29-12-2020 தத்தாத்ரேயர் ஜெயந்தி
மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஓர் உருவான அவதாரமே, `தத்தாத்ரேயர்’. பிரம்மதேவனின் மகனும், சப்த ரிஷிகளில் ஒருவருமான அத்ரி மகரிஷியின் மனைவி அனுசூயை. இவர் கற்புநெறியில் சிறந்தவராக விளங்கினார். ஒரு முறை மும்மூர்த்திகளின் மனைவியரான பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரிடம், நாரத முனிவர் அனுசூயை தேவியின் கற்புநெறி பற்றி பெருமையாக எடுத்துரைத்தார்.
இதனால் சற்றே பொறாமை கொண்ட அவர்கள் மூவரும், அனுசூயையின் கற்பை சோதிக்க எண்ணினர். அதன்படி தங்களின் கணவர்களிடம், அனுசூயையின் கற்பை சோதிக்க வேண்டும் என்று கூறினர். இந்த நிகழ்வின் மூலமாக அனு சூயையின் கற்புநெறியை உலகறியச் செய்ய மும்மூர்த்திகளும் நினைத்தனர். அதன்படி முனிவர் களாக தங்களின் வடிவத்தை மாற்றிக்கொண்ட மும்மூர்த்திகளும், அனுசூயையின் இல்லத்தின் முன்பாகப் போய் நின்று, யாசகம் கேட்டனர். அப்போது அத்ரி மகரிஷி வனத்திற்குள் தவம் செய்து கொண்டிருந்தார். இல்லத்தில் அனுசூயை மட்டுமே இருந்தார்.
இல்லத்திற்கு யாசகம் கேட்டு வந்த முனிவர்களை, வீட்டிற்குள் அழைத்துச் சென்ற அனுசூயை, இலை விரித்து அதில் பழங்களையும், சுவை மிகுந்த உணவுகளையும் பரிமாறினார். ஆனால் முனிவர்கள் மூவரும் உணவருந்தாமல் இருந்தனர். அதைக் கண்டு, “ஏன் உணவருந்த தயங்குகிறீர்கள்?” என்று கேட்டார், அனுசூயை. அதற்கு முனிவர்கள், “நாங்கள் நிர்வாணமாக உணவு பரிமாறினால்தான் சாப்பிடுவோம்” என்று கூறினர். அதைக் கேட்டு முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், பின்னர் ஒரு முடிவுக்கு வந்தார், அனுசூயை.
அவர் தன் கணவரின் கமண்டலத்தில் இருந்த நீரை தன் கையில் ஊற்றி, “நான் இதுநாள் வரை அத்ரி மகரிஷியின் தர்மபத்தினியாக, கற்புநெறி தவறாதவளாக வாழ்ந்தது உண்மையானால், இவர்கள் மூவரும் குழந்தைகளாக மாறட்டும்” என்று கூறி, தண்ணீரை மூவர் மீதும் தெளித்தாள். மறுநொடியே முனிவர்கள் மூவரும் குழந்தைகளாக தரையில் தவழ்ந்தனர். அந்தக் குழந்தைகளை வாரி எடுத்து, நிர்வாணமாக அமர்ந்து அவர்களுக்கு பால் புகட்டினார், அனுசூயை.
இந்த நிலையில், அனுசூயையின் கற்பு நெறியை பரிசோதிக்கச் சென்ற தங்களின் கணவர்கள் திரும்பாததை அடுத்து, அவர்கள் நடந்தது என்ன என்று தங்கள் ஞானத்தால் உணர முற்பட்டனர். அப்போது நடந்த அனைத்தும் அவர்கள் கண்முன்பாக தோன்றி மறைந்தது. இதையடுத்து முப்பெரும் தேவியரும், அனுசூயையிடம் வந்து தங்களின் கணவன்மார்களை, மீண்டும் சுய உருவத்தோடு திருப்பித் தரும்படி வேண்டினர். இதையடுத்து அவ்வாறே செய்தார், அனுசூயை.
பின்னர் மும்மூர்த்திகளும், முப்பெரும் தேவியரும் அனுசூயை, அத்ரி மகரிஷிக்கு அருளாசி கூறியதோடு, வேண்டிய வரத்தை கேட்கும்படியும் கூறினர். அப்போது அனுசூயை, `மும்மூர்த்திகளும் எங்களுக்கு பிள்ளையாகப் பிறக்க வேண்டும்’ என்று வரம் கேட்டார். அதன்படி மும்மூர்த்திகளும் ஓர் உருவாக மாறி, அனுசூயைக்கு குழந்தையாக தோன்றினர். அந்தக் குழந்தைக்கு `தத்தாத்ரேயர்’ என்று பெயரிட்டனர்.
தத்தாத்ரேயர் மகா ஞானி, வித்தக யோகி. தத்த உபநிடதம் என்பது, தத்தரின் பெருமையைப் பறைசாற்றும் உபநிடதமாகும். தத்தாத்ரேயரைவிட சிறந்த அவதாரம் இல்லை என்பது வியாசரின் வாக்கு. தத்தாத்ரேயருக்கு பிரியமான இடம், பிரயாகை திரிவேணி சங்கமம். மும்மூர்த்திகள் வடிவம் போன்றே மூன்று புண்ணிய நதிகள் சங்கமிக்கும் புனிதமான இடம் இது. கும்பமேளா போன்ற மாபெரும் விழாக் காலங்களில் எண்ணற்ற சன்னியாசிகள் கூடும் இடமாகவும் இது விளங்குகிறது.
தத்தாத்ரேயர் அருளிய ஜீவன் முக்த கீதையும், அவதூத கீதையும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. முக்த கீதை 24 சுலோகங்களும், அவதூத கீதை 283 சுலோகங்களும் கொண்டது.