சமயபுரத்தில் மகமாயியாகவும், திருவேற்காட்டிலே கருமாரியாகவும், புன்னை நல்லூரிலே மாரியம்மனாகவும் அருளும் பராசக்தி கரூர் நகரிலே மாரியம்மனாய் தண்ணருள் பொழிகின்றாள்.
வேண்டுவோர் வேண்டும் வரம் தந்து அவர்தம் குறைகளைப் போக்கி ஆனந்தம் அளிப்பவள் இந்த அம்மன் என அனைவருமே அவளைப் போற்றுகின்றனர்.
இத்திருக்கோயிலில் நடைபெறும் கம்பம் விழா மிகச் சிறப்பானது. இவ்விழாவின் தொடக்க நிகழ்ச்சியான காப்பு கட்டுதல், ஒரு திருவிழா போல் நடைபெறும்.
அக்னி சட்டி ஏந்துதல், அலகு குத்துதல், காவடி எடுத்தல், பால்குடம், மாவிளக்கு ஏற்றுதல், பொங்கல் வைத்தல் போன்ற பிரார்த்தனைகளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவின்போது நிறைவேற்றுகின்றனர்.
கம்பத்திற்கு தயிர்சாதம் படைப்பது விசேஷமானது. இந்தப் படையலுக்குப் பின் கரூர் மாரியம்மனுக்கும், கம்பத்திற்கும் மாலை மாற்றும் வைபவம் நடக்கும். பின் உரிய வழிபாட்டுடன் கம்பம் கோவிலில் இருந்து ஊர்வலமாக அமராவதி ஆற்றுக்கு எடுத்துச் செல்லப்படும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கம்பத்துக்கு வழிபாடுகள் செய்து முடித்ததும் கம்பம் ஆற்றில் விடப்படும்.
அப்போது நடைபெறும் வாணவேடிக்கையைக் காண இருகண்கள் போதாது. 22 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் குறிப்பிடத்தகுந்த நிகழ்ச்சிகள், மாரியம்மனுக்கு பூச்சொரிதலும், திருத்தேர் பவனியும். இவ்விழா காலங்களில் கிராமிய நடனங்கள், கூத்து, கரகாட்டம், பக்தி சொற்பொழிவுகள் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அம்மன் திருவீதியுலா வரும் போதெல்லாம் மாவடி ராமசுவாமி என போற்றப்படும் கரூரின் காவல் தெய்வமாய் வழிபடப்படும் ராமர் கூடவே எழுந்தருள்கிறார்.
இவர் மாரியம்மனின் சகோதரராகவும் பாவிக்கப்படுகிறார். இத்திருவிழாவைப் பொறுத்தவரை, கம்பம் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சி முத்தாய்ப்பானது எனில், பல்லக்கு மஞ்சள் நீராட்டு விழா மங்களகரமான நிறைவு நிகழ்ச்சியாகும்.
மற்ற நாட்களில் அம்மனை அமர்ந்த நிலையில் அலங்கரிக்கும் அர்ச்சகர்கள் பல்லக்கு அன்று அம்மன் ஓய்வெடுப்பதை உணர்த்தும் வண்ணம் சற்று சாய்ந்த நிலையில் சயன கோலத்தில் அலங்கரிப்பர்.
பக்தர்கள் அனைவரும் அன்னைக்கு தாம்பூலம் தருவார்கள். நீர்மோர், பானகம், வடைபருப்பு வைத்து நிவேதனம் நடக்கும்.
பக்தர்களுக்கு மஞ்சள் நீர் கொடுக்கப்படும். சில கிராம மக்கள் பல்லக்கு ஆலயத்திலிருந்து புறப்பட்டு மீண்டும் ஆலயம் வந்து சேரும் வரை பல்லக்கின் கூடவே சென்று திரும்ப வந்து அதனை விட்டு விட்டுச் செல்வதை வழிபாடாக கொண்டிருக்கிறார்கள்.
கருவறையில் மாரியம்மன் நான்கு திருக்கரங்களுடன் சற்றே ஈசான்ய மூலையை (வடகிழக்கு) பார்த்த வண்ணம் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறாள்.
இக்கோவில் நூறு ஆண்டுகளுக்கு முன்பாகத் தோன்றியது. பக்கத்து கிராமத்தில் உள்ள மாரியம்மன் ஆலயத்திலிருந்து பிடிமண் எடுத்துவந்து கரூர் நகரின் மையப் பகுதியான மார்க்கெட்டின் நடுவே இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.
சமயபுரம் மாரியம்மனுக்கு அடுத்தாற்போல் உள்ள பெரியதொரு பிரார்த்தனைத் தலமாக கரூர் விளங்குகிறது.
ஆண்டு முழுவதும் அடுத்தடுத்து பல திருவிழாக்களைக் காணும் கரூர் மாரியம்மன், தன்னை வந்து தரிசிக்காவிட்டாலும், தன்னை நினைத்து வணங்குபவரின் கவலைகளையும் கரைக்கக்கூடியவள்.