வாசுகியம்மையும் தன் கணவர் பேச்சை தட்டாமல், தினம்தோறும் தன் கணவருக்கு உணவு பரிமாறும்போது, ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரையும், ஊசியையும் வைத்து விடுவார்களாம். சாப்பிடும் போது இது எதற்கு? என்ற கேள்வியை ஒரு நாளும் வாசுகி தேவி தன் கணவரிடம் கேட்டதே இல்லை. வாழ்நாள் முழுவதும் வாசுகி தேவி தன் கணவருக்கு பரிமாறும் தருவாய்களும் முடிந்துவிட்டது. தன்னுடைய மரணப்படுக்கையில் இருக்கும் சமயத்தில், வாசுகி தேவிக்கு இந்த கேள்வியை தன் கணவரிடம் கேட்க வேண்டுமென்று தோன்றுகிறது! எதற்காக கொட்டாங்குச்சியில் தண்ணீரையும் ஊசியையும் வைக்கச் சொன்னீர்கள் என்ற கேள்வியை கேட்டு விட்டார்கள்! தன் கணவரான வள்ளுவ பெருமானிடம்.
திருவள்ளுவர் தன் மனைவியிடம் கூறிய பதில் இதுதான்! ‘நீ சாதத்தை பரிமாறும்போது பருக்கைகள் கீழே சிந்தினால், அந்தப் பருக்கையை, அந்த ஊசியில் குத்தி அந்த தண்ணீரில் கழுவி சாப்பிட்டுக் கொள்ளலாம் என்பதற்காகத்தான், அந்த இரண்டு பொருட்களையும் சாப்பாடு பரிமாறும் போது வைக்கச் சொன்னேன். ஆனால் இதுநாள் வரை நீ எனக்கு சாப்பாடு பரிமாறிய போது ஒரு சாப்பாடு கூட கீழே விழுந்தது இல்லை. அந்த இரண்டு பொருட்களையும் உபயோகப்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவே இல்லை.’ என்று பதில் கூறினாராம். கணவரின் பேச்சை தட்டாத மனைவி, மனைவியின் பொறுமையை புரிந்துகொண்டு நடந்துகொள்ளும் கணவர்.
இதேபோல் உணவு அருந்துவதற்காக வந்த முனிவருக்கும், வள்ளுவருக்கும் சேர்த்து, வாசுகி தேவி ஒருமுறை பழைய சாதம் பரிமாறிய போது, நடந்த சம்பவம் ஒன்று இருக்கிறது. அதாவது வாசுகி தேவி பழைய சாதத்தை பரிமாறிய பின்பு, இந்த சாதம் சூடாக இருக்கிறது விசிறி எடுத்து வீசு! என்று சொன்னதும் வாசகி தேவி பதில் கூறாமல் விசிறியை எடுத்து வீசினார்களாம்! பழைய சாதம் எப்படி சூடாக இருக்கும்? இப்படி ஒரு மனைவியா? திருவள்ளுவர் கொடுத்துத்தான் வைத்திருக்க வேண்டும்.
வாசுகி தேவியும் கொடுத்துவைத்தவர்கள் தான்! உலகத்துக்கே ஒன்றேமுக்கால் வரியில் திருக்குறளை எழுதிய வள்ளுவப் பெருமான், தன் மனைவியின் பிரிவைத் தாங்கமுடியாமல், மனைவிக்காக நான்கு வரிகளில் திருக்குறள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை. கெட்டுப் போவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.’ என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு
அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.
இரண்டு பேருமே ஒருவரை ஒருவர் எப்படி புரிந்து வைத்துள்ளார்கள்! நீங்கள் கணவராக இருந்தால் திருவள்ளுவராக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. உங்கள் வீட்டில் பிரச்சனை என்று வரும்போது, திருவள்ளுவரை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். மனைவிமார்களே நீங்களும் தான். வாசுகியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வாசுகியை ஒரு நிமிடம் மனதில் நினைத்தாலே போதும். தானாக விட்டுக் கொடுத்து விடுவீர்கள். வீட்டில் பிரச்சனை எப்படி வரும்?