வெள்ளிக்கிழமையில், பிரத்தியங்கிரா தேவியை வழிபட்டு, ஆத்மார்த்தமாக வேண்டிக்கொண்டால், நம் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்தருள்வாள் தேவி.
தேவி வழிபாடு, பக்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது. பொதுவாகவே, தேவியானவள், நம் அன்னையைப் போல் கனிவும் கருணையும் கொண்டவள். அன்பே உருவானள். அருள் மழை பொழியக்கூடியவள். சாந்த சொரூபினி.
சாந்தத்துடன் தன்னை நாடி வரும் பக்தர்களை அரவணைத்துக் காத்தருள்பவள் அம்பாள் என்று கொண்டாடுகின்றனர் பக்தர்கள். மயிலை கற்பகாம்பாள், திருவேற்காடு கருமாரி, திருமீயச்சூர் லலிதாம்பாள், சங்கரன்கோவில் கோமதி அன்னை, திருநெல்வேலி காந்திமதி அன்னை, புன்னைநல்லூர் மாரியம்மன், உறையூர் வெக்காளி அம்மன், இருக்கன்குடி மாரியம்மன், மேல்மலையனூர் அங்காளம்மன், மாங்காடு காமாட்சி அன்னை எல்லாவற்றுக்கும் மேலாக உலகச் சக்தி பீடங்களுக்கெல்லாம் தலைவியாகத் திகழும் காஞ்சி காமாட்சி என மகாசக்தி ஒவ்வொரு வடிவமாக, ரூபமாக, ஒவ்வொரு குணத்துடன் நமக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
அதேபோல், காளி, காளீஸ்வரி, முண்டகக்கண்ணி, செல்லியம்மன், தீப்பாய்ச்சிஅம்மன், சமயபுரம் மாரியம்மன், வல்லம் ஏகெளரியம்மன், கொல்லங்குடி மாரியம்மன், அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி என இன்னும் பல தெய்வங்கள், உக்கிரமாகவும் கடும் ஆயுதங்களுடன் தரிசனம் தருகின்றனர்.
இதில் பிரத்தியங்கிரா தேவி மிகவும் விசேஷமானவள். சிங்கமுக நாயகி. கடும் உக்கிரத்துடன் இருப்பாள். ஆனால் பக்தர்களிடம் ஒருபோதும் தன் கோபத்தைக் காட்டமாட்டாள். தன் பக்தர்களைச் சோதிப்பவர்களைப் பொறுத்துக்கொண்டு பார்த்திருக்கமாட்டாள்.
சக்தி வழிபாட்டில், வராஹியும் காளியும் பிரத்தியங்கிராவும் ஒருவகை. பொதுவாக, காளி உக்கிர தெய்வம்தான். ஆனால், சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள், சாந்த சொரூபினி. அந்தக் கோயிலிலேயே பிரத்தியங்கிராவும் கோயில் கொண்டிருக்கிறாள்.
கும்பகோணம் அருகில் உள்ள பட்டீஸ்வரம் துர்கை போல், அம்மன்குடி துர்கை போல், கும்பகோணம் அய்யாவாடியில் உள்ள பிரத்தியங்கிரா தேவியும் மகோன்னதம் மிக்கவள். உக்கிரம் நிறைந்தவள். அவளை மனதார வழிபடுவது ரொம்பவே சக்தி வாய்ந்தது. வெள்ளிக்கிழமையில், பிரத்தியங்கிரா தேவியை வெள்ளிக்கிழமையில் விளக்கேற்றி வேண்டிக்கொண்டால், நாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவாள் பிரத்தியங்கிரா தேவி.
செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை முதலான நாட்களிலும் அமாவாசை, பெளர்ணமி முதலான நாட்களிலும் பிரத்தியங்கிரா தேவியை மனதார வழிபடுங்கள். உங்கள் வாழ்வில் உள்ள தடைகளையும் உங்கள் வாழ்வில் உள்ள பிரச்சினைகளையும் அவளிடம் சொல்லி முறையிடுங்கள். உங்கள் பிரார்த்தனையில் குளிர்ந்து, உங்களை ஆசீர்வதித்து அருள்வாள் தேவி.
விரைவில், உங்கள் பிரச்சினைகளையெல்லாம் காணடித்து அருள்வாள். சிக்கல்களையெல்லாம் போக்குவாள். எதிர்ப்புகளையும் பலமிழக்கச் செய்வாள். எதிரிகளே இல்லாது செய்வாள்.
பிரச்சினைகள் தீர்க்கும் பிரத்தியங்கிரா தேவியை வழிபடுவோம்; வளம் பெறுவோம்!