குரு பகவானை விரதம் இருந்து வழிபாடு செய்வதற்குக் குருபகவான் உச்சம் பெறும் ஆடி மாதமும், ஆட்சி பெறும் மார்கழி, பங்குனி மாதங்களும், குரு நட்சத்திரங்கள் ஆகிய விசாகம், புனர்பூசம், பூரட்டாதி வியாழக்கிழமைகளில், குரு ஓரையில் வழிபட்டு, பரிகாரம் செய்வது மிக, மிகச் சிறப்பாகும்.
வியாழக்கிழமையில் குரு ஓரை காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 9 மணி வரையிலும் ஆகும்.
குரு கிரக பரிகாரங்கள்
வியாழபகவானுக்கு உரிய நாளாகிய வியாழக்கிழமை விரதம் இருந்து மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்தும், குருபகவானுக்கு மஞ்சள் நிற ஆடையாலும், சரக்கொன்றை, முல்லை மலர்களாலும் அலங்கரித்தும் வழிபட வேண்டும். அரசமர சமீத்து கொண்டு தூபம் காட்ட வேண்டும். கடலைப் பொடி சாதம், வேர்க்கடலைக் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் இவற்றை குரு பகவானுக்கு நிவேதனம் செய்து, மற்றவர்களுக்குத் தானம் செய்திடல் வேண்டும்.
மஞ்சள் நிற ஆடையைத் தானம் செய்யலாம். கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நிவேதனம் செய்து குழந்தைகளுக்குத் தானம் செய்து விட வேண்டும். குரு பகவானின் ஆதி தேவதைகளான பிரம்மன், இந்திரன் இவர்களை வழிபட்டாலும் குரு மகிழ்வார். குரு பகவானை, அடாணா ராகத்தில் குருபகவானின் கீர்த்தனைகளைப் பாடி பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.
ஜாதகத்தில் குரு பலவீனமுற்றோ, தோஷமுற்றோ இருந்தால், நவமி அன்று சண்டிஹோமம் செய்ய சிறப்பாகும்.