🌻நாம் செய்யும் தொழிலானது லாபகரமாக சென்றால் நமக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராது. சிலர் கடன் வாங்கி தான் சொந்த தொழில் ஆரம்பிப்பார்கள். அந்த தொழிலானது லாபமாக சென்று விட்டால், போட்ட முதலை சுலபமாக எடுத்துவிடலாம். கடனையும் திருப்பி தந்துவிடலாம். தொழில், எதிர்பாராத விதமாக நஷ்டமாகி விட்டது. தொழிலில் முடக்கம் ஏற்பட்டு விட்டது. அடுத்தது என்ன நேரிடும். கடன் தொல்லை கழுத்தை நெரிக்கும். தொழிலையும் சரிவர நடத்த முடியாது. கடனையும் சொன்ன நேரத்தில் திருப்பிக் கொடுக்க முடியாது. வட்டியும் கட்ட முடியாமல் திண்டாடி வருவோம். இந்த நேரத்தில் ஒரு மனிதன் என்னதான் செய்வான்? தன்னுடைய வாழ்க்கையை வெறுத்து, இறுதிக் கட்டத்துக்கு சென்ற மனநிலைக்கு வந்து விடுவான். இவர்களுக்கு ஆன்மீக ரீதியாக சில தீர்வுகள் உள்ளது. தொழில் சிறப்பாக நடக்கவும், கடன் பிரச்சனையில் இருந்து வெளியே வரவும் இந்த பரிகாரங்களை செய்யலாம்.
🌻தொழிலை வெற்றிகரமாகவும், லாபகரமாகவும் பெருகிக் கொண்டே போக, நம்முடைய விடா முயற்சியும், உழைப்பும்தான் முதல் பரிகாரம். மன தைரியத்தை விடாமல் போராடிக் கொண்டே இருந்தால் மட்டுமே நமக்கு எதிலும் வெற்றி கிடைக்கும். இதை முதலில் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
🌻இதுதவிர ஜாதக ரீதியாக ஏதாவது தோஷங்கள் இருந்தாலும், நம் நேரம் சரியில்லை என்றாலும், கண் திருஷ்டியால் ஏற்படும் கோளாறுகளுக்கும், ஆன்மிக ரீதியாக சில பரிகாரங்களை செய்து வருவதும் அவசியம்.
🌻நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் லாபத்தைத் தரக்கூடிய நர்மதேஸ்வரர் லிங்கத்தை வைத்து, தினம்தோறும் வழிபடுவது நல்ல பலனை தரும். வெறுமனே லிங்கத்தை வைத்து விட்டால் மட்டும் போதாது. தினம்தோறும் பூ சாத்தி, தூபம் காட்டுவது நல்ல பலன்தரும். உண்மையான பக்தியும் அவசியம் தேவை.
🌻உங்களது தொழில் சில நாட்களுக்கு முன்பாக நன்றாக நடந்து இருக்கலாம். இதனால் கண்திருஷ்டி கோளாறுகள் மூலமாகவும் வியாபாரம் நஷ்டத்தில் செல்லும். இப்படியிருக்க, ஞாயிற்றுக்கிழமை தோறும், நீங்கள் தொழில் செய்யும் இடத்திலோ, கடையிலோ ஒரு கைப்பிடி அளவு மிளகு மற்றும் கிராம்பு இவை இரண்டையும் சேர்த்து நான்கு மூலை முடுக்கில், தூவிய படி போட்டுவிடுங்கள். அதன்பின்பு தென்னை ஓலை விளக்குமாறால் இவை அனைத்தையும் கூட்டி, கால் படாத இடத்தில் போட்டுவிடலாம். கண்திருஷ்டி அனைத்தும் நீங்கிவிடும்.
🌻மாதந்தோறும் வரும் அமாவாசை அன்று தொழில் செய்யும் இடத்தை சுத்தப்படுத்தி, சாம்பிராணி தூபம் போட்டு, தீபமேற்றி இறைவனை மனதார வழிபடுவது நல்ல பலனைத் தரும்.
