நிகழ்கிறது.
சித்திரை மாதம் சூரியன் மேஷ ராசியில் உச்சமாக இருப்பார். கிரகங்கள் உச்ச வீட்டில் சஞ்சாரம் செய்யும் போது பூமிக்கு மிக அருகில் இருக்கும். அதன் வலிமையும் மிகுதியாக இருக்கும். உச்ச கிரகங்களின் கதிர் வீச்சு பூமிக்கு மிகுதியாக கிடைக்கும். மேஷ ராசியில் நீச்சம் பெறும் கிரகம், சனி. ஒரு கிரகம் நீச்சம் பெறும் போது பூமிக்கு வெகு தொலைவில் இருக்கும். நீச்சம் பெற்ற கிரகத்தின் அதிர்வலைகள் பூமிக்கு குறைவாக கிடைக்கும்.
மனிதர்களின் பூர்வ ஜென்ம பாவ-புண்ணியங்கள் எல்லாம் சனி கிரகத்தில் தான் பதிவு செய்யப்பட்டு இருக்கும். இருளை நீக்கும் வலிமை வெளிச்சத்திற்கு மட்டுமே உண்டு. சனி கிரகத்தில் பதிவாகி இருக்கும் கர்ம வினைகளை அழிக்கும் சக்தி, ஆத்மகாரகனான சூரியனும் மனோகாரகனான சந்திரனும் பலம்பெறும் சித்ரா பவுர்ணமிக்கு உண்டு. அதாவது சனியின் நீச்ச வீட்டில் உச்சமாகும் சூரியன் தன் முழு வலிமையுடன் சந்திரனை பார்க்கும் சித்ரா பவுர்ணமி நாளில், சூரிய ஒளியால் பகல் பொழுதும், சந்திர ஒளியால் இரவு பொழுதும் பிரகாசமாகவும் வெளிச்சமாகவும் இருக்கும் போது மனிதர்கள் செய்யும் பூஜைகள், வழிபாடுகள், தான தர்மங்கள் பல மடங்காகி புண்ணிய பலன் மிகுதியாகும்.
மனிதர்களின் பாவ புண்ணிய கணக்கை எழுதும் சித்ரகுப்தனின் கணக்கு புத்தகம் என்பது, சனி கிரகமாகும். எனவே இந்த நாளில் விரதம் இருந்து சித்ர குப்தனை வழிபட கர்ம வினை நீங்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
மனிதரின் பாவ புண்ணியக் கணக்குகளை எழுதும் பணிக்காக இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட சித்ர குப்தன், பிறக்கும்போதே கையில் எழுத்தாணி, ஏடுடன் பிறந்ததாக ஐதீகம். நாம் செய்யும் புண்ணிய செயல் களையும் பாவ செயல்களையும் தவறாமல் நடுநிலையாக, அவரவரின் பூர்வ புண்ணியங்களின் படி ஆராய்ந்து மறையாத எழுத்துக்களால் கணக்குப் புத்தகத்தில் எழுதுவதாக நம்பிக்கை. ‘சித்’ என்றால் ‘மனம்’ என்றும், ‘குப்த’ என்றால் ‘மறைவு’ என்றும் பொருள். மனிதர்களின் மனதில் மறைந்திருக்கும் பாவ எண்ணங்களையும், மனதார செய்யும் நல்ல செயல்களின் புண்ணியத்தையும் கவனித்து எழுதி வைக்கிறார் சித்ரகுப்தர். அதனால் எமதர்மனின் உதவியாளரான சித்ரகுப்தனை வழிபட்டு புண்ணிய பலனை அதிகரிக்க முடியும்.
சித்ரா பவுர்ணமியன்று பூஜையறையை சுத்தம் செய்து, சித்ரகுப்தன் படம் வைத்து மலர் அலங்காரம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து பழங்கள், காய்கறிகள், வேப்பம்பூ பச்சடி, சம்பா அரிசியில் தயாரித்த அவல், பச்சரிசி வெல்லம் கலந்த இனிப்புகள் மற்றும் கலவை சாதங்களை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும். ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி மனதில் உள்ள தீய எண்ணங்களை விலக்கி, நல்ல எண்ணங்களை புகுத்தி, தீப தூபம் காட்டி, சித்ர குப்தனை மனதார வழிபட பாவ பலன் குறைந்து புண்ணிய பலன் பெருகும்.
மனிதர்கள் செய்யும் பாவங்களை அறிந்து செய்யும் பாவம், அறியாமல் செய்த பாவம் என இரண்டாக வகைப்படுத்தலாம். அறியாமல் செய்த பாவங்களில் இருந்து விடுபட விரும்புபவர்கள் சித்ரா பவுர்ணமி அன்று விரதம் இருந்து சித்ரகுப்தனை வணங்கினால் அறியாமல் செய்த பாவங்கள் மலையளவாக இருந்தாலும் அது கடுகளவாக மாறும். அதே போல் தெரிந்து செய்த பாவத்திற்கு மன்னிப்பு கோரி பாவச் சுமையை குறைத்துக் கொள்ளலாம்.
அதுபோலவே அன்று செய்யும் தான, தர்மங்கள் கடுகளவாக இருந்தாலும் அது மலையளவாக புண்ணியம் பெற்றுத் தரும். முக்கியமாக நோட்டுப்புத்தகம், பேனா, பென்சில் முதலிய எழுத பயன்படும் பொருட்களை தானமாக வழங்கினால் வாழ்வு சிறக்கும்.
இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி நாளில் காலபுருஷ 5-ம் அதிபதியான சூரியன், சுக்ரனின் நட்சத்திரத்திலும், சந்திரன் ராகுவின் நட்சத்திரமான சுவாதியிலும் சஞ்சரிக்கிறது. சூரியனின் அதிதேவதை சிவன், சந்திரனின் அதிதேவதை அம்பிகை. எனவே சிவசக்தியை சித்ரா பவுர்ணமியில் வழிபட்டால் கணவன்- மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பாவங்கள் குறைவதோடு ராகு-கேது தோஷம், பூர்வ ஜென்ம தோஷம், களத்திர தோஷம், புத்திர தோஷம், கல்வி தோஷம் ஆகிய தோஷங்கள் நிவர்த்தியாகும்.