திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் திருக்காரவாசல் தியாகராஜர் கோவிலும் ஒன்று. கண்நோய்களை தீர்க்கும் கண்ணாயிரநாதா் அருள்பாலிக்கும் திருக்காரவாசல் தியாகராஜர் கோவில் சோழ நாட்டு காவிரி தென்கரை தலங்களில் 119-வது தலமாக விளங்குகிறது. இத்தலம் காரகில்(ஒரு வகை மரம்) மரக்காடாக இருந்ததால் திருக்காரகில் என்ற பெயர் பெற்றது. காலப் போக்கில் இந்த பெயர் திருக்காரவாசல் என பெயர் பெற்று அழைக்கப்பட்டு வருகிறது.
இந்த கோவிலில் மூலவராக உள்ள கண்ணாயிரநாதர், சிற்றுளி கொண்டு செதுக்கப்படாத சுயம்பு மூர்த்தியாக உள்ளாா். இந்திரனுக்கு அசுரர்களால் பேராபத்து வர இருந்தபோது முசுகுந்த சக்கரவர்த்தி உதவியுடன் அசுரனை, இந்திரன் வெற்றி கண்டார். வெற்றிக்கு உதவிய முசுகுந்த சக்கரவர்த்தியிடம் என்ன வேண்டும்? என இந்திரன் கேட்க, அதற்கு இந்திரன் பூஜை செய்து வரும் விடங்கர் லிங்கத்தை தரும்படி முசுகுந்த சக்கரவர்த்தி கேட்டுள்ளார்.
அந்த லிங்கத்தை தர விருப்பம் இல்லாத இந்திரன், தேவ சிற்பியை வரவழைத்து தான் வணங்கும் லிங்கத்தை போன்று 6 லிங்கத்தை செய்து காண்பித்துள்ளார். அதில் இந்திரன் வணங்கிய விடங்கர் லிங்கத்தை முசுகுந்த சக்கரவர்த்தி கண்டறிந்தார். இதைத்தொடர்ந்து விடங்கர் லிங்கத்துடன், 6 லிங்கத்தை முசுகுந்த சக்கரவர்த்தியிடம் இந்திரன் வழங்கினார்.
இதை பெற்றுக் கொண்ட முசுகுந்த சக்கரவர்த்தி 7 இடங்களில் அவைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதன்படி திருவாரூரில் உள்ள விதிவிடங்கர், திருநள்ளாறில் உள்ள நகர விடங்கர், நாகையில் உள்ள சுந்தர விடங்கர், திருக்குவளையில் உள்ள அவனி விடங்கர், திருவாய்மூரில் உள்ள நீல விடங்கர், வேதாரண்யத்தில் உள்ள அவனி விடங்கர் மற்றும் திருக்காரவாசலில் உள்ள ஆதிவிடங்கர் என்ற மரகத லிங்கம் அமைக்கப்பட்டு இவை ஏழும் சப்தவிடங்கர் தலங்களாக விளங்குகிறது.
ஆதிசேஷனுக்கு கண் கொடுத்த தலமாகவும், பார்வையற்ற பெண் ஒருவர் இறைவனை காண வேண்டியபோது அவருக்கு கண் பார்வை அருளிய தலமாகவும் திகழ்கிறது. சப்தவிடங்கர் தலங்களில் மூலவர் சுயம்பு லிங்கத்தில், நேரடியாக அபிஷேகம் நடைபெறுவது திருக்காரவாசல் ஆயிரம் கண்ணுடைய கண்ணாயிரநாதருக்கு மட்டுமே, மூலிகை தைலம் மற்றும் தயிர், தேனுடன் அத்திப்பழம் கொண்டு அபிஷேகம் நடைபெறும். அபிஷேகம் செய்த அத்தி பழத்தை சாப்பிட்டு, தைலத்தை தலையில் தடவி வந்தால் தீராத பலவகையான கண் நோய் பிரச்சினைகளும் தீரும் என்பது ஐதீகம்.
கோவில் அமைப்பு
கருவறையில் கண்ணாயிரநாதர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கண்ணாயிரநாதருக்கு சமமாக, பக்கத்திலேயே ஆதிவிடங்க தியாகராஜரின் சன்னதி அமைந்திருக்கிறது. தியாகராஜர் சன்னதி முன்புள்ள நந்தி, நான்கு கால்களுடன் நின்று கொண்டிருக்கும் காட்சியை காணலாம். கிழக்கு நோக்கிய இக்கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லை.
