ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்திற்கு நான்காவது தினம் அல்லது திதியாக வருவது சங்கடஹர சதுர்த்தி எனவும், அமாவாசை தினத்திற்கு நான்காவதாக வருவது சதுர்த்தி தினம் எனப்படுகிறது. இந்த இரண்டு சதுர்த்தி தினங்களும் விநாயகர் பெருமானை வழிபடுவதற்குரிய சிறந்தத தினமாக இருக்கிறது. அதிலும் தெய்வீக மாதமாக இருக்கும் பங்குனி மாதத்தில் வரும் சதுர்த்தி தினத்தில் விரதம் இருந்து விநாயக பெருமானை வழிபடுவதால் நன்மைகள் பல உண்டாகிறது.
சிவபெருமானுக்கு எப்படி பிரதோஷ வழிபாடு விஷேஷமோ அதே போல விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி வழிபாடு மிகவும் விஷேஷம் ஆகும். சங்கடஹர சதுர்த்தி அன்று முறையாக விரதம் இருந்து பிள்ளையாரை எவர் ஒருவர் வழிபடுகிறாரோ அவருக்கு பித்ருதோஷம் உள்ளிட்ட பல தோஷங்கள் நீங்கும், கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். அதோடு நம் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். சங்கடம் என்றால் கஷ்டம் என்று பொருள் ஹர என்றால் அழிப்பது என்று பொருள். விரதம் இருந்து சங்கடங்களை அழிப்பதற்கான நாளையே சங்கடரஹர சதுர்த்தி என்கிறோம்.
பங்குனி சதுர்த்தி தினத்தன்று அதிகாலை நீராடி, உணவு ஏதும் உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதனாகிய விநாயகப்பெருமான் நினைவோடு விரதம் இருக்க வேண்டும். உணவு சாப்பிட்டாக வேண்டிய நிலையில் இருப்பவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிடலாம். மாலையில் அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்கோ அல்லது அவரது சந்நிதிகோ சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனை, பூஜையில் கலந்து கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். வழிபாடு முடிந்ததும் ஆலயத்தை எட்டு முறை வலம் வர வேண்டும். கோயிலில் அனைத்து பூஜை வழிபாடுகள் முடிந்ததும் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ளவேண்டும்.
பங்குனி மாத வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று மேற்கூறிய முறையில் விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய்கள் நீங்க பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து பல வகையான கஷ்டங்களை சந்தித்து வருபவர்களுக்கு, அக்கஷ்டங்கள் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். குழந்தைகளுக்கு இருக்கும் மந்த புத்தி நீங்கி, அறிவுகூர்மை உண்டாகி கல்வி, கலைகளில் சிறப்பார்கள். கடன்கள் இல்லாத வாழ்க்கை வாழும் சூழல் ஏற்படும். செல்வ சேமிப்பு அதிகரிக்கும்.