புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசிக்கு “அஜா ஏகாதசி” என்று பெயர். “அஜா” என்றால் வருத்தத்தை நீக்குவது என்று பொருள். உயிர்களின் வருத்தத்தை நீக்கி, உயர்நிலைக்குக் கொண்டு செல்லுகின்ற ஆற்றலைத் தருகிறது இந்த ஏகாதசி. இந்த ஏகாதசியை பெருமாளுக்குரிய புரட்டாசி மாதத்தில், நம்மால் இயன்ற அளவு அனுஷ்டித்தால், நாம் இழந்ததை மீண்டும் பெறலாம்.
இதனால் மன கவலை நீங்கும். அஜா ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கும். பொதுவாக விரத முறைகள் வழிபாடுகள் அனைத்தையும் கடைப்பிடிக்க வாய்ப்பில்லாதவர்கள் இந்த அஜா ஏகாதசி அன்று வெறும் உபவாசம் இருந்தாலே முழு விரத பலன்களைப் பெறுவார்கள்.
அஜா ஏகாதசி விரதத்தின் பெருமைகளைத் தமக்கு விளக்கி அருளுமாறு யுதிஷ்டிரர் பகவான் கிருஷ்ணனிடம் கேட்கிறார். கிருஷ்ணரும் அஜா ஏகாதசி விரதத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கிறார். “தர்ம புத்திரரே, அஜா ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கும்.
பொதுவாக விரத முறைகள் வழிபாடுகள் அனைத்தையும் கடைப்பிடிக்க வாய்ப்பில்லாதவர்கள் இந்த அஜா ஏகாதசி அன்று வெறும் உபவாசம் இருந்தாலே முழு விரத முறையையும் ஆச்ரயித்த பலன்களைப் பெறுவார்கள். மேலும் ரகுவம்சத்தில் தோன்றிய ஹரிச்சந்திரன் இந்த விரதத்தை அனுஷ்டித்து தன் துன்பம் நீங்கப் பெற்றான்” என்று ஹரிச்சந்திரனின் கதையினை எடுத்துக்கூறினார்.
உலகம் போற்றும் சத்தியசந்தனாக விளங்கிய ஹரிச்சந்திர மகாராஜா தன் முன்வினைப்பயன்களால் தன் நாட்டை இழந்தான். மேலும் தன் மனைவி, மகனையும் பிரியும் நிலை வந்தது. ஆனாலும் தன் இயல்பில் மாறாது சுடுகாட்டைக் காக்கும் வேலையைச் செய்து சத்தியத்தையே கடைப்பிடித்துவந்தான்.
ஒருநாள் ரிஷி கௌதமரை சந்தித்தான். ரிஷியின் பாதங்களைப் பணிந்த ஹரிச்சந்திரன் தன் வாழ்க்கையில் நடந்த துயரங்களை எடுத்துக்கூறினான். அவற்றைக் கேட்ட முனிவர் மிகவும் மனம் வருந்தி, “நல்லவர்களும் துன்பப்படுகிறார்கள் என்றால் அதன்காரணம் அவர்களின் முன்வினைப்பயன்தான்.
அதை அழிக்கும் சக்தியுடைய விரதம் அஜா ஏகாதசி விரதம். அடுத்து வரும் ஏகாதசி அஜா ஏகாதசிதான். அந்த நாளில் நீ முழு உபவாசம் இருந்து, ஹரியை நாள்முழுவதும் மனதாலும் வாக்காலும் துதிப்பாயாக.
அப்படிச் செய்வதன் மூலம் ஹரி மகிழ்ந்து உன் வினைப்பயன்களை நீக்குவார். மேலும் நீ விரைவில் நன்னிலை அடைவாய். நீ அடையும் நன்னிலையே இந்த ஏகாதசி விரதத்தின் மகிமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும்” என்று உபதேசித்தார். ஹரிச்சந்திரனும் அதன்படி விரதமிருந்து உபவாசம் அனுஷ்டிக்க விரைவில் அவன் வினைப்பயன்கள் நீங்கின.
அவனோடு வாதம் செய்தவர் தோற்றார். அவன் துன்பங்கள் யாவும் நீங்கின. தன் பிள்ளையோடும் மனைவியோடும் இணைந்தான். அவன் ராஜ்ஜியம் மீண்டது என்று பகவான் கிருஷ்ணர் அவற்றை எடுத்துரைத்தார்.
மேலும் அஜா ஏகாதசியின் சிறப்புகளை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறினாலும் அதைக் கேட்டாலும் சகல நன்மைகளும் உண்டாகும். கலியுகத்தில் சில யாகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
அப்படிப்பட்ட யாகங்களில் ஒன்று அஸ்வமேத யாகம். அந்த யாகம் செய்வதால் உண்டாகும் புண்ணிய பலனை நாம் அஜா ஏகாதசி விரத்தைக் கடைப்பிடித்து, அதன் பலனை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதன் மூலம் பெறலாம் என்கிறது ஏகாதசி புராணம்.
இத்தகைய சிறப்புகளையுடைய அஜா ஏகாதசி இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. எனவே தவறாமல் இந்த நாளில் உபவாசம் இருந்து ஹரியை வழிபட வேண்டும். இந்த நாளைத் தவறவிடாமல் பகவான் விஷ்ணுவை வழிபட்டு சகல நலன்களையும் பெறுவோம்.