மாரியம்மன் கோவில் : கரூர் மாவட்ட நகரப் பகுதியின் மையத்தில் அமைந்துள்ள இக்கோயில் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும். இங்கு மாரியம்மன் எழுந்தருளியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் வைகாசி திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. இதில் சாதி சமய வேறுபாடு இன்றி அனைத்து மக்களும் பங்கேற்பதுடன், வழிபாட்டிற்காக ஒவ்வொரு பக்தா்களும் அமராவதி ஆற்றிலிருந்து புனித நீரை எடுத்து வந்து இந்த மகத்தான நிகழ்வில் பங்கேற்கின்றனா்.
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்: கரூர் நகரம் சங்க காலத்தில் சேரர்களின் தலைநகரமாகவும் புகழ் பெற்ற தொழில் மையமாகவும் விளங்கியது. குடிசைத் தொழில்களுக்கும் கைத்தறி நெசவுத் துணிகளுக்கும் புகழ்பெற்ற நகரமாக திகழும் இந்த நகரத்திற்கு பசுபதீஸ்வரர் கோயில் அடையாளச் சின்னமாக திகழ்கிறது. பசுபதீஸ்வரர்லிங்கம், பால் சுரக்கும் பசு மற்றும் இது போன்ற பல்வேறு சிற்பங்கள் இந்த கோவிலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.
கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில், தாந்தோணிமலை (5 கி.மீ.) : கரூா் மாவட்டத்தில் அமைந்துள்ள தான்தோன்றிமலையின் சிறுகுன்றில் அருள்மிகு கல்யாண வேங்கடரமணர் பெருமாள் எழுந்தருளியுள்ளார். இந்த கோயில் கரூா் மாவட்டத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோயில் தென் திருப்பதி என்றும் எல்லோராலும் அழைக்கப்படுகிறது.
வெண்ணெய்மலை (5 கி.மீ) : கரூா் மாவட்டத்தில் அமைந்துள்ள வெண்ணெய்மலை கோவிலில் பாலசுப்பிரமணியர் எழுந்தருளியுள்ளார். இக்கோவில் கரூரிலிருந்து 5 கி.மீ தொலைவில் சேலம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இறை நேசர்களாகிய அருணகிரிநாதர் மற்றும் அவ்வையார் இக்கோயிலில் வீற்றிருக்கும் முருகப்பெருமானை போற்றி பாசுரங்கள் பல பாடியுள்ளனர்.
நெரூர் (12 கி.மீ) : நெருர் சதாசிவ பிரேமேந்திராள் கோவில் கரூரிலிருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் கரூர் மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.
கடம்பவனேஸ்வரர் கோவில் (45 கி.மீ.) : கரூர் மாவட்டத்தில் குளித்தலை தாலுகாவின் மையப்பகுதியில் கடம்பவனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் தை மாதத்தில் தைப்பூசத் திருவிழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.
அய்யர்மலை (57 கி.மீ) : கரூர் மாவட்டத்தில் குளித்தலையில் இருந்து 8 கி.மீ தொலைவில் அய்யர்மலை அமைந்துள்ளது. இக்கோவிலில் ரத்தினகிரீஸ்வரர் வீற்றிருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோட்சவம் திருவிழா 15 நாட்கள் நடைபெறுகிறது மற்றும் சித்திரை திருவிழா, தைப்பூசத் திருவிழா, கார்த்திகை திருவிழா, பங்குனி உத்திரம் திருவிழா மற்றும் தெப்பத்திருவிழா ஆகியவை பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது.
திருமுக்கூடலூர் (15 கி.மீ) : திருமுக்கூடலூரில் அமைந்துள்ள அகஸ்தீஸ்வரர் கோவில் இந்து அறநிலையங்கள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. காவிரி, அமராவதி, மணிமுத்தாறு ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் பகுதியே திருமுக்கூடலூர் ஆகும். சோழ வம்சத்தைச் சார்ந்த முதலாம் ராஜேந்திர சோழனால் இக்கோவில் கட்டப்பட்டதாகவும் அகத்திய முனிவர் இங்குள்ள சிவனை வழிபட்டதாகவும் கருதப்படுகிறது.
திருக்காம்புலியூர் செல்லாண்டியம்மன் கோவில் (23 கி.மீ): கரூர் மாவட்டம் திருக்காம்புலியூர் கிராமத்தில் உள்ள இக்கோவிலில் செல்லாண்டியம்மன் வீற்றிருக்கிறார். இந்தவூர் மக்களுக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள இந்து மதத்தை பின்பற்றும் கிராம மக்களுக்கும் ஒரு முக்கிய வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது. இது கரூர் மாவட்டத்திலிருந்து 23 கி.மீ. தொலைவிலும் குளித்தலையில் இருந்து 21 கி.மீ. தொலைவிலும் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.