தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாட்டில் மிகவும் பழமை வாய்ந்த ஆவுடைஅம்பாள் உடனுறை திருமூலநாதர் திருக்கோவில் உள்ளது.
மகா சிவராத்திரி நாளில் சிவனடியார்கள் வணங்கும் நவகைலாய சிவாலயங்களைப் போல் நவலிங்கபுரம் என்று அழைக்கப்படும் சிவாலயங்களில் முதலாவது சிவாலயம் என்றும், முப்பீட தலங்களில் முக்கியமான சிவாலயம் என்ற பெருமையும் இந்தக் கோவிலுக்கு உண்டு.
ஆண்டு தோறும் தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய சூரியன் வடதிசை நோக்கிப் பயணிக்கும் உத்தராயண காலத்தில் மார்ச் 21,22, 23 தேதிகளிலும் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் முடிய தெற்கு நோக்கிச் சூரியன் பயணிக்கும் தட்சிணாயன காலத்தில் செப்டம்பர் 21, 22, 23 தேதிகளில் இந்தக் கோவில் மூலவர் திருமூலநாதர் மீதும் ஆவுடை அம்பாள் மீதும் சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதற்கு ஏற்றபடி இந்தக் கோவில் கட்டப்பட்டுள்ளது.
அதன்படி இன்று காலை சூரிய உதய நேரத்தில் சிவனடியார்களும் ஊர்ப்பொதுமக்களும் இந்த அதிசய நிகழ்வைக்கண்டு திருமூலநாதரைத் தரிசிக்கத் திரளாகக் கூடினர். சரியாக 6.03 மணிக்குக் கிழக்கில் உதயமான சூரியக்கதிர்கள் மெல்ல மெல்லகோவிலுக்குள் நுழைந்து மூலவர் மீது பட்டு ஒளி வீசியது.
இந்தக் கண்கொள்ளாக் காட்சியைத் தரிசித்த சிவனடியார்களும் பொதுமக்களும் எம்பெருமானின் திருக்கைலாயக்காட்சியாக நினைத்து அரகர மகாதேவா, தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சிவ கோஷமுழக்கமிட்டனர்.
பின்னர் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகளைக் கோவில் அர்ச்சகர் சண்முகசுந்தர பட்டர் நடத்தினார். இதற்கான ஏற்பாடுகளைத் திருமூலநாதர் பக்தர் பேரவையினர் செய்திருந்தனர்.