ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாகும். 2-ல் அமர்ந்த சூரியன், குடும்பம் அமைவதை காலதாமதப் படுத்துகிறது 7-ல் அமர்ந்த சூரியன் களத்தரத்திற்கு தோஷத்தை ஏற்படுத்துகிறது. 8-ல் அமர்ந்த சூரியன் திருமணத் தடையை ஏற்படுத்தும். மகர, கும்ப லக்னத்தாருக்கு 7, 8-ல் அமர்ந்த சூரியன் விதிவிலக்கு பெறும்.
ஒரு நபரின் ஜாதகத்தில் சூரியனின் நிலை கெட்டிருந்தாலும், பாதகமான சூரிய திசை நடப்பதாலும் சூரிய தோஷம் ஏற்படுகிறது. மேலும் தங்கள் தந்தையை அவரின் வயதான காலத்தில் சரியாக பராமரிக்காதவர்களும் சூரிய தோஷம் ஏற்படும். சூரிய தோஷம் ஏற்பட்ட நபர்களுக்கு உடல் அடிக்கடி நோய்வாய்ப்படும். கண், இதயம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும். கம்பீரம் இருக்காது. தங்களின் தகுதிக்கு கீழான வேலைகள், பணிகளை செய்யும் நிலை ஏற்படும்.
பணியிலிருப்பவர்களுக்கு பதவி உயர்வு பெறுவதில் தடை மற்றும் தாமதங்கள் உண்டாகும். சூரிய தோஷம் நீங்கி சூரியனின் நற்பலன்களை பெறுவதற்கு மாதம் ஒரு ஞாயிற்று கிழமை தினத்தில் ஒரு வேளை உணவை தவிர்த்து விரதம் இருந்து, சூரிய பகவானுக்குரிய மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமை அன்று கோவிலுக்கு சென்று சிவபெருமானையும், நவகிரகங்களில் சூரிய தேவரையும் வணங்கி அந்த கோவிலிலோ அல்லது கோவிலுக்கு அருகிலோ அரச மரம் இருந்தால், அந்த அரச மரத்திற்கு உங்கள் கைகளால் நீரூற்றி வருவது உங்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தும். “ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி” சூரியன் வம்சத்தில் பிறந்தவர். தினந்தோறும் ஸ்ரீ ராமரை பிரார்த்தித்து வந்தால் சூரிய தோஷம் நீங்கும்.
ஒரு தேய்பிறை ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு செம்பு நாணயத்தை உங்கள் தலையை மூன்று முறை சுற்றி, ஓடும் ஆற்றில் வீசு வேண்டும். உங்கள் கைகள் மற்றும் விரல்களில் செம்பு வளையம் அல்லது செம்பு மோதிரத்தை எப்போதும் அணிந்திருப்பது நல்லது.
கருப்பு நிற பசு மாட்டிற்கு ஞாயிற்று கிழமையில் உணவளிப்பதும் உங்களின் சூரிய தோஷத்தை போக்கும் சிறந்த பரிகார முறையாகும். ஞாயிற்று கிழமை காலை 8 மணி முதல் 9 மணி வரையான சூரிய ஓரையில் 1 கிலோ கோதுமை தானம் தருவதுடன் 6 வாரம் சிவ வழிபாடு செய்ய வேண்டும்.