தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, பள்ளியூர். இந்த ஊருக்கு தஞ்சையில் இருந்து திருவாரூர் செல்லும் வழித்தடத்தில், சாலியமங்கலத்தில் இருந்து பாபநாசம் செல்லும் சாலையில் செல்ல வேண்டும். இந்த தடத்தில் களஞ் சேரியில் இருந்து பள்ளியூருக்கு சாலை பிரிகிறது. இந்த ஊரின் கிழக்கு பகுதியில் வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ளது, ஆதி வீரமாகாளியம்மன் கோவில். இந்தக் கோவிலை அங்குள்ள மக்கள் ‘பவுர்ணமி கோவில்’ என்றும் அழைப்பது உண்டு.
காரணம் ஒவ்வொரு பர்வுணமி அன்றும் இந்தக் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெறும். பவுர்ணமி அன்று பகல் 12 மணி முதல் 2 மணிக்குள் அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறும். பால், மஞ்சள், தயிர், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படும். இந்த ஆதி வீரமாகாளியம்மன் கோவில் 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் இருந்துள்ளது. அந்தப் பகுதியில் குடியிருந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் அதனை வழிபட்டுள்ளனர். பின்னர் அவர்கள் இடத்தை காலி செய்து விட்டு சென்ற பின்னர், அந்தப் பகுதி முழுவதும் கருவேல மரங்கள் நிறைந்து காணப்பட்டது. அதில் ஒரு புற்று ஒன்றும் இருந்துள்ளது.
இதனை அந்தப் பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். ஒரு நாள் திடீரென மழை பெய்த போது புற்றின் மேல்பகுதியில் இருந்த மண் கரைந்து கருப்பு நிறத்தில் ஒரு பொருள் வெளியே தெரிந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் பிறகு தண்ணீரை அதிக அளவில் ஊற்றிய போது, அந்தப் புற்றில் இருந்து அம்மன் சிலை தென்பட்டது. அது வீரமாகாளியம்மன் சிலை. இதையடுத்து அந்த சிலை காணப்பட்ட இடத்திலேயே அதற்கு கோவில்கட்டி உள்ளனர். அந்த சிலை 1½ உயர கருங்கல் சிலை ஆகும். இந்த சிலை 1996-ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அதற்கு கோவில் கட்டி 2005-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு மீண்டும் கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்தக் கோவில் பஞ்சபூதங்களையும் தன்னகத்தே கொண்டது. கோவில் முன்பு குளம் உள்ளது. குளத்தின் கரையில் விநாயகர் சன்னிதியும் உள்ளது. இந்தக் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தால் எண்ணங்கள் ஈடேறும் என்கிறார்கள். குறிப்பாக குழந்தை இல்லாதவர்கள், திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்தால் குழந்தை பேறு கிட்டும். திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். குழந்தை இல்லாதவர்கள் இந்த கோவிலுக்கு 3 பவுர்ணமி வந்து தரிசனம் செய்ய வேண்டும். தேங்காய், வெற்றிலை பாக்கு போன்றவை எடுத்து வர வேண்டும். 3-வது பவுர்ணமி அன்று அவர்கள் கோவிலுக்கு வரும் போது ஆண், பெண் உருவம் கொண்ட 2 மரப்பாச்சி (மரத்தினால் செய்யப்பட்டது) பொம்மைகளை எடுத்து வர வேண்டும். அதில் ஒரு பொம்மையை கோவிலில் வைத்து விட்டு ஒரு பொம்மை, கொண்டு வந்தவர்களிடம் கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு விரைவில் குழந்தை பேறு கிட்டுகிறது.
இதே போல் திருமணம் ஆகாதவர்கள், தங்கள் ஜாதகத்தின் நகல்களின் 2 பிரதிகளை இந்த கோவிலுக்கு கொண்டு வர வேண்டும். அதனை அம்மன் பாதத்தில் வைத்த விட்டு ஒன்றை அங்கு வைக்கப்பட்டுள்ள ஜாதக உண்டியலில் போட வேண்டும். மற்றொன்று கொண்டு வந்தவர்களிடமே கொடுக்கப்படும். அதன்படி இதுவரை இந்த கோவிலுக்கு வந்த 250-க்கும் மேற்பட்டவர்களுக்கு 90 நாளில் திருமணம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
நோய் நீங்க வேண்டும், இன்னும் பல்வேறு காரியங்களை நினைத்துக்கொண்டு வருபவர்களுக்கும், அவர்களின் எண்ணங்கள் ஈடேறி வருவதாக இங்கு வரும் பக்தர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இந்தக் கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி அன்று பூஜைகள் நடைபெற்றாலும் ஆடி மாத பவுர்ணமி மாதம் நடைபெறும் பூஜை தான் திருவிழா போல கொண்டாடப்படுகிறது.