எல்லோரும் அலங்காரம் செய்து கொள்வதில் பிரியம் வைப்பார்கள். பொதுவாக ஒவ்வொரு மனிதரும் மூன்றுவித காரங்களில் நம்பிக்கை வைத்தாலே முன்னேற்றங்கள் வந்து சேரும். ஒன்று ‘ஓம்காரம்’, மற்றொன்று ‘பிரகாரம்’, மூன்றாவது ‘பரிகாரம்.’ எப்படிப்பட்ட துயரங்கள் வந்தாலும் அதை மாற்றுவது பரிகாரங்கள் தான். வெயிலின் கடுமையை குறைக்க குடையைப் பிடிப்பது போல, அதிகத் துயரத்தை அளவோடு மாற்றிக் கொடுப்பது பரிகாரமாகும்.
சுய ஜாதகத்தில் தசாபுத்தி பார்த்து பாக்கிய ஸ்தானம், பார்க்கும் கிரகம், இருக்கும் கிரகம் பார்த்து ஆராய்ந்து தேர்ந்தெடுக்கும் கோவில்களில் பிரகாரங்களையும், எண்ணிக்கையின் அடிப்படையில் நீங்கள் வலம் வர வேண்டும். அடிமேல் அடியெடுத்து வைக்கும் பிரகாரம் ‘முன் நோக்கிய பிரகாரம்’, ‘பின்னோக்கிய பிரகாரம்’ என்று இருக்கின்றன. அதில் தங்களுக்கு பலன் தருவதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அங்ஙனம் பிரகார வலம் வரும்பொழுது ‘ஓம்காரம்’ மற்றும் சிவநாமங்களை உச்சரித்துக்கொண்டு செல்லும் பொழுது மேலும் நற்பலன்களை நாம் காணலாம். பலவித காரங்களில் ‘அகங்காரம்’, ‘அதிகாரம்’, ‘பலாத்காரம்’ போன்ற காரங்களை விலக்கிவிட்டு, பரிகாரம், பிரகாரம், ஓம்காரம் ஆகிய காரங்களின் மீது நம்பிக்கை வைத்தால் நாளும் நன்மைகளைச் சந்திக்கலாம்.