160
சீரகம்-பிரண்டை என்ற இரு மூலிகைகளை பற்றி தெரிந்து கொள்வோம். இவை இரண்டும் ஒற்றை மூலியாகவும் வேலை பார்க்கும், அதே நேரத்தில் பிற மூலிகைகளுடன் சேர்ந்து, அவற்றின் வீரியத்தை கூட்டி நோயை விரட்ட உதவும் சக்தியை உருவாக்கும் “உதவி மூலிகையாகவும்” பயன்படும்.
1. சீரகம் ஒரு மருத்துவ மூலிகை:-
மனித குலத்திற்கு நீண்ட காலமாக தெரிந்த ஒரு மூலிகை! உணவை சுவையாக்கவும் செரிக்கவும் சீரிய ஒரு மூலிகை! “சீரகத்தை” இரண்டாக பிரித்தால் “சீர்+அகம்” என ஆகும். உள்சென்ற சீரகம் அனைத்து உடல் பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்யும் என்பதால் அந்த பெயர் வந்தது.
இது ஒரு மருத்துவ மூலிகையாகும். வட இந்தியாவில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் முக்கியமாக அரேபியாவில் மசாலா பொருள்களில் இது நீண்ட காலமாக உபயோகிக்கப்படுகிறது. Cumin என்ற வார்த்தையே அரேபிய வார்த்தையாக கூறப்படுகிறது. சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்து உபயோகிக்கப்பட்ட வரலாறு சான்று சிரியாவில் இருந்து கிடைத்துள்ளது. தமிழர்கள் இதை நீண்ட நெடுங் காலமாக உபயோகித்து வந்தனர் என்பது தெரிகிறது. சித்த மார்கத்தில், ஆன்மீகத்தில் நுழைவோருக்கு, அவர்கள் உடல் சுமக்கும் எதிர்மறை சக்தியை உடலை விட்டு கழுவிவிட, உடல் சுத்தம் பெற சீரகத்தை 48 நாட்கள் தொடர்ந்து குடிக்கும் நீரில் கொதிக்க வைத்து பருகி வர குருநாதர்கள் அறிவுறுத்துவார்கள்.
- சீரகத்திலிருந்து 56% எண்ணெய்ப்பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இதில் தைமால் என்கிற எண்ணை வயிற்றுப்புழுக்களை அழிக்கவும், கிருமிநாசினியாகவும் பல மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.
- சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.
- திராட்சை சாறுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
- அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.
- மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.
- சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
- சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடி செய்துத் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும்.
- சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப்பொருமல் போய்விடும்.
- ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.
- சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
- செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து. சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.
- உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.
- திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.
- சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
2. பிரண்டை – மருத்துவ பயன்கள்:-
பிரண்டை சதைப் பற்றான நாற்கோண வடிவமான தண்டுகள் கொண்ட, பொதுவாக ஏறுகொடி அமைப்பில் வளரும் தாவரம். மலர்கள் பச்சை கலந்த மஞ்சள் நிறமானவை. கனிகள் சிவப்பு நிறத்தில் உருண்டை வடிவமானவை; விதை வழவழப்பானவை; வஜ்ரவல்லி என்கிற மாற்றுப் பெயரும் உண்டு. வஜ்ரவல்லி என்கிற பெயர்க் காரணம் உடைந்த எலும்புகளை ஒட்ட வைக்கும் பிரண்டையின் குணத்தினாலேயே ஏற்பட்டது.பிரண்டைச் சாறு உடம்பில் பட்டால் அதிகமான அரிப்பும் நமைச்சலும் ஏற்படும். வேர், தண்டு ஆகியவை அதிகமான மருத்துவப் பயனுள்ளவை. தண்டு கார்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது.
பிரண்டையில் சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப் பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப் பிரண்டை எனப் பல வகைகள் உள்ளன. சாதாரண பிரண்டை எனப்படும் நான்கு பட்டைகளைக் கொண்ட பிரண்டை அதிகமாகக் காணப்படும் வகையாகும். இதனையே நாம் பொதுவாக உபயோகிக்கலாம்.
- பிரண்டை உடலைத் தேற்றும்;
- பசியைத் தூண்டும்;
- மாதவிலக்கைத் தூண்டும்;
- மந்தம், குன்மம், இரத்தக் கழிச்சல், அஜீரணம் ஆகியவற்றைக் குணமாக்கும்.
- பிரண்டைத் தண்டுகளைச் சேகரித்து, மேல் தோலைச் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு தேவையான அளவு நெய்யில் வதக்கி, தேவையான அளவு புளி, உப்பு, காரம் சேர்த்து அரைக்க வேண்டும். பின்பு கடுகு, உளுந்து சேர்த்து தாளித்து துவையல் செய்து சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு செய்து வர இரத்த மூலம் குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகளையும் கட்டுப்படுத்தும்.
- பிரண்டைத் துவையல் செய்து நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள பழகிக் கொண்டால் உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும்; ஞாபக சக்தி பெருகும்; மூளை நரம்புகளும் பலப்படும்.
- நன்றாக முற்றிய பிரண்டைத் தண்டுகளைச் சிறு துண்டுகளாக நறுக்கி மோரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ஊற வைத்து உலர்த்தி வற்றலாக செய்து கொள்ள வேண்டும் இந்த வற்றலை எண்ணெயில் பொரித்துச் சாப்பிட பசியின்மை, நாக்குச் சுவையின்மை ஆகியன குணமாகும்.
- பிரண்டையில் இருந்து சாறு எடுத்து 6 தேக்கரண்டி அளவு சாற்றுடன் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் சாப்பிட்டு வர மாதவிடாய் ஒழுங்காக வரும்.
- பிரண்டைத் துவையலைக் குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வர எலும்புகள் உறுதியாக வளரும். மேலும், எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாகக் கூடவும் இது உதவுகிறது.
- மேலும் பிரண்டையை நன்கு காய வைத்து தூளாக்கி வைத்துக் கொண்டு நீரில் குழைத்து எலும்பு முறிவுள்ள பகுதியில் பூசி வரலாம்.பிரண்டையின் வேரை உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு காலை மாலை வேளைகளில் பத்து கிராம் அளவு சாப்பிட்டு வரவேண்டும்.
- அடிபட்ட வீக்கம் குணமாக பிரண்டையிலிருந்து சாறு எடுத்து புளி, உப்பு சேர்த்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் அடிபட்ட இடத்தில் மேல் பூச்சாகப் பற்றுப் போட வேண்டும்.