நாட்டரசன்கோட்டை என்ற ஊரில், பழமையான கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இது 500 ஆண்டுகால தலவரலாற்றுப் பெருமை கொண்ட சிறப்புமிக்க ஆலயமாகும். சிவகங்கையில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, நாட்டரசன்கோட்டை.
ஆணவ வடிவமான சண்டாசுரனை அழிக்க, வடிவெடுத்த மஹா சக்தி, தேவர்கள் காணும் வகையில், அவர்களுக்கு ஞானக் கண் தந்து, தன் திருவுருக் காட்டியதால் கண்ணுடையாள் என்ற திருநாமம் கொண்டாள்.
கண்ணுடையாள், கண்ணானந்தி, கண்ணம்மா, கண்ணுடைய நாயகி என்று தமிழிலும், ‘நேத்ராம்பிகா’ என்று வடமொழியிலும் திருநாமங்கள் அம்மனுக்கு இருந்தாலும், பக்தர்களால், ‘கண்ணாத்தாள்’ என்றே பரவலாக அம்மன் அழைக்கப்படுகின்றாள்.
திருக்கோயிலின் முன்பாக திருக்குளம்..சுற்று மதிலுடன், படித்துறைகளுடன் கூடியதாக இருக்கிறது தேவியின் திருக்குளம். இதுவே இத்திருக்கோயிலின் தீர்த்தம்..
அன்னையின் அருட்சக்தி, இந்த திருக்குள நீரில் நிரம்பியிருப்பதாக ஐதீகம்.. கண் நோய்கள் வந்தால், இந்தத் தீர்த்தத்தை கண்களில் விட்டு கழுவினால், நோய்கள் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை
ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று, கண்ணுடைய நாயகி அம்மனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுகிறது.
திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க, கண் நோய் தீர இந்த அம்மனை அதிகமாக வணங்குகிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள், அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.