கும்பகோணம்: மாசி மகம் திருவிழா கும்பகோணத்தில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோவில்களில் கோலாகலத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அங்குள்ள ஆதிகும்பேசுவரர் கோயில், காசி விசுவநாதர் கோயில், காளகஸ்தீசுவரர் கோயில், அபிமுகேசுவரர் கோயில், சோமேசுவரர் கோயில், கௌதமேசுவரர் கோயில் ஆகியவற்றில் மாசி மக விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதேபோல, சக்கரபாணி கோயில், ராஜகோபாலசுவாமி கோயில், ஆதிவராக பெருமாள் கோயில்களிலும் விழா நடைபெறுகிறது. மார்ச் 8 ஆம் தேதி மகாமகம் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
மகத்தில் பிறந்தவர் ஜெகத்தை ஆள்வார் என்பது ஜோதிட வாக்கு. எல்லா மாதத்திலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதம் வரும் மகம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நாளில்தான் உமா தேவியார் தக்கன் என்பவரின் மகளாக அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. தச்சன் தனது மகளாக சிவபெருமானின் சக்தியாகிய உமா தேவியார் வந்து பிறக்க வேண்டும் என்று வேண்டி தவம் இருந்தார். அவனது தவத்தை மெச்சிய சிவன் அவன் முன்தோன்றி அவன் கேட்ட வரத்தை வழங்கினார். உமா தேவியாரும் தச்சனுக்கு மகளாகப் பிறந்தார். இறைவியே மகளாக பிறக்க அந்த குழந்தைக்கு தாட்சாயிணி என பெயரிட்டு வளர்த்து சிவபெருமானுக்கு திருமணம் செய்து வைத்தார். தச்சன். இறைவன் அவதார தினம் என்பதால் மாசி மகம் மகத்துவம் பெற்றது.
மாசி மகம் திருவிழா
மாசி மாதம் மக நட்சத்திரத்துடன் இணைவது மாசிமகமாகத் திகழ்கிறது. சிவன், விஷ்ணு, முருகன் ஆகிய மூவருக்கும் கோயில்களில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். மக நட்சத்திரத்திற்கு அதிபதியான கேது பகவான் ஞானத்தையும் மோட்சத்தையும் அருளக்கூடியவர். கோடீஸ்வர யோகத்தையும் வழங்கக்கூடிய வல்லமை உள்ளவர். மாசி மாதத்தில் கேதுவின் நட்சத்திரமான மக நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்க அப்போது சிம்ம ராசி நாதன் சூரியன், கும்ப ராசியில் இருந்து நேரடியாக சந்திரனை பார்க்கும் காலம் மாசி மகம்.
குல தெய்வ வழிபாடு
மோட்சத்தை அருளக்கூடிய கேதுபகவான் நட்சத்திரமாக மகத்தில் இந்த நாள் அமைகிறது. இதனை கடலாடும் நாள் என்றும் தீர்த்தமாடும் நாள் என்றும் சொல்வார்கள். இந்நாளில் விரதம் இருந்து குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பலவிதமான தானம் செய்யலாம். தானம் செய்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமையும் சகல தோஷங்களும் நீங்கும். மாசி மகம் நாளில் கும்பகோணத்தில் தீர்த்தவாரி திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு மாசி மகம் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
மகா மகம் திருவிழா
ஆண்டுதோறும் மாசி மாத மக நட்சத்திரத்தன்று மாசி மக விழா கொண்டாடப்படுவது வழக்கம். இதுவே, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவாகக் கொண்டாடப்படுகிறது. கும்பகோணத்தில் மகாமகம் தொடர்புடைய 12 சிவன் கோயில்களிலும், 5 பெருமாள் கோயில்களிலும் மாசி மக விழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு இந்த விழா மார்ச் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது.
சிவன் விஷ்ணு ஆலயங்கள்
கும்பகோணம் மகாமகம் தொடர்புடைய ஆதிகும்பேசுவரர் கோயில், காசி விசுவநாதர் கோயில், காளகஸ்தீசுவரர் கோயில், அபிமுகேசுவரர் கோயில், சோமேசுவரர் கோயில், கௌதமேசுவரர் கோயில் ஆகியவற்றில் மாசி மக விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதேபோல, சக்கரபாணி கோயில், ராஜகோபாலசுவாமி கோயில், ஆதிவராக பெருமாள் கோயில், ஆகியவற்றில் சனிக்கிழமை பிப்ரவரி 29ஆம் தேதி மாசி மக விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருத்தேரோட்டம்
ஆதி கும்பேசுவரர் கோயிலில் மார்ச் 2ஆம் தேதி அறுபத்து மூவர் வீதி உலாவும், 3ஆம் தேதி ஓலைச்சப்பரமும் நடைபெற்றது. நாளை மறுநாள் 7ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது. அபிமுகேசுவரர், காசி விசுவநாதர் கோயில் சார்பில் நாளை மாலை மகாமகக் குளக்கரையில் தேரோட்டம் நடைபெறவுள்ளது.
தீர்த்தவாரி திருவிழா
மாசி மக நாளான மார்ச் 8ஆம்தேதி அதிகாலை 4 மணி முதல் மகா மக குளத்தில் பக்தர்கள் புனித நீராடத் தொடங்குவர். பிற்பகல் 12.30 மணிக்கு ஆதிகும்பேசுவரர் உள்ளிட்ட சிவன் கோயில்களிலிருந்து உற்சவ மூர்த்திகள் மகாமக குளக்கரையில் எழுந்தருள, தீர்த்தவாரி நடைபெறவுள்ளது.
இதேபோல, மார்ச் 8ஆம் தேதி பெருமாள் கோயில்களிலிருந்து உற்சவர் புறப்பாடும்,காவிரி சக்கர படித்துறையில் காலை 10 மணி முதல் 11.45 மணி வரை தீர்த்தவாரி கண்டருளல் வைபவமும் நடைபெறவுள்ளது. மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் கோவில்களில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
மாசி மகம் விரதம் இருக்க விரும்புபவர்கள் காலையில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, உலர்ந்த ஆடைகளை அணிந்து சிவசிந்தனையுடன் சிவன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்ய வேண்டும். ஒரு நேரம் மட்டும் சாப்பிடலாம். இரவு நேரத்தில் பால், பழம் சாப்பிடலாம். அன்று நாள் முழுவதும் சிவ சிந்தனையில் இருக்க வேண்டும்.