ஆடி தேய்பிறை அஷ்டமி தினத்தில் விரதம் இருந்து நாம் மேற்கொள்ள வேண்டிய பைரவர் வழிபாடு முறையையும், அதனால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் அஷ்டமி தினங்கள் வருகின்றன.
இதில் தேய்பிறை அஷ்டமி தினம் சிவபெருமானின் ஒரு வடிவமாக தோன்றியவர் ஆன ஸ்ரீ பைரவரின் வழிபாட்டுக்குரிய ஒரு சிறந்த தினமாக இருக்கிறது.
அதிலும் ஒவ்வொரு தினமும் இறைவழிபாட்டிற்குரிய தினமாக இருக்கும் ஆடி மாதத்தில் வியாழக்கிழமையில் தேய்பிறை அஷ்டமி வருவது மிகவும் விஷேச பலன்களை பக்தர்களுக்கு தரவல்ல ஒரு அற்புத தினமாக இருக்கிறது. வியாழக்கிழமை தேய்பிறை அஷ்டமி அன்று ராகு கால நேரமான 1.30 மணியிலிருந்து 3.00 மணிக்குள்ளாக பைரவர் கோயில் அல்லது சிவன் கோயிலில் இருக்கின்ற சந்நிதிக்கு சென்று பைரவருக்கு சிவப்பு நிற மலர்களை சமர்ப்பித்து, செவ்வாழை நைவேத்தியம் செய்து, தேங்காயை இரண்டாக உடைத்து அதில் நெய் அல்லது விளக்கெண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி பைரவருக்குரிய மந்திரங்கள் துதித்து பைரவரை வணங்க வேண்டும்.
மேலும் இச்சமயத்தில் பைரவர் காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 எண்ணிக்கையில் துதிப்பது நல்லது.
மேற்கண்ட முறையில் ஆடி மாத தேய்பிறை அஷ்டமியன்று விரதம் இருந்து பைரவரை வழிபடுபவர்களுக்கு சிறிது காலத்திலேயே எப்படிப்பட்ட பணக்கஷ்டங்களும் நீங்கும். தொழில், வியாபாரங்களில் நேரடி மற்றும் மறைமுக எதிரிகளால் தொல்லைகள் ஏற்படாமல் காக்கும்.
பொருட்கள் களவு போகாமல் பாதுகாக்கும். வருமானம் பெருகும். பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகள் அனைத்தும் தீரும். துஷ்ட சக்திகளினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள்.
உங்களுக்கு செய்யப்படும் மாந்திரீக ஏவல்கள், செய்வினை தந்திரங்கள் பலிக்காமல் போகும். கொடிய நோய்கள் அனைத்தும் சிறிது சிறிதாக குணமாகும்.