்கு வாசலிலிருந்து வணங்கும்போது, நிலைக் கண்ணாடி வழியாகவும் நரசிம்ம சுவாமியை வணங்கலாம். தனிக்கோயில் கொண்டுள்ள இம்மாதிரியான சக்கரத்தாழ்வார் சந்நதியை சுமார் நூறு மைல் சுற்றளவில் (ஸ்ரீரங்கம் நீங்கலாக) எங்குமே பார்க்க முடியாது. வலிப்பு நோய், மனநிலை மாறாட்டம், கண் திருஷ்டி மற்றும் பில்லி சூனியம் போன்றவற்றிலிருந்து விடுபட சக்கரத்தாழ்வார் வழிபாடு மிகவும் உகந்தது. அதனால் பொருள் உடையோர் முழுநம்பிக்கையுடன் ‘சுதர்சன ஹோமம்’ நடத்தி நற்கதியடைகிறார்கள்.
வாழ்க்கையில் ஏற்படும் சங்கடங்கள் நீங்க, தொழிலில் ஏற்படும் பிரச்சினைகள் தீர சனிக்கிழமைகளில் இவரை விரதம் இருந்து வழிபடுவது சிறப்பு. இங்குள்ள சக்கரத்தாழ்வார் மிகவும் சக்தி வாய்ந்தவராக உள்ளார். இவர் உள்ள இடத்தைச் சுற்றிலும் காயத்ரி மந்திர தேவதைகள் இருக்கின்றனர். இத்தகைய அமைப்பு வேறு கோவில்களில் காண முடியாததாகும்.