திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் வடாரண்யேஸ்வரர், அம்பிகை வண்டார்குழலி. இத்தலம் தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருவாலங்காடு எனும் ஊரில் அமைந்துள்ளது. சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நடராஜப்பெருமான் நித்தமும் நடமாடும் ஐம்பெரும் அம்பலங்களில் ரத்தின சபை ஆகும். இறைவனால் அம்மையே என அழைக்கப்பெற்று சிறப்பிக்கப் பெற்ற காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து வந்து நடராஜரின் திருவடியின் கீழிருந்து, ஈசனின் ஆனந்த இன்ப வெள்ளத்தில் திளைத்திருக்கும் திருக்கோயில் இது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காளி பீடம்.
தலைவலி மருந்தீடு காமாலை சோகை சுரம்’ என்று துவங்கும் பழனி திருப்புகழ் பாடலில் “மாகாளி நாண முளம் அவைதனில் நடித்தோனை’ என்ற அடிகளில் திருவாலங்காட்டில் சிவபெருமான் ஆடிய போட்டி நடனத்தில் காளியை தோற்கடித்த வரலாற்றை அருணகிரிநாதர் தெரிவிக்கிறார். சிவபெருமானின் தாண்டவக் கோலத்தைக் காணவிரும்பத் தவமிருந்த சுனந்த முனிவருக்கு திருவாலங்காடு தலத்தின் பெருமையை எடுத்துக்கூறி அங்கு சென்று தவமியற்றக் கூறினார் சிவபெருமான். அதன்படி சுனந்தர் திருவாலங்காடு வந்து கடும் தவமியற்றினார். நெடுங்காலம் செல்லவே அவர் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றி புல் வளர்ந்து அதன் உச்சியில் முஞ்சிப் புல்லும் (நாணல்) வளர்ந்து விட்டது! அதனால் அவருக்கு முஞ்சிகேசர் என்ற பெயரும் வந்தது.
அதேநேரம் சிவனின் திருக்கரத்தில் ஆபரணமாக இலங்கிய கார்கோடகன் என்னும் பாம்பு ஈசனின் கையிலேயே நஞ்சைக் கக்கி விட்டது. அக்குற்றத்திற்காக அந்தப் பாம்பையும் திருவாலங்காடு சென்று தவமியற்றக் கட்டளையிட்டார் ஈசன். காரைக்கால் அம்மையாருக்கு நடராஜ பெருமான் காட்சி தந்த தலம் திருவாலங்காடு. இத்தலத்தில் இறைவனின் காலடியில் இன்றும் காரைக்கால் அம்மையார் வாழ்கிறார். திருவாலங்காட்டில் உள்ள நடராஜ தாண்டவம் ஊர்த்துவ தாண்டவம் என்று சொல்லப்படும். வலக்காலை உடம்புடன் ஒட்டி உச்சங்கால் வரை தூக்கி நின்றாடும் நாட்டியம் இதுவாகும். இத்தலத்து நடராஜர் மற்ற ஊர்த்துவ தாண்டவங்களைப் போல் தனது பாதத்தை செங்குத்தாக உடலை ஒட்டி தூக்கி நின்று ஆடாமல் உடலின் முன்பக்கத்தில் முகத்திற்கு நேராக பாதத்தை தூக்கியிருக்கிறார்.
எட்டு கைகளுடன் சுமார் நான்கு அடி உயரமுள்ள இந்த திரு உருவத்தைக் காண நம் மெய் சிலிர்க்கும். யாருக்கும் அடங்காத காளி வெட்கித் தலை குனிய வைத்த நடனமான இந்த ஊர்த்துவ தாண்டவ நடனம் பார்த்துப் பரவசமடைய வேண்டியதாகும். ஒருமுறை காளிக்கும், சிவனுக்கும் நடனப் போட்டி நடந்தது. சிவபெருமானை விட நன்றாக நடனமாடி வந்த காளி கடைசியில் சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும் காலை மேலே நேராகத் தூக்கியவுடன் காளியான சக்தி வெட்கித் தலைகுனிந்து தோற்றுப் போனாள். நடராஜர் சந்நதிக்கு எதிரே காளியின் சந்நதி இருக்கிறது. வடாரண்யேஸ்வரரை ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் தரிசனம் செய்தால் எல்லா வகையான இன்பங்களும் கிடைக்கும் என்கிறது தல புராணம்.
இண்டாவது சுற்றுப் பிராகாரம். வலதுபுறத்தில் இறைவி வண்டார் குழலம்மை சந்நதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. நேரே இறைவன் கருவறைக்குச் செல்லும் நுழைவு வாயில். இந்த நுழைவு வாயிலின் மேற்புறம் சிவபெருமானின் ஐந்து சபைகளும் அழகிய சுதைச் சிற்பங்களாக காட்சி தருகின்றன.
பிராகாரத்தில் வலமாக வரும்போது ஆருத்ரா அபிஷேக மண்டபம், ரத்தினசபை வாயில் உள்ளது. சபைக்கு எதிரில் நிலைக்கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது. அடுத்து தெற்கு நோக்கிய அம்பாள் சந்நதி உள்ளது. அம்பிகை நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சிதருகிறாள். அம்பிகை கருவறையில் கோஷ்ட மூர்த்தங்கள் இல்லை. சந்நதியிலுள்ள சிற்பக் கலையழகு வாய்ந்த கல்தூண்கள் காண அழகுடையவை. ரத்தின சபையில் நடராஜப் பெருமானின் ஊர்த்துவ தாண்டவ உற்சவத் திருமேனி தரிசிக்கத்தக்கது.
சிவகாமி, காரைக்காலம்மையார் திருமேனிகள் அருகிலுள்ளன. ரத்தின சபையில் பெரிய ஸ்படிகலிங்கமும், சிறிய மரகதலிங்கமும் உள்ளன. இவற்றிற்கு நான்கு கால அபிஷேகம் நடைபெறுகிறது. ரத்தின சபையை வலம் வரும்போது சாளரத்தில் சண்டேஸ்வரரின் உருவம் உள்ளது. ரத்தினச் சபையின் விமானம் செப்புத் தகடு வேயப்பட்டு ஐந்து கலசங்களுடன் விளங்குகிறது. திருவாலங்காட்டுச் செப்பேடுகள்: தமிழகத்தின் சரித்திரத்தின் முக்கியமான பகுதியை வெளிப்படுத்திய செப்பேடுகள் திருவாலங்காட்டில் கிடைத்தன. ஒரு பெரிய வளையத்தில் சேர்த்து சோழ முத்திரையுடன் தமிழிலும், வடமொழியிலும் பொறிக்கப்பட்ட சாசனங்களுடன் கிடைத்த அந்த 22 செப்பேடுகள் சோழ வம்ச சரித்திரத்தை நன்கு புலப்படச் செய்தன. இவை இன்று சென்னை அரும்பொருள் காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.
சென்னை – அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் இந்த சிவ தலம் உள்ளது. திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்லும் பேருந்தில் சென்று திருவாலங்காடு நிறுத்தத்தில் இறங்கினால் கோயில் மிக அருகிலேயே இருக்கிறது. இந்த தலம் தலைக்கு உரிய தலமாக கூறப்படுகிறது. காரணம் இத்தல இறைவியின் பெயர் வண்டார் குழலி – வண்டுகள் மொய்க்கும் வகையில் வாசமுள்ள கூந்தலையுடைய அன்னை ஆகவே இத்தலம் தலைக்குரிய திருமுடி தலமாக கூறப்படுகிறது.