ஓ தர்மபுத்திரா !! பாபங்குச ஏகாதசி அன்று அனந்தசயனத்தில் இருக்கும் பத்மநாபனை பக்தியோடு வழிபடுவோர், இவ்வுலகில் வேண்டுவனயாவும் பெற்று சுக, போகமாக வாழ்வதோடு மரணத்திற்குப் பின்னர் மோட்சப் பிராப்தியும் அடைவர் என்றார்.
மேலும் 100 அஸ்வமேத யாகம் மற்றும் 100 ராஜசூய யாகம் செய்வதால் கிட்டும் புண்ணிய பலனானது, இப்புனித ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதால் கிடைக்கும் புண்ணியத்தில் 16ல் 1 பங்கிற்கு சமமானதாகும் என்றார். அளவிலா கடும் பாவங்கள் செய்திருந்தாலும் பாவங்களை அழித்து பக்தர்களை காக்கும் பரம்பொருளான ஸ்ரீஹரியை வணங்குவதன் மூலம் நரகத்தின் தண்டனையிலிருந்து விடுபடலாம்.
பகவானின் புனித திருநாமங்களான ராம், விஷ்ணு, ஜனார்த்தனன், கிருஷ்ணன் இவற்றில் ஏதாவது ஒன்றை ஜபிப்பவர் யமலோகத்தை காண மாட்டார் என்றார். மேலும் எனக்கு பிடித்த இந்த பாபங்குச ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பவரும் யமலோகத்தை காணவே மாட்டார்கள் என்றார். அதே போல, சிவநிந்தனை செய்யும் வைணவர்களும், ஹரிநிந்தனை செய்யும் சைவர்களும் நிச்சயம் நரகத்தையே அடைவர் என்றுரைத்தார்.
பாபங்குச விரத புண்ணியத்திற்கு இணை வேறெதுவும் இந்த மூவுலகிலும் இல்லை என்றும், இவ்விரதத்தை நன்முறையில் விதிமுறைப்படி கடைபிடிப்பவர் யமலோகத்தை காணத் தேவையின்றி, விஷ்ணு தூதர்களால் இறைவன் ஸ்ரீஹரியின் இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர் என்றார். மேலும் அவர் கூறியதாவது, ஓ யுதிஷ்டிரா !! கங்கை, கயா, காசி போன்ற புண்ணிய தீர்த்தங்களில் நீராடி இறைவனை வணங்குவதால் கிட்டும் பலனை விட மேலான பலனை அளிக்க வல்லது பாபங்குச ஏகாதசி விரதம் என்றார்.
மேலும், ஓ யுதிஷ்டிரா !! இவ்விரத நாளில், பகலில் உபவாசத்தோடு, இரவில் கண்விழித்து பகவத் நாம ஸ்மரணம், பாகவதம் படித்து விரதம் கடைபிடிப்பவர் வைகுந்தத்தை அடைவதோடு மட்டுமின்றி, அவரது தாய், தந்தை, மற்றும் மனைவி வழியின் 10 தலைமுறை முன்னோர்களும் மோட்சப் பிராப்தி அடைவர் என்று கூறி அருளினார்.
மேலும் பாபங்குச ஏகாதசி விரதத்தினை நன்முறையில் அனுஷ்டிப்பதால் மோட்சப் பிராப்தி பெறுவதோடு மட்டுமின்றி, முன்னோர்கள் அனைவரும் பூலோக பிறப்பிற்கு முந்தைய நிலையான வைகுந்த ரூபத்தினை அடைவர் என்றார். ஓ அரசர்களில் தலை சிறந்தவனே !! குழந்தை, இளைஞர், முதியவர் என்று யார் இந்த விரதத்தினை அனுஷ்டித்தாலும் அவர்கள் மறுபிறவி என்னும் சக்கரத்தில் இருந்து விடுதலை பெறுவதோடு, வைகுந்த பிராப்தியும் அடைவர் என்றார்.
மேலும் இந்த பாபங்குச ஏகாதசி நன்னாளில் தங்கம், எள், தானியம், பசு, விளைநிலம், குடை, குடிநீர், ஜோடி செருப்பு, இவற்றில் அவரவர் வசதிக்கேற்ப தானம் செய்பவர் யமதர்மனை காண மாட்டார்கள் என்றார். ஆனால் இப்புவியில் இத்தகு தானம் செய்யாமல் இருப்பவரது சுவாசமானது, கொல்லன் பட்டறையில் துருத்தியில் இருந்து வெளிவரும் காற்றினை ஒத்தது என்றார்.
மேலும் இப்பிறவியில் நீண்ட ஆயுள், உயர் குலத்தில் பிறப்பெடுத்தல், நோய் நொடியின்றி திடமான ஆரோக்கியம் ஆகியவற்றை அடைந்தவர் தனது முற்பிறவிகளில் செய்த நற்காரியங்களால் அவற்றை பெற்றவராகிறார். ஆனால் இந்த பாபங்குச ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பவர் இவற்றை எல்லாம் விட உயர்வான இறைவன் ஸ்ரீஹரியின் இருப்பிடமான வைகுந்தத்தை அடைவர் என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரனிடம் கூறியருளினார்.
பாபங்குச ஏகாதசி விரதத்தின் மகிமையை உணர்த்தும் பிரம்ம வைவர்த்த புராணத்தின் படலம் நிறைவுற்றது.
****ஓம் நமோ பகவதே வாசுதேவாய****