🌻சனிக்கிழமை அன்று ஒரு அரச மர இலையை எடுத்து வந்து, நீங்கள் தொழில் செய்யும் இடத்தில், பூஜை செய்யும் இடத்தில் வைத்து, தூபம் போட்டு வணங்கி அதன்பின்பு அந்த இலையை நீங்கள் அமரும் நாற்காலிக்கு கீழே வைத்துவிடுங்கள். இலையின் மேல் அமரக்கூடாது. நாற்காலிக்கு அடியில் தான் இருக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 7 சனிக்கிழமை செய்தால் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
🌻நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் ஒரு கண்ணாடி டம்ளரில், கைப்பிடி அளவு கருப்பு உளுந்தை போட்டு வைத்துக் கொள்ளலாம். இது யார் கண்களுக்கும் படக்கூடாது. கடைக்கு வருபவர்களின் கண்களுக்குத் தெரியாமல் ஒரு இடத்தில் இதை வைத்துக் கொள்ளுங்கள். அந்த கண்ணாடி டம்ளருக்கு, தினந்தோறும் கற்பூரம், ஊதுபத்தி ஏற்றி வழிபடுவது நல்ல பலனைத் தரும். மாதத்திற்கு ஒரு முறை பழைய பருப்பை பறவைகளுக்குப் போட்டுவிட்டு, புதியதாக மாற்றிக் கொள்ளலாம்.
🌻மாதத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ கோவிலிலிருந்து தீர்த்தத்தை வாங்கிக் கொண்டுவந்து, நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் தெளிப்பது நல்ல பலனைத் தரும். கங்கா தீர்த்தம் கிடைத்தால் இன்னும் சிறப்பு.
———————————————————————–
🌹💐கடன் தொல்லையிலிருந்து விடுபட சுலபமான பரிகாரம்..!🌹💐
🍘7 முக ருத்ராட்சம், 8 முக ருத்ராட்சம் இந்த இரண்டு ருத்ராட்சத்திற்கு நடுவே மூன்று முக ருத்ராட்சத்தை கோர்த்துக் கொள்ள வேண்டும். இதை ஒரு சிவப்பு கயிறு கோர்த்து கழுத்தில் அணிந்து கொண்டால் கழுத்தை நெறிக்கும் கடனை கூட சுலபமாக தீர்க்கும் வழி நம் கண்களுக்குப் புலப்படும்.
🌴உங்களது வீட்டு அருகில் இருக்கும் மகாவிஷ்ணு கோவில், அதாவது பெருமாள் கோவிலில், செவ்வாய்க்கிழமை அன்று வாழை மரத்தை நட்டு வைப்பது ஒரு நல்ல பரிகாரம். அந்தக் கோவிலில் மரத்தை நடுவதற்கு கோவில் நிர்வாகிகளிடம் அனுமதி கேட்டுக் கொண்டு, செவ்வாய்க்கிழமை இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நரசிம்ம பெருமாள் கோவில் செய்தால் இந்த பரிகாரம் இன்னும் சிறப்பாக இருக்கும்.
🌷ஜாதக கட்டத்தில் செவ்வாயின் ஆதிக்கம் சரியாக இல்லை என்றால் கடன் பிரச்சனை அதிகமாக இருக்கும். இதை சரிசெய்ய பெண்களாக இருந்தாலும், ஆண்களாக இருந்தாலும், கையில் செம்பு வளையம் அணிந்து கொள்வது மிகச் சிறந்தது. செவ்வாயின் பாதிப்பை இது சரிசெய்யும். முடிந்தால் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் கூட அருந்துவதை பழக்கமாக வைத்துக் கொள்ளலாம்.
🌹உங்கள் தொழில் சிறப்பாக நடந்து நல்ல முன்னேற்றம் அடைந்து, நல்ல லாபத்தைப் பெற்றால், அந்த லாபத்தில் இருந்து ஒரு சிறு தொகையை எடுத்து, உங்களால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்வது நல்ல பலனைத் தருவதோடு சேர்த்து, புண்ணியத்தையும் தேடித்தரும் என்பதை மறந்து விடாதீர்கள்.