இன்று (வெள்ளிக்கிழமை) அதிபத்த நாயனார் குருபூஜை. அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவரான அதிபத்தநாயனார் நாகையில் வாழ்ந்தவர். பக்தியிலும் அதிதீவிர பக்தி உடையவர்.
ஆதலால் அதி பக்தராய் விளங்கிய நாயனார், அதிபத்தர் என்று தூய தமிழால் அழைக்கப்பட்டார். இவர் மீனவ குலத்திற்கு விளக்காக அவதரித்தவர். சிவபெருமானிடம் இருந்த அதீதமான பக்தியினால், தமது வலையில் விழும் மீன்களுள் ஒன்றை மீண்டும் கடலிலேயே சிவார்ப்பணமாக விடும் வழக்கத்தை ஒவ்வொருநாளும் மேற்கொண்டிருந்தார்.
ஒருநாள் அவ்வலையில் ஒரே ஒரு மீன் மட்டும் அகப்பட்டது. அதுவும் தங்கமாக ஜொலிக்கும் விலை மதிப்பற்ற ஒன்று. அப்படி இருந்தும் அதனை ஒரு பொருட்டாகத் தனக்கென்று எடுத்துக்கொள்ளாமல் மீண்டும் கடலிலேயே விட்டுவிட்டார்.
நாயனாரது பக்தியை மெச்சிய பெருமான் ரிஷப வாகனத்தில் அம்பிகையுடன் தோன்றி அவருக்கு அருளினார் என்பது பெரியபுராணம் காட்டும் வரலாறு. நாயனார் அருள் பெற்ற ஆவணி மாத ஆயில்ய நட்சத்திரத்தன்று நாகை காயாரோகணேஸ்வர சுவாமி ஆலயத்தில் ஐதீக விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் இதனைக் காண அடியார்கள் வருகிறார்கள். பகலில் நடைபெறும் உற்சவம் இது.