திருச்சி தென்னூரில் சோழ மன்னர்களால் குலதெய்வமாக பூஜிக்கப்பட்டு, பின்னர் கிராம தேவதையாக மக்களை காத்துவரும் உக்கிர மாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. உக்கிர மாகாளியம்மன் கோவிலின் தல விருட்சம் வன்னி மரமாகும். மேலும், இங்கு திருவோடு மரம் இருப்பது தனிச்சிறப்பு.
இந்தக் கோவில் தினமும் காலை 6.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடை திறந்து இருக்கும். முற்கால சோழ அரசர்களால் வெற்றியின் தெய்வமாக நிர்மாணிக்கப்பட்டு திருவிழாக்கள் பல எடுத்து வழிபட்ட உக்கிரகாளியம்மன் தான் இங்கே தென்னூரில் வீற்றிருந்து அருள்பாலிப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு சான்றாக இவ்விரு கோவில்களிலும் கருவறையில் காட்சியளிக்கும் அம்பிகையின் ஒரே மாதிரியான உருவமைப்பு முன் வைக்கப்படுகிறது. மேலும், சோழ அரசர்களால் வழிபட்ட உக்கிரமாகாளியம்மன் சிலை காலப்போக்கில் ஆற்றில் அடித்துவரப்பட்டு தென்னூரில் கரை ஒதுங்கியது.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் அம்மனுக்கு கோவில் அமைத்து கடந்த 5 தலைமுறைகளாக வழிபட்டு வருகிறார்கள். உக்கிர மாகாளியம்மனை மனமுருகி வழிபட்டால் எதிரி தொல்லை, கடன் தொல்லை நீங்கும்.
கண் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் தீர்ந்தவுடன் அம்மனுக்கு புடவை சாத்தி பக்தர்கள் வழிபடுவார்கள். மேலும், தங்களுடைய வேண்டுதல் நிறைவேறியவுடன் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பொங்கல் வைத்து வழிபடுவார்கள்.
ஒரு சில பக்தர்கள் அம்மனுக்கு ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு வழிபாடு செய்வார்கள். அமாவாசை, பவுர்ணமி மற்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஆடு, கோழி ஆகியவை பலியிடப்படாது.
சித்ரா பவுர்ணமியையொட்டி உக்கிர மாகாளியம்மனுக்கு தென்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பால்குடம், தீர்த்தக் குடம் மற்றும் அக்னி சட்டியுடன் ஊர்வலமாக வந்து வழிபடுவார்கள்.