சனீஸ்வர பகவானுக்கு அதிதேவதையாக எமன் விளங்குவதால், அவரை வழிபட்டால் சனிதோஷம் நீங்கும் என்பதால், கீழ்க்கண்ட ஆலயங்களில் எம பகவானை வழிபட்டால், சனீஸ்வரர் அருள் கிட்டும்.
ஸ்ரீவாஞ்சியம்:
கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் பஸ்சில் சென்று, குடவாசல் பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து குடவாசல், நன்னிலம் போகும் பஸ்சில் சென்றால் இத்திருலத்தை அடையலாம். இது காசிக்கு நிகரான திருத்தலமாகும். பல சிறப்புகளை உடைய திருத்தலம் இது.
இங்கு எம பகவானுக்குத் தனி சந்நிதி உள்ளது. எம பகவான் ஈசனுக்காக வாகனமாக மாறிய உருவமும் உள்ளது. இங்கு இறைவனையும் அம்பாளையும் வழிபாடு செய்து, குப்த கங்கை, எம தீர்த்தத்தில் நீராடி எமபகவானுக்கு அபிஷேகமும், ஆராதனையும் செய்து வழிபட்டால் சனி பகவான் அருள் கிட்டி, சனிதோஷ பரிகார நிவர்த்தி ஏற்படும்.
திருப்பைஞ்சீலி:
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து டோல்கேட், மண்ணச்சநல்லூர் வழியாக 19 கி.மீ. தூரத்தில் உள்ளது இத்திருத்தலம். பஸ் வசதி உள்ளது. இவ்வாலயத்தில் எமனுக்கு தனி சன்னதி உள்ளது. சனிக்கிழமைகளில் இவரை வழிபட்டு பரிகாரம் செய்ய சனி பகவான் அருள்பெறலாம்.
தருமபுரம்:
காரைக்காலில் இருந்து திருநள்ளாறு செல்லும் பாதையில் உள்ளது. மார்க்கண்டேயரின் உயிரைப் பறித்த பிழை நீங்க எமன் (தருமன்) வழிபட்டத் திருத்தலம் இது. தருமன் (எமன்) வழிபட்டதால் இவ்வூர் தருமபுரம் ஆயிற்று.
எனவே திருநள்ளாறு வந்து சனி பரிகாரம் செய்து போகின்றவர்கள், இத்திருத்தலம் வந்து வழிபட்டு போவதும் சிறந்த பலனையும், பரிகார நிவர்த்தியை அளிக்கும்.