தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் எமபயம் போக்கி நீண்ட ஆயுளை பக்தா்களுக்கு அருளும் சிவாலயமாக மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவில் திகழ்கிறது. இக்கோவில் இறைவனாக அமிர்தகடேஸ்வரரும், இறைவியாக அபிராமி அம்மையும் உள்ளனர். தன்னை நாடி வந்த பக்தன் மார்க்கண்டேயனின் உயிரை எமனிடம் இருந்து காத்த அமிர்தகடேஸ்வரரை வழிபட்டால் நோய் மற்றும் தோஷங்கள் நீங்கி நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் எம பயம் போக்கும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
அபிராமி அந்தாதி
தன்னை தஞ்சம் அடைந்த பக்தன் மார்கண்டேயனுக்காக காலனை சம்ஹாரம் செய்ததோடு 16 வயதில் முடியும் மார்க்கண்டேயனின் விதியை என்றும் சிரஞ்சீவியாக இருக்க அருளி மாற்றம் செய்தவர் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர்.
காலசம்ஹாரமூர்த்தி
தருமபுரம் ஆதீனம் மாசிலா மணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் கட்டுப் பாட்டில் இந்த கோவில் உள்ளது. இங்கு நவக்கிரக சன்னதி இல்லாதது சிறப்பாக கருதப்படுகிறது. இக்கோவில் மூலவராக அமிர்தகடேஸ்வரரும், உற்சவராக காலசம்ஹாரமூர்த்தியும் உள்ளனர். காலசம்ஹாரமூர்த்தியின் அருகில் அகத்திய முனிவரால் பூஜை செய்யப்பட்ட பாபஹரேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கோவிலின் தலவிருட்சமாக வில்வமரம் உள்ளது. மேலும் தீர்த்தமாக அமிர்தபுஷ்கரணி உள்ளது.
முற்காலத்தில் தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்து அவர்களுக்குள் பகிர முயன்ற போது முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபட மறந்தனர். இதனால் சினம் கொண்ட விநாயகர் இக்கோவிலில் ஒரு அமிர்தம் நிறைந்த குடத்தை மறைத்து வைத்ததாகவும் இந்த அமிர்தம் நிறைந்த குடமே சிவலிங்கமாக மாறியதால் இக்கோவில் அமிர்தகடேஸ்வரர் கோவில் என பெயர் பெற்றதாக புராண வரலாறு கூறுகிறது. அமிர்த குடத்தை மறைத்து வைத்த விநாயகர் கள்ள விநாயகர் என அழைக்கப்பட்டு தனி சன்னதியில் இக்கோவிலில் அருள்பாலிக்கிறார்.
பாசக்கயிற்றின் தடம்
மார்க்கண்டேயன் தனது உயிரை பாதுகாத்துக்கொள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரரை இறுகப்பற்றி வழிபட்டபோது எமன் தனது பாசக்கயிற்றை மார்க்கண்டேயர் மீது வீச பாசக்கயிறு மார்க்கண்டேயனோடு சேர்த்து சிவபெருமானையும் இறுக்கிறது. இதனால் சினம் கொண்ட சிவபெருமான் எமதா்மனை தனது காலால் உதைத்து தள்ளினார். எமதர்மன், சிவபெருமான் மீது வீசிய பாசக்கயிற்றின் தடம் தற்போதும் சிவலிங்க திருமேனியில் உள்ளது. அமிர்தகடேஸ்வரருக்கு பால் அபிஷேகம் நடக்கும்போது இந்த பாசக்கயிற்றின் தடத்தை காணலாம்.
கங்கை தீர்த்தம்
59 வயது முடிந்து 60 வயதை தொடங்குபவர்கள் இக்கோவிலில் உக்ரரத சாந்தி பூஜை செய்து வழிபடுகிறார்கள். 60 வயது முடிந்து 61 வயது தொடங்குபவர்கள் சஷ்டியப்தபூர்த்தி பூஜை செய்கின்றனர். 70 வயது முடிந்து 71 வயதை தொடங்குபவர்கள் பீமரத சாந்தி பூஜையும், 75 வயதை கடந்தவர்கள் விஜயரத சாந்தி பூஜையும், 81 வயது தொடங்குபவர்கள் சதாபிஷேகமும், 85 வயதை கடந்தவர்கள் கனகாபிஷேகமும் செய்து அமிர்த கடேஸ்வரரை வழிபடுகிறார்கள். கோவிலின் மேற்கு திசை நோக்கி அமிர்தகடேஸ்வரரும், கிழக்கு திசையில் தனிக்கோவிலில் அபிராமி அம்மனும், அமிர்தகடேஸ்வரர் அருகில் காலசம்ஹாரமூர்த்தியும், உள்பிரகாரத்தில் முருகன், மகாலட்சுமி, நடராஜர் ஆகியோரும் அருள்பாலிக்கிறார்கள். கோவிலின் பின்புறம் உள்ள திருமெய்ஞானம் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உள்ள கங்கை தீர்த்தத்தில் இருந்து எடுக்கப்படும் நீரைக்கொண்டு தான் இன்றும் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேகம் நடக்கிறது.
சங்காபிஷேகம்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் உள்ள காலசம்ஹார மூர்த்தியை வழிபட்டால் ஆயுள் பலம் அதிகரிக்கும் என்பது பக்தா்களின் நம்பிக்கை. கார்த்திகை சோமவார நாட்களில் இந்த கோவிலில் 1008 சங்குகளை வைத்து நடைபெறும் சங்காபிஷேக விழா பிரசித்தி பெற்றது. திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் மக நட்சத்திரத்தில் காலசம்ஹார பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். மேலும் பங்குனி அசுவதி நட்சத்திர தீர்த்தவாரி விழாவும் தற்போது வரை பக்தர்களால் பெரிதும் போற்றப்படுகிறது.
கோவிலுக்கு செல்வது எப்படி?
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து கருவி ஆக்கூர் வழியாக காரைக்கால் செல்லும் வழியில் 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து செம்பனார்கோவில், ஆக்கூர் வழியாகவும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலை அடையலாம். சென்னையில் இருந்து திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் ரெயில் மூலம் மயிலாடுதுறைக்கு வந்து அங்கிருந்து திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலை அடையலாம். நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, போன்ற பகுதிகளில் இருந்து திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் ரெயில் மூலம் மயிலாடுதுறையை அடைந்து திருக்கடையூர் கோவிலை அடையலாம். திருக்கடையூர் மயிலாடுதுறையில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.