கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனித்திருமஞ்சன விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதாவது ஆனிமாதம் உத்திரம் நட்சத்திரத்தில் பாடலீஸ்வரர் கோவிலில் உட்பிரகாரத்தில் உள்ள சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு ஆனித்திருமஞ்சன அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். அதைத்தொடர்ந்து சிவகாம சுந்தரி சமேத நடராஜர் திருமஞ்சன கோபுரம் வழியாக மாடவீதிகளில் மேளதாளம் முழங்க வலம் வருவார்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாடலீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டு ஆனித்திருமஞ்சன விழா கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள பக்தர்கள் யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் இன்றி ஆனித்திருமஞ்சன விழா நடந்தது.
கோவிலில் உள்ள பிரகாரத்தில் சிவகாம சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி எழுந்தருளினார். பின்னர் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து சிவகாமி சமேத நடராஜர், மண்டபத்தில் எழுந்தருளியதும் வீதிஉலா இல்லாமல் கோவில் வளாகத்தில் ஆனித்திருமஞ்சன விழா நடந்தது. விழாவில் கோவில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.