அனுமன் ஜெயந்தி, அமாவாசை, தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
சனி ஓரையில் ஆஞ்சநேயரை தரிசிப்பது நன்மை தரும் என்றும், மனதில் நினைத்ததை நிறைவேற்றுவார் என்றும் பக்தர்கள் கூறுகிறார்கள்.
சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பாகும். வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் சுந்தரகாண்டம் படித்து ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அல்லது வெண்ணெய் காப்பு சாத்தி வழிபடலாம்.
நாமக்கல் ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பிரம்மாண்டமாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாளில் ரூ.5ஆயிரம் செலுத்தி தங்க முலாம் பூசிய இந்த தாமிர கவசத்தை சாத்துவதால் லட்சுமியின் அருள் கிடைக்கும். வீட்டில் செல்வ வளம் பெருகுவதாக பக்தர்கள் நம்புகிறார்கள். இதன்மூலம் வீட்டில் தங்கம், வைரம், வைடூரியம் பெருகுவதாக பக்தர்களிடையே நம்பிக்கை உள்ளது. வாழ்க்கையில் பொருளாதாரம் மேம்பாடு அடையும்.
நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால் நவகிரகங்களை வழிபட்டதற்கு இணையானது என்பதால் நவகிரக தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள ஆஞ்சநேய சுவாமியை வழிபட ஆயிரக்கணக்கில் குவிகின்றனர்.
எந்தவித அலங்காரமும் இல்லாமல் சாதாரண தோற்றத்தில் உள்ள ஆஞ்சநேயரை தரிசித்தால் காரியத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.
ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபட்டால் தடைபட்ட காரியங்கள் இன்றே நடக்கும். வேலை வாய்ப்பு, பதவி உயர்வு கிட்டும்.