ஆடி மாதத்தில் சூரியன், கடக ராசியில் சஞ்சரிப்பார். அந்த மாதத்தில் சுக்ரனுக்குரிய நட்சத்திரமான பூரம் வரும் நாள் தான் ‘ஆடிப்பூரம்’ என்றழைக்கப்படுகிறது. அது 24.7.2020 (வெள்ளிக்கிழமை) வருகிறது. அன்று திருக்கோவில்கள் தோறும் உற்சவம் நடைபெறும். குழந்தைச் செல்வம் இல்லாத தம்பதியர், இந்த நாளில் விரதம் இருந்து செய்யும் பரிகாரம் நல்ல பலனைத் தரும். இந்த ஆடி மாதத்தில் விரதம் இருந்து அம்பிகை வழிபாட்டை நம்பிக்கையோடு செய்தால் புத்திரப்பேறு கண்டிப்பாக கிடைக்கும்.
இந்த பூரத்திற்கு சில நாட்கள் முன்னதாக பச்சைப் பயிறைத் தண்ணீரில் நனைய வைப்பர். ஆடிப்பூரத்தன்று அது நன்கு முளைக்கட்டிவிடும். அதை அம்பிகைக்கு நைவேத்தியம் செய்துவிட்டு குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் சாப்பிட்டால் வாரிசு கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆடிப்பூரத்தன்று விரதமிருந்து அம்பிகை வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.