திருஷ்டி என்பது ஒரு சிலர் நம்மை பார்ப்பதால் நமது உடலிலும் உள்ளத்திலும் ஏற்படக்கூடிய ஒரு சில மாற்றங்களை குறிக்கிறது. இவற்றில் இருந்து விடுபட்டு மீண்டும் பழையபடி வலிமை பெறவும், அவை நம்மை தாக்காமல் இருக்கவும் பல வழிமுறைகள் நமது முன்னோர்களால் காலம் பெற்று கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. சிலர் யாருடைய கண் திருஷ்டியும் படாமலிருக்க வேண்டி பெரிய அளவிலான பாத்திரத்தில் மலர்களை பரப்பி வைத்திருப்பார்கள்.
சிலர் நேரடியாக வீட்டினுள் கண் பார்வை படாமல் இருக்க பெரிய நிலை கண்ணாடியை வாசல் எதிரே மாட்டி வைத்திருப்பர். வியாபார தளங்களில், வணிக விடுதிகளில் கண்ணாடி தம்ளரில் எழுமிச்சை பழம் ஒன்று மிதக்க விட்டிருப்பர். அவ்வாறு செய்தால் அந்த நீரானது எதிர்மறை சக்திகளையும், கண் திருஷ்டி தோஷங்களையும் கிரகித்து எழுமிச்சை பழமானது அவைகளை செயலிழக்க செய்துவிடும் என்பது நம்பிக்கை.
இவற்றிலும் பல வகைகள் உள்ளன. வாருங்கள் இவற்றைப் பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இவற்றில் அடிப்படையானது சிவத்தைக் குறிக்கும் சுண்ணாம்பும், பெண்களின் மங்கலச் சின்னமான மஞ்சளும் தான். சுண்ணாம்பு சைவமாகிய தூய்மையின் சின்னம். ஸத்வ குணம் உடையதாகவும், கிருமி நாசினியாகவும் செயல்படக்கூடிய ஆற்றல் உடையது. ஒரு எலுமிச்சம் பழத்தினை இரண்டாக வெட்டி, அதில் குங்குமம் தடவி, வருவோர் கண்பார்வை படும் படி வைக்கவும். கடை மூடும் சமயம் அதை எடுத்து தலையைச் சுற்றி அதை இடம் வலமாக மாற்றி எறியவும். அல்லது கடையை மூடும் போது ஒரு எலுமிச்சம் பழத்தில் கற்பூரம் வைத்து உங்களுக்கும் கடைக்கும் சேர்த்து சுற்றி அதை நசுக்கி இட வலமாக மாற்றி எறியவும்.
இதனால் திருஷ்டி கழியும் என்பது கூற்று.மேலும் எலுமிச்சம் பழம் தீய சக்திகளை திருஷ்டியின் பாதிப்புக்களை நெருங்கவிடாமல் செய்யும். திருஷ்டி என்பது இல்லாதவன் இருப்பவனை பார்த்து பெருமூச்சு விடுவதும், ஏக்கப்பார்வை பார்ப்பதும், கண்களால் கண்டு பொறாமைப்படுவது கண்பார்வை திருஷ்டி எனப்படும்.
கிராமங்களில் இதனை எப்படி கழிக்கிறார்கள் என பார்ப்போம் வாங்க. சிலர் கல் உப்பு கொஞ்சம் எடுத்து 3 முறை சுற்றி ஓடும் தண்ணீரில் போடுவார்கள். குடும்பத்தில் இருக்கும் அனைவரின் தோஷம் நீங்க, தெருமண் கொஞ்சம் எடுத்து கடுகு, உப்பு, மூன்று மிளகாய், எல்லாம் சேர்த்து கிழக்கு பார்த்து அமர்ந்து மூன்று முறை எல்லோரையும் சுற்றி எரியும் விறகு அடுப்பில் போட்டுவிடவேண்டும். இது கண் திருஷ்டியை போக்கும் இதை செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமையில் தான் செய்ய வேண்டும்.
வளர்பிறை, வெள்ளிக்கிழமையில் காலை 9 மணிக்கு கற்றாழை கட்டி தொங்கவிடலாம். வாசலுக்கு மேல் ஒரு எலுமிச்சை, 5 பச்சை மிளகாய் என மாறி மாறி கயிற்றில் கோர்த்து தொங்கவிடலாம். இதனை செவ்வாய் கிழமைகளில் செய்யலாம். நம் வீட்டிற்குள் கெட்ட சக்தி நுழையாமல் தடுக்கவும், கெட்ட எண்ணம் உடைய மனிதர்களின் தாக்கம் பாதிக்காமல் இருக்கவும், கண் திருஷ்டி விலகவும் வீட்டு வாசலில் பெளர்ணமியில் நீர் பூசணி கட்டி தொங்கவிடலாம்.