மதுரையில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது, திருபுவனம் கோட்டை. இங்கு விநாயக கோரக்கர் அருள்பாலிக்கிறார். நோய்களை தீர்ப்பதிலும், சனி தோஷம் நீக்குவதிலும் இந்த விநாயகர் வல்லவர். விநாயகர் வடிவத்தில், கோரக்க சித்தர் அருள்பாலிப்பதால் இவருக்கு ‘கோரக்க விநாயகர்’ என்று பெயர்.
` ராமநாதபுரம் உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் அருள்கிறார். தட்சிணாயன புண்ணிய காலங்களில் இந்த விநாயகரின் தெற்குப் பகுதியிலும் உத்திராயன காலங்களில் வடக்குப் பகுதியிலும் தன்னுடைய கதிர்களைப் பாய்ச்சி, சூரியன் இந்த விநாயகரை வணங்குகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூரில் சிவலிங்க ஆவுடையாரின் மேல், வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும், இடக்கையில் கொழுக்கட்டையுடனும் ஈசான்ய திசையை நோக்கி விநாயகர் வீற்றிருக்கிறார்.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் உள்ளது, மிளகு பிள்ளையார் ஆலயம். மழை பொய்த்துப் போகும் காலங்களில், இவரது உடலில் மிளகை அரைத்துத் தடவி அபிஷேகம் செய்வித்தால் உடனே மழைபொழியும் அற்புதம் நிகழ்கிறது.
விழுப்புரம் அடுத்த தீவனூரில் நெற்குத்தி விநாயகர், லிங்க வடிவில் அருள்கிறார். இந்த லிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் செய்யும் போது அதில் உள்ள விநாயகரை தரிசிக்கலாம்.
நாகப்பட்டினம் செண்பகபுரியில் உள்ளது, ஆதிகும்பேஸ்வர சுயம்பு விநாயகர் ஆலயம். இவரது சன்னிதி கோஷ்டங்களில் மும்மூர்த்திகளும் அருள்வது வித்தியாசமான அமைப்பு.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் ஆயிரெத்தெண் விநாயகர் அருள்கிறார். இங்கு சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள், நடராஜப் பெருமானுடன் பஞ்சமுக ஹேரம்ப கணபதி திருவீதியுலா வருகிறார்.
கோயமுத்தூர் மத்தம்பாளையத்தில் காரண விநாயகரை தரிசிக்கலாம். இக்கோவிலில் விநாயகர் அருகில் நந்தியம்பெருமான் வீற்றிருப்பது தனிச் சிறப்பு.
சேலம் மாவட்டம், ஆத்தூரில் தலையாட்டி கணபதி எனும் காவல் கணபதி வீற்றிருக்கிறார். இவர் தலையை ஆட்டும் விதமாக இடதுபுறம் சாய்ந்தபடி அருள்கிறார்.
சிதம்பரத்தில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது, திருநாரையூர். இங்கு நம்பியாண்டார் நம்பிக்கு அருள்புரிந்த பொள்ளாப் பிள்ளையார் அருள்பாலிக்கிறார். ராஜராஜசோழனுக்கு சைவத் திருமுறைகளைத் தொகுக்க உதவியவர் இவர். உளியால் செதுக்கப்படாத (பொள்ளா) பிள்ளையார் என்பது, இவரது பெயரின் விளக்கம் ஆகும்.