உரோமச மகரிஷி, அகத்திய முனிவரின் சீடராவார். இவர் யாகம் ஒன்றை செய்வதற்கு முன்பாக பிரம்மனை நோக்கி தவம் இருந்தார். அவருக்கு காட்சி தந்த பிரம்மன், உரோமசர் யாகம் செய்வதற்காக ஆரணி என்ற மரங்களை உரசி, அதன் மூலம் யாகத் தீயை உருவாக்கினார். ஆரணி மரங்கள் உரசியபோது ஏற்பட்ட பெருவெடிப்பில், பூமியில் இருந்து நீர் வெளிப்பட்டு, பெருக்கெடுத்து ஓடியது. அதுவே ‘ஆரணி நதி’ ஆகும். இந்த நதிக்கரை ஓரத்தில், சிவபெருமானின் ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் ஆகிய 5 முகங்களை குறிக்கும் வகையில் 5 ஆலயங்கள் தோன்றின. இவை ‘பஞ்ச பிரம்ம தலங்கள்’ என்று போற்றப்படுகின்றன.
கோவிலின் நடுவில் மூலவர் சிவலிங்கமும், அதைச் சுற்றிலும் நான்கு மூலைகளில் நான்கு சிவலிங்கம் என 5 சிவலிங்கங்கள் உள்ள ஆலயங்களும், ‘பஞ்ச பிரம்ம தலங்கள்’ என்றே அழைக்கப்படுகின்றன. நாம் ஆரணிக் கரையோரம் உள்ள பஞ்ச பிரம்ம தலங்களைப் பற்றி சிறிய குறிப்பாக பார்க்கலாம்.
அரியத்துறை
சென்னை – கும்மிடிப்பூண்டி செல்லும் சாலையில் உள்ளது, கவரப்பேட்டை. இங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் அரியத்துறை இருக்கிறது. பஞ்ச பிரம்ம தலங்களில், சிவபெருமானின் சத்யோஜாதம் முகத்திற்குரிய தலம் இதுவாகும். இந்த ஆலயத்தின் ராஜகோபுரம் தெற்கு பார்த்த நிலையில் காணப்படுகிறது. இறைவன் – வரமூர்த்தீஸ்வரர், அம்பாள் – மரகதவல்லி. உரோமச மகரிஷி பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் இங்கு மூலவராக உள்ளது. இந்த லிங்கம் சதுர ஆவுடையாரைக் கொண்டது.
ஆரணி பெரியபாளையம்
சென்னையில் இருந்து வடக்கே 47 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஆரணி. இங்குள்ள பெரியபாளையத்தில், பிச்சாலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இதன் பழங்காலப் பெயர் ‘வாமதேவபுரம்’ ஆகும். பஞ்ச பிரம்ம தலங்களில், சிவபெருமானின் வாமதேவ முகத்திற்குரிய ஆலயம் இதுவாகும். 2 ஆயிரம் ஆண்டு பழமையான இக்கோவிலின் மூலவர், சுயம்பு மூர்த்தி ஆவார். மூலவர் பெயர்- பிச்சாலேஸ்வரர், அம்பாள் பெயர் – மரகதவல்லி. இங்குள்ள சிவலிங்கத்தின் மேற்பகுதியில், அம்பாளின் பாதம் பதிந்திருப்பது விசேஷம்.
ராமகிாி
சென்னையில் இருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, சுருட்டப்பள்ளி. இந்த ஊரைத் தாண்டியதும் ராமகிரி உள்ளது. இதன் பழங்காலப் பெயர் ‘திருக்காரிக்கரை’ என்பதாகும். மூலவர் பெயர் வாலீஸ்வரர். மரகதாம்பாள் என்பது அம்பாள் திருநாமம். சிவபெருமானின் ஈசான முகத்திற்குரிய ஆலயம் இது. மூலவர் திருமேனி, வடக்கு பக்கம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. நந்திக்கும், சிவலிங்கத்திற்கும் நடுவே ஆஞ்சநேயர் இருக்கிறாா்.
கருங்காலி
சென்னை அருகே உள்ளது பழவேற்காடு. இங்கிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில்தான் கருங்காலி திருத்தலம் இருக்கிறது. இது பழங்காலத்தில் ‘நைமிசான்யம்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. சிவபெருமானின் அகோர முகத்திற்குரிய கோவில் இங்கு உள்ளது. ஆரணி நதி, கடலில் கலக்கும் இடத்தில் இந்தக் கோவில் இருக்கிறது. இத்தல இறைவனின் திருநாமம், சிந்தாமணீஸ்வரர். அம்பாள் பெயர் சிவகாமவல்லி. 18 சித்தர்களில் ஒருவரான சட்டை முனிவரால், இங்குள்ள சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கடலோடு நதி கலக்கும் தீர்த்த அமைப்பின் காரணமாக, இந்த ஆலயம் காசி, கயா, ராமேஸ்வரம் போன்ற புனித தலங்களுக்கு நிகரானதாக கருதப்படுகிறது.
சுருட்டப்பள்ளி
சிவபெருமானின் தத்புருஷ முகத்திற்குரிய தலம் இது. சென்னையில் இருந்து சுமார் 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சுருட்டப்பள்ளி. இத்தல மூலவரின் திரு நாமம், பள்ளிகொண்டீஸ்வரர். அம்பாளின் பெயர், மரகதவல்லி. பாற்கடலைக் கடைந்த வேளையில், முதலில் வெளிப்பட்டது கொடிய விஷம்தான். அது உலகை அழிக்கும் முன்பாக, தான் உண்டு உலக உயிர் களைக் காத்தார் சிவபெருமான். வீரிய விஷத்தின் காரணமாக ஈசனுக்கு சிறு மயக்கம் உண்டானதாகவும், அதனால் அவர் அம்பாளின் மடியில் தலை சாய்த்து படுத்திருந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. அப்படி அவர் அம்பாள் மடியில் தலைசாய்த்து படுத்திருக்கும் சயன கோலத்திலேயே, இறைவன் இங்கு காட்சி தருகிறார். இவரை வழிபாடு செய்தால் குடும்ப பிரச்சினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.