Home ஆன்மீக செய்திகள் தாலி பாக்கியம் அருளும் காரடையான் நோன்பு

தாலி பாக்கியம் அருளும் காரடையான் நோன்பு

by admin
Thaali-Bhagyam-Karadaiyan-Nonbu_தாலி பாக்கியம் அருளும் காரடையான் நோன்பு

பெண்கள் மேற்கொள்ளும் விரதங்களில் மிகவும் முக்கியமான விரதமாக ‘காரடையான் நோன்பு’ உள்ளது. மாசி மாதம் ஏகாதசியை ஒட்டி வரும் சிறப்பு மிக்க விரதம் இதுவாகும். பெண்கள் தங்களுடைய மாங்கல்ய பலத்தை பெருக்கிக் கொள்வதற்காக இந்த விரதத்தை கடைப் பிடிக்கிறார்கள். இந்த விரதத்தை ‘சாவித்திரி விரதம்’ என்றும், ‘காமாட்சி விரதம்’ என்றும் அழைக்கிறார்கள்.

அஸ்வபதி என்ற மன்னனின் மகள் சாவித்திரி. இவள் ஒரு முறை காட்டிற்குள் சென்றபோது, அங்கு வாழ்ந்து வந்த சத்தியவான் என்ற இளைஞனை சந்தித்து காதல் வயப்பட்டாள். நாட்டிற்கு திரும்பியதும், தன்னுடைய காதலைப்பற்றி தந்தையிடம் தெரிவித்தாள்.

அஸ்வபதி மன்னன், அந்த இளைஞன் யார் என்று விசாரிக்க நினைத்தார். அப்போது நாரதர் மூலமாக, அவன் ஒரு அரசகுமாரன் என்பதும், குறைந்த ஆயுளைக் கொண்டவன் என்பதும் தெரியவந்தது. சத்தியவானின் ஆயுள் ரகசியத்தை அறிந்து கொண்ட மன்னன், தன்னுடைய மகளை அவனுக்கு மணம் முடித்துக் கொடுக்கத் தயங்கினான். ஆனால் சாவித்திரி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. “சத்தியவானைத் தான் திருமணம் செய்து கொள்வேன்” என்று தந்தையிடம் உறுதியாகச் சொல்லிவிட்டாள்.

மகளின் பிடிவாதத்தை கண்டு மனம் பதறினாலும், வேறு வழியில்லாமல் சத்தியவானுக்கே, சாவித்திரியை மணம் முடித்துக் கொடுத்தார். திருமணத்திற்குப் பிறகு காட்டில் சத்தியவானுடன் வாழ்ந்து வந்தாள், சாவித்திரி. சரியாக ஒரு வருடம் முடிந்த நிலையில், சாவித்திரியின் மடியில் படுத்திருந்த நிலையிலேயே சத்தியவான் உயிர் பிரிந்தது. அன்றைய தினம் ‘காரடையான் நோன்பு’ ஆகும்.

யார் கண்ணுக்கும் தென் படாத வகையில் அரூபமாக வந்த எமதர்மன், சத்தியவானின் உயிரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். ஆனால் காரடையான் நோன்பை முறைப்படி செய்து வந்த சாவித்திரியின் கண்களில் இருந்து எமதர்மன் தப்ப முடியவில்லை. அது எமதர்மனுக்கே தெரிந்தாலும் கூட, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அங்கிருந்து அகல முற்பட்டார்.

எமதர்மன் செல்லச் செல்ல, அவரைப் பின்தொடர்ந்து சென்றாள் சாவித்திரி. ‘இவள் எதற்காக நம்மை பின் தொடர்ந்து வருகிறாள்’ என்று நினைத்த எமதர்மன், அதை அவளிடமே கேட்டுத் தெரிந்து கொள்வது என்று முடிவு செய்தார். “ஏ, பெண்ணே.. உனக்கு என்ன வேண்டும். எதற்காக என்னைப் பின் தொடர்ந்து வருகிறாய்?” என்று கேட்டார்.

சாவித்திரி அதற்கு எந்தப் பதிலையும் சொல்லவில்லை.

எமதர்மனே தொடர்ந்தார். “உன்னுடைய கணவனுக்காகத்தான் நீ என்னை பின் தொடர்கிறாய் என்றால், அதில் உனக்கு என்னால் எந்த நன்மைகளையும் செய்ய முடியாது. அவனது உயிர் திரும்புவது முடியாத காரியம். எனவே வேறு ஏதாவது வரம் என்னிடம் இருந்து உனக்கு வேண்டுமானால் கேள், நிச்சயமாக தருகிறேன்” என்றார்.

எமதர்மன் அப்படிக் கேட்டதும், சாவித்திரி சாதுரியமாக செயல்பட்டு ஒரு வரத்தைக் கேட்டாள். அதாவது “எனக்குப் பிறக்கின்ற நூறு குழந்தைகளைத் தன்னுடைய மடியில் வைத்துக் கொண்டு, என் மாமனார் கொஞ்ச வேண்டும்” என்று கேட்டாள்.

சாவித்திரி அப்படிக் கேட்டதும், யோசிக்காமல் எமதர்மன் “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி விட்டு, அங்கிருந்து புறப்பட்டார்.

ஆனால் அவரை மீண்டும் சாவித்திரி தடுத்து நிறுத்தினாள்.

‘எதற்காக தடுத்தாய்?’ என்பது போல் பார்த்த எமதர்மனிடம், “சரி.. நீங்கள் கொடுத்த வரத்தின்படி என்னுடைய கணவரின் உயிரைத் திருப்பித் தாருங்கள்” என்று கேட்டாள்.

அப்போதுதான் அவருக்கு, எப்படிப்பட்ட ஒரு வரத்தைக் கொடுத்திருக்கிறோம் என்பது தெரிந்தது. கொடுத்த வரத்தை மீற முடியாது என்பதால், சத்தியவானின் உயிரை திருப்பிக் கொடுத்து விட்டு அங்கிருந்து அகன்றார் எமதர்மன்.

சத்தியவானின் உயிரை சாவித்திரி மீண்டும் பெறுவதற்கு அவளுக்கு பெரும் உதவியாக இருந்தது, அவள் முறையாக கடைப்பிடித்து வந்த ‘காரடையான் நோன்பு’தான். அதனால் தான் இந்த விரதம் ‘சாவித்திரி விரதம்’ என்றும் பெயர்பெற்றது. இது காமாட்சி அம்மன் கடைப் பிடித்த விரதம் என்பதால் அது ‘காமாட்சி விரதம்’ என்றும் பெயரானது.

You may also like

Translate »