சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமி வழிபாடு தான் பலருக்கும் தெரிந்த வழிபாடாக இருக்கிறது. இதைத் தவிர, சித்திரை மாதத்தில் ஏராளமான சிறப்புமிக்க விரத வழிபாடுகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
* சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில், பார்வதி தேவியை விரதம் இருந்து வழிபாடு செய்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
* சித்திரை மாதத்தில் வரும் பரணி நட்சத்திர நாளில் விரதம் இருந்து பைரவரை நினைத்து வழிபட்டால், காரியத் தடைகள் விலகும். அன்றைய தினம் தயிர் சாதத்தை பைரவருக்கு நைவேத்தியமாக படைக்கலாம். இதனால் எதிரிகள் விலகுவர்.
* சித்திரை மாத மூலம் நட்சத்திரத்தில், விரதம் இருந்து லட்சுமி நாராயணரை வணங்கினால் நினைத்தது நடக்கும்.
* சித்திரை மாதத்தின் வளர்பிறையில் திருதியை திதி வந்தால், அன்றைய தினம் விரதம் இருந்து சிவனையும் பார்வதியையும் வணங்கி, ஏழைகளுக்கும், இயலாதவர்களுக்கும் தானங்கள் செய்தால் சிறப்பான வாழ்வு அமைவதோடு, வாழ்வின் இறுதியில் சிவலோகப் பதவியும் அடையலாம்.
* தாகம் என்று வருபவர்களுக்கு நீர் அளிப்பது, அடிப்படை தர்மம். அதுவும் சித்திரை மாதத்தில் இதுபோன்று நீர், மோர் தானம் செய்வது, நாம் பிறக்கும்போதே உடன் வந்த பாவங்களை விலகச் செய்யும்.
* சித்திரை மாதத்தில் வரும் அமாவாசை அடுத்த திருதியையே, ‘அட்சய திருதியை’ என்று அழைக்கப்படுகிறது. அந்நாளில் தானங்கள் செய்வது பெரும் புண்ணியத்தை வரவழைக்கும்.
* சித்திரை மாத திருதியை தினம் ஒன்றில்தான், மகாவிஷ்ணு ‘மச்ச அவதாரம்’ எடுத்ததாக புராணங்கள் சொல்கின்றன.
* சித்திரை மாத வளர்பிறை பஞ்சமியில், வைகுண்டத்தில் இருந்து பூமிக்கு லட்சுமி வந்ததாக புராணங்கள் சொல்கின்றன. எனவே அன்றைய தினம் விரதம் இருந்து லட்சுமியை பூஜித்தால், செல்வச் செழிப்பு ஏற்படும்.
* சித்திரை மாத வளர்பிறை அஷ்டமியில், அம்பிகை பிறந்ததாக ஐதீகம். எனவே அந்நாளில் விரதம் இருந்து புனித நதிகளில் நீராடுவது சிறப்பான பலனைத் தரும்.