முதல் வாயிலை கடந்து உள்ளே சென்றவுடன் கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், சற்று உயரத்தில் உள்ள நந்தி ஆகியவற்றைக் காணலாம். ஒரே இடத்தில் நின்று நேரே சிவபெருமானையும், வலதுபுறம் அம்பாளையும் தரிசிக்கலாம். அம்பாள் கைலாயநாயகி, இந்த தலத்திற்கு நடந்து வந்ததாகவும், அதற்கான பாதசுவடுகள் இருந்து வருகிறது. ஆயிரம் கண்ணுடன், சிவபெருமான் உக்கிரத்துடன் இருந்ததை தணிக்கும் வகையில் பறவையாக மாறி கைலாய நாயகி வந்ததாக வரலாறு. இந்த அம்பாளை வணங்கினால் கைலாயம் சென்ற அருள் பெறலாம்.
இதேபோல் காசியில் இருந்து நேரடியாக கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட விஸ்வநாதர் சிவலிங்கம் மற்றொரு சிறப்புக்குரியது. இதனை வணங்கினால் காசிக்கு சென்று வந்த பலனை அடையலாம். இங்கு உள்ள சன்னதியில் கல்லில் நடராஜர் அருள்பாலிக்கிறார். சந்திரசேகர், மாரியம்மன், மகாலெட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களுக்கு கல்லினால் ஆன சிலைகள் உள்ளது.
மேலும் சொர்ணாகர்ஷன பைரவர், கால பைரவர், பால பைரவர் சன்னதிகளும் இங்கு இடம் பெற்றுள்ளது. திருக்காரவாசல் தியாகராஜர் கோவில், கிரக தோஷ நிவர்த்தி தலமாகவும் உள்ளதால் இந்த கோவில் பக்தர்கள் மத்தியில் பிரசித்திபெற்ற கோவிலாக உள்ளது.
ருக்குட நடனத்தில் தியாகராஜர்
கண்ணாயிரநாதருக்கு பக்கத்தில் ஆதிவிடங்கர் தியாகராஜரின் சன்னதி அமைந்துள்ளது. இந்த தியாகராஜர் அருகில் பச்சை மரகதலிங்கமாக ஆதி விடங்கர் அருள் பாலிக்கிறார். நாள்தோறும் காலை, மாலை இரு வேளைகளிலும் அபிஷேகம் நடைபெறும். தியாகராஜர் வீர சிங்காதளத்தில் ருக்குட நடன காட்சியுடன் அருள் புரிகிறார். திருவாரூர் வீதி விடங்கர் தியாகராஜரின் அஜபா நடனத்தை கண்ட பதஞ்சலி முனிவர் எல்லா வகை நடனங்களையும் தனக்கு காட்டியருள வேண்டும் என இறைவனிடம் வேண்டியபோது திருக்காரவாசல் வந்தால் காணலாம் என்று தியாகராஜர் கூற, பதஞ்சலி முனிவருக்கு 7 வகையான தாண்டவங்களை ஆடி காட்டிய தலமாகவும் இத்தலம் விளங்குகிறது.
கோவிலில் விசேஷ நாட்கள்
வைகாசி விசாகம் அன்று இக்கோவிலில் பிரம்மோற்சவ விழா கொண்டாடப்படுகிறது. பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, கார்த்திகை முருகன் வழிபாடு மற்றும் நாள்தோறும் 6 கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. தியாகராஜருக்கு வருடப்பிறப்பு, ஆடி, தை, ஐப்பசி ஆகிய மாதங்களில் முதல் நாள், மார்கழி திருவாதிரை திருவிழா, புரட்டாசி பவுர்ணமி என ஆண்டிற்கு 6 முறை அபிஷேகம், திருவாதிரை திருவிழா வலது பாத தரிசனம், வைகாசி விசாகத்தில் இடது பாத தரிசனம் நடைபெறும். மேலும் வைகாசி விசாகத்தில் தேர்த்திருவிழா நடைபெறும். மாத பவுர்ணமி நாளில் முசுகுந்த அர்ச்சனை நடைபெறும். சிவராத்திரி, கார்த்திகை தீபத்தில் ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றி வழிபாடு நடைபெறும்.
தல விருட்சம் வில்வ மரம்-பலா
கோவிலுக்குள் நுழையும்போதே இடதுபுறம் வில்வ மரம் காட்சி தருகிறது. ஒற்றை, இரட்டை வில்வ இலைகள் உள்ள நிலையில் இங்கு மட்டும் 7, 9 என்று ஒரே கொத்தில் அத்தனை இலைகள் அதிசயமாக அமைந்துள்ளது. தல விருட்சமாக வில்வ மரமும், அதன் அருகில் பலாமரமும் விளங்குகிறது.
கோவிலுக்கு செல்லும் வழி
திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் 10 கிலோ மீட்டர் தொலைவில் திருக்காரவாசல் தியாகராஜர் கோவில் அமைந்துள்ளது. திருவாரூர்-திருத்துறைப்பூண்டி செல்லும் அனைத்து பஸ்களிலும் செல்லலாம்.கோவில் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.