சென்னையில் இருந்து சுமார் 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சுருட்டப்பள்ளி. பஞ்ச பிரம்ம தலங்களில், சிவபெருமானின் தத்புருஷ முகத்திற்குரிய தலம் இது. இந்த ஆலயத்தில் இறைவனின் திருநாமம் பள்ளிகொண்டீஸ்வரர். அம்பாளின் திருநாமம் மரகதவல்லி.
திருப்பாற்கடலை கடைந்தபோது, கடலுக்குள் இருந்து முதலில் ஆலகால விஷம்தான் வெளிப்பட்டது. உலகை அழிக்கும் அந்த விஷத்தை சிவபெருமான் உண்டார். அந்த விஷம் அவரது உடலுக்குள் இறங்காமல் இருக்க, அவரது கழுத்தை அம்பாள் பிடித்தார். இதனால் விஷம் ஈசனின் கழுத்திலேயே நின்றது. விஷத்தின் வீரியத்தால் அம்பாளின் மடியில் மயங்கி விழுந்தார் ஈசன்.