செல்வத்திற்கும் தன தான்யத்திற்கும் அதிபதியான குபேரரை விரதம் இருந்து வணங்கினால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. குபேர வழிபாட்டின் போது லட்சுமியையும் வணங்கவேண்டும். இதனால் வழிபாட்டின் முழு பலனும் கிடைக்கும். குபேரர் நிலத்தில் விளையும் தானியங்களுக்கு அதிபதியாக திகழ்கிறார். இதனால் விவசாயிகள் தங்கள் விவசாய விளை பொருட்களை குபேரர் முன் வைத்து வழிபடலாம். அறுவடை காலங்களில் குபேரனுக்கு காணிக்கையாக விளை பொருட்களை படைக்கின்றனர்.
வெளிநாடுகளில் இந்தியாவைப் போல ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, போன்ற நாடுகளில் குபேரனை ‘சிரிக்கும் கடவுளாக’ வணங்குகின்றனர். புத்த மதத்திலும் குபேர வழிபாடு உள்ளதால் சீனர்களும் குபேர வழிபாடு செய்கின்றனர். மதங்கள் வேறுபட்டாலும் குபேர அம்சம் ஒன்றுதான். குபேரரைப் போல குள்ளமான உருவம், தொப்பை, கையில் கலசம், பொன்முட்டை ஆபரணங்கள் என சிரிக்கும் புத்தருக்கும் உள்ளது. அட்சய திருதியை அன்று குபேர அம்சத்தை வணங்கினால் வேண்டிய அளவிற்கு செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
அதிர்ஷ்டம் தரும் குபேர யந்திரத்தை புரசு இலையில், தாமிரம் அல்லது வெள்ளி அல்லது தங்கத்திலான 3+3 அளவுள்ள தகடை ஒன்பது கட்டங்களாக்கி எப்படி கூட்டினாலும் 72 வருகிற மாதிரி எழுதி, தாமரை மலர் கொண்டு துடைத்து, பால், பன்னீரால் கழுவி சிவப்பு நிற பட்டுத் துணியின் மீது வைத்து ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கில் நெய் தீபம் ஏற்றி குபேர படத்திற்கும் தாமரை மலரால் அர்ச்சித்து 72 நாட்கள் கீழே உள்ள மந்திரத்தை ஜபித்து வந்தால் பெரும் செல்வம் சேரும் . பிரபுக்களும், செல்வந்தர்களும் தேடி வந்து உதவுவார்கள். இந்த யந்திர பூஜைக்கு கைமேல் பலன் உண்டு.
இந்த யந்திரன் சிறப்பம்சம் இதில் குறிப்பிட்டுள்ள எண்களை எந்த முறையில் கூட்டினாலும் அது 72 ஆக வரவேண்டும். இந்த 72-ன் கூட்டுத் தொகை ஒன்பதாக வரும